மியூகோர்மைகோசிஸ்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் கரும்பூஞ்சை தொற்று

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களை மியூகோர்மைகோசிஸ் எனும் அரிய வகை கரும் பூஞ்சை தொற்று அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இத்தொற்றானது பலருக்கு தீவிர உடல் நலக்கோளாறை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு ஆகியவையும் நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இக்கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பலருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சிகிச்சை முடிந்து செல்வோரை தொடர்ந்து பின்பற்றி ஆய்வு செய்வதற்கான கால இடைவெளி இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மியூகோர்மைகோசிஸ் தொற்று என்பது என்ன? எப்படி ஏற்படுகிறது?

மியூகோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சை தொற்றானது அரிய வகை தொற்றாகும். இத்தொற்றுக்கான காரணிகள் பெரும்பாலும் ஈரமான பரப்புகளிலும், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களிலும், மாசடைந்த காற்றினிலும் காணப்படுகிறது. சாதாரண தொற்றாகத் துவங்கி மிகத் தீவிரத் தொற்றாக மாறும் இந்த மியூகோர்மைகோசிஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்குகிறது.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் இணை நோயாக சர்க்கரை நோயும் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அவருக்கு முகத்தில் உணர்விழப்பு ஏற்பட்டு, தோல் சிவந்து, கண்கள் வீங்கியுள்ளது. மேலும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவர் மியூகோர்மைகோசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு செலுத்தப்பட்டோர் மற்றும் ஆக்சிஜன் உதவி அளிக்கப்பட்டோர் பலருக்கு இத்தொற்று ஏற்பட்டு வருவதாக அரவிந்த் மருத்துவமனை மருத்துவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் ஏற்றப்படும்போது தூய்மையற்ற தண்ணீரைப் பயன்படுத்துதல்

சித்தரிப்புப் படம்

மருத்துவமனையில் ஆக்சிஜன் ஏற்றப்படும்போது ஆக்சிஜனை நீரேற்றம் செய்வதற்காக சிலிண்டரின் ஒரு பகுதியில் தண்ணீர் பயன்படுத்தப்படும். அதில் தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தாமல் தரமற்ற தண்ணீரைப் பயன்படுத்துவதால் இத்தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தரமில்லாத தண்ணீரைப் பயன்படுத்துவதால் ஆக்சிஜனை சுவாசிக்கும் நோயாளியின் மூக்கின் வழியாக மியூகோர்மைகோசிஸ் பூஞ்சைத் தொற்றுப் பரவல் ஏற்பட்டு, பின்னர் அது கண்ணை பாதித்து இறுதியில் மூளையை அடைகிறது.

இத்தொற்று தொடக்கத்திலேயே கண்டறியப்படாத பட்சத்தில் நிரந்தர கண்பார்வை இழப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தொற்று மூளையில் பரவிவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழப்பதும், திடீர் மாரடைப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. சில நேரங்களில் காது, தொண்டை போன்ற பகுதிகளையும் பாதிக்கிறது.

கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் ஏற்றப்படும்போது, ஆக்சிஜனேற்றியை தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரைக் கொண்டு நிரப்புவது என்பது மிக எளிமையான ஒரு விடயமே. ஆனால் கவனக்குறைவாக தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்தாதபட்சத்தில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தூய்மையான தண்ணீரை ஆக்சிஜன் பயன்பாட்டில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை உடனே மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது முக்கியமானது.

ஸ்டீராய்ட் பயன்பாடு

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்

மேலும் கொரோனா தொற்றாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக ஸ்டீராய்ட் பயன்படுத்தப்படுவதும் இத்தொற்றுக்கு மற்றொரு காரணமாகும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்ட் பயன்படுத்தும் போது இத்தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

11 பேருக்கு கண் நீக்கப்பட்டு விட்டது

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அக்‌ஷய் நாயர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், தான் பணிபுரியும் மூன்று மருத்துவமனைகளில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 40 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகளாகவும் இருக்கின்றனர். அவர்களில் 11 பேருக்கு அவர்களின் உயிரைக் காப்பதற்காக கண்ணை நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவலைக் கூறியுள்ளார். பெரும்பாலான நோயாளிகளுக்கு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 12 முதல் 15 நாட்களுக்குப் பிறகு இத்தொற்று தெரியவருவதாகக் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து அதிகரிக்கும் கரும்பூஞ்சைத் தொற்று

