”எங்களுக்கு தேவையென்றால் யாருடைய ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம்” என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த ஜூலை 24, 2020 அன்று தொழிலதிபர் எலான் மஸ்க், பொலிவியா நாட்டைப் பற்றி குறிப்பிடும்போது ட்விட்டரில், “பொருளாதார சரிவினை எதிர்கொள்ள அரசாங்கம் அறிவித்துள்ள நிதித் தொகுப்புகள் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லை” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஒருவர் ”எது மக்கள் நலன் சார்ந்தது இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் லித்தியத்தை கைப்பற்றுவதற்காக அமெரிக்க அரசாங்கம் பொலிவியாவில் ஈவோ மொராலெஸ் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியினை செய்கிறது” என்று பதிவிட்டார்.
அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க் ”எங்களுக்கு தேவையென்றால் எந்த ஆட்சியையும் கவிழ்ப்போம், அதைக் கையாண்டு பாருங்கள்” என்று பதிவிட்டார். இது பொலிவியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் குறிப்பிடுவது பொலிவியாவின் அதிபரும், இடதுசாரி சார்புடையவருமான ஈவோ மொராலெஸ் சட்டவிரோதமாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதைத்தான். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் ஈவோ மொராலெஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பொலிவிய ராணுவத்துடன் அமெரிக்க அரசாங்கம் இணைந்து நடத்திய இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின் போது மொராலெஸ் மெக்சிகோவில் தஞ்சம் புகுந்தார். இப்போது அவர் அர்ஜெண்டினாவில் இருக்கிறார். இந்த நடவடிக்கையின் போது, நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
பொலிவியா நாடு உலகத்தின் மொத்த லித்தியத்தின் அளவில் 25 முதல் 45 சதவீதம் லித்தியம் படுகைகளைக் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் பேட்டரிகள் உருவாக்குவதற்கு லித்தியம் மிக முக்கியமான பொருளாகும்.
எலான் மஸ்க் நடத்தும் டெஸ்லா (Tesla) கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பேட்டரிகள் தயாரிப்பதற்கு லித்தியம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே அதனை குறைந்த விலையில் பொலிவியாவில் இருந்து எடுத்துக் கொள்வது எலான் மஸ்க்-கின் திட்டம். இந்த ஆண்டின் துவக்கத்தின் போது, எலான் மஸ்க்கின் நிறுவனம் பிரேசிலில் ஒரு கார் தொழிற்சாலையை துவங்க இருந்தது. அதற்கு பொலிவியாவின் லித்தியம் தேவைப்பட்டது.
பலநூறு ஆண்டுகளாக பொலிவியாவின் வளங்கள் அமெரிக்க மற்றும் இதர கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்பட்டு வருகின்றன. ஈவோ மொராலெஸ் கடந்த 14 ஆண்டுகளாக பொலிவியாவின் ஆட்சியில் இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ”பொலிவியாவின் வளங்கள் பொலிவிய மக்களுக்கே சொந்தம்” எனும் முடிவினைக் கொண்டு வந்தார். பொலிவிய வளங்களின் மீது வட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அறிவித்தார். பூர்வகுடி மற்றும் எளிய மக்களின் நண்பனாக ஈவோ மொராலெஸ் பார்க்கப்பட்டார். தேசியமயமாக்கப்பட்ட அவரது அறிவிப்புகளின் காரணமாக பொலிவியாவில் பசியின் விகிதம் குறைந்து, கல்வி அறிவு பெறுவோரின் விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பொலிவிய ராணுவத்திலுள்ள சில சக்திகளைப் பயன்படுத்தி, மொராலெஸின் ஆட்சியினை நவம்பர் 2019-ல் அமெரிக்கா கவிழ்த்தது.
மொராலெசை நீக்கிவிட்டு, ஜீனைன் அனெஸ் எனும் வலது சாரி பெண்மணி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். நவம்பர் 15, 2019 அன்று அவர் ஆட்சிக்கு வந்தவுடன் ராணுவத்திற்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கினார். மொராலெசின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். எல்லா அடக்குமுறைகளையும் கடந்து மக்களின் ஆதரவு மொராலெசின் கட்சிக்கு இருக்கிறது. அதன் காரணமாக தேர்தலைக் கூட நடத்தாமல் தவிர்த்து வருகிறார்கள்.
அந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் தன்னுடைய நலன் இருந்ததாக தற்போது எலான் மஸ்க் ஒப்புக் கொண்டிருக்கிறார். எலான் மஸ்க்கின் ட்வீட்டை படித்த பிறகு, அதற்கு பதிலளித்துள்ள ஈவோ மொராலெஸ், “மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் பொலிவியாவின் ஆட்சிக் கவிழ்ப்பைப் பற்றி பேசியிருக்கிறார், நாங்கள் எந்த ஆட்சியை வேண்டுமானாலும் கவிழ்ப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பொலிவியாவின் லித்தியத்தை எடுப்பதற்குத்தான், இரு மிகப் பெரும் படுகொலை நிகழ்வுகளை மேற்கொண்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரமாக இது இருக்கிறது. எங்கள் வளங்களை நாங்கள் எப்போதும் பாதுகாத்து நிற்போம்” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
பல்வேறு தடைகளையும் மீறி, தற்போது பொலிவியாவில் ஜனநாயகத்தினை மீட்டெடுக்க, அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராக எளிய உழைக்கும் மக்கள் ஜூலை 27, 2020 முதல் போராட்டங்களைத் துவக்கி உள்ளனர்.