சித்தரிப்புப் படம்

இத்தொற்று உயிரைப் பறிக்கக் கூடிய மிகத் தீவிரமான தொற்று என்றும், ஆனால் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால் எளிதில் சரிசெய்யக் கூடிய தொற்று என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் மட்டும் கடந்த சில தினங்களில் 8 பேர் மியூகோர்மைகோசிஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நிர்வாகத் தலைவரான மதூர் சவானி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், தற்போது 50 நோயாளிகள் தங்கள் மருத்துவமனையில் மியூகோர்மைகோசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் 60 பேர் சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு மருத்துவமனையின் இயக்குநராக உள்ள மருத்துவர் தத்யாராவ் லஹானே பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் 200 நோயாளிகள் மியூகோர்மைகோசிஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது புதிய நோய்த்தொற்றல்ல, ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், மேலும் ஸ்டீராய்ட் பயன்பாட்டால் சர்க்கரை அளவு அதிகரிப்பதாலும் இத்தொற்று அதிகமாகப் பரவுவதாக அவர் கூறியுள்ளார்.

ICMR வெளியிட்டுள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

சித்தரிப்புப் படம்

மியூகோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சைத் தொற்று அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ICMR வெளியிட்டுள்ளது.

  • ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை தொடர்ச்சியாக கண்காணித்துவர வேண்டும்.
  • ஸ்டீராய்டினை தேவைப்படும்போது மட்டுமே, சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.
  • ஆக்சிஜன் ஏற்றும்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆண்டிபயாடிக் மருந்துகளை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • எந்த அறிகுறிகளையும் எக்காரணம் கொண்டும் அசட்டை செய்யக் கூடாது.
  • பூஞ்சைத் தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.
  • மியூகோர்மைகோசிஸ் தொற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு காலதாமதம் செய்யக் கூடாது.

மியூகோர்மைகோசிஸ் அறிகுறிகளாக ICMR வெளியிட்டிருப்பவை

  • மூக்கில் தொடர் அடைப்பு, மூக்கிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறுவது, கன்னத்தின் எலும்பில் வலி, முகத்தில் ஒரு பக்கமாக வலி, முகத்தில் உணர்வின்மை அல்லது வீக்கம்.
  • மூக்கு அல்லது வாயின் உட்புற மேல்பகுதியில் கரும் புள்ளிகள் அல்லது கருப்படைதல்.
  • பல் வலி, பல் விழுதல், தாடை வலி
  • பார்வை மங்குதல், இரட்டையாக தெரிதல், கண்களில் வலியுடன் காய்ச்சல், தோல் புண், ரத்தக்கட்டு.
  • மார்புவலி, இரும்பும்போது ரத்தம் வெளிப்படுதல், சுவாச அறிகுறிகள் மோசமடைதல்

தொற்றிலிருந்து காக்க மருத்துவர்கள் முன்வைப்பது

எவ்வளவு சீக்கிரமாக இத்தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிகிறோமோ அதுவே இத்தொற்றினை சரிசெய்வதினை எளிதாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனா நோயாளிகள் குணமடையும்போது அவர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் கரும்பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்ற பரிசோதனையை மேற்கொள்வதை அவசியமான நெறிமுறையாக வைத்திட வேண்டும். குறிப்பாக கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் மியூகோர்மைகோசிஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என நோயாளிகள் தொடர்ந்து கவனித்துவர வேண்டும். சிறிய சந்தேகம் இருந்தாலும்கூட மருத்துவர்களிடம் தெரிவித்தால் அவர்களால் தொற்று இருக்கிறதா என எளிமையாக கண்டுபிடித்துவிட முடியும். வாயிலும், மூக்கிலும் டார்ச் லைட் அடித்து பார்ப்பதன் மூலமே அங்கு ஏதேனும் கருப்பு அல்லது பழுப்பு நிற புள்ளிகள் இருக்கிறதா என்பதை வைத்து தொற்று இருக்கிறதா என்பதனை மருத்துவர்களால் கண்டறிந்துவிட முடியும்.

நமது சிறிய கவனக்குறைவும் கூட உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறிவிட முடியும். மியூகோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சை தொற்றுப் பரவல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே விரைவாக ஏற்படுத்திட வேண்டும்.

– விவேகானந்தன், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *