வி ஆர் கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்

வி ஆர் கிருஷ்ணய்யர் நினைவு நாள் சிறப்பு பதிவு

கேரளத்தின் பாலக்காட்டில் புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனான வி.ஆர்.கிருஷ்ணய்யர் , அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தி்ல் பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது.

கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், கோபத்துடன் இருந்த காவல் துறையினர், தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாக 1948 மே மாதத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணணூர் மத்திய சிறையில் அடைத்தனர். முப்பது நாட்கள் தடுப்பு காவலில் கிருஷ்ணய்யர் இருந்ததார். சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் நேரடியாக உணர்ந்தார். கைதிகளுக்கு கைவிலங்கு அணிவிப்பதை மனித உரிமை மீறல் என்று பின்னாளில் தீர்ப்பு அளிப்பதற்கும் அவரது சிறை அனுபவமே காரணமாக இருந்திருக்கும். இந்திய நீதித்துறை வரலாற்றில் சிறைக்கு சென்றுவந்த ஒரே உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மட்டுமே.

பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கபட்டு 1952 தேர்தலில் போட்டியிட்டபோது, வி. ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாண பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயல்சீமா மக்களுக்கு கஞ்சித்தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலை குறித்தும் சட்டமன்றத்தில் குரலெழுப்பினார்.

வரதட்சனைக்கு எதிராக சட்டம்

1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையில் நீர்வளம், சட்டம், நீதி, சிறைத்துறை மற்றும் உள்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார்.நாட்டிலேயே வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு முதல் முறையாக “வரதட்சணை ஒழிப்பு மசோதா 1957” சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பெருமையும் கிருஷ்ணய்யருக்கு உண்டு.

கல்லுரி மாணவர்களுடன் வி ஆர் கிருஷ்ணய்யர்

1965ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றபோது அரசியலில் இருந்து விலகி மீண்டும் வழக்கறிஞராக பணியாற்றினார். 1968ல் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீதிபதியான பின்பு, உதவியாளர் வெள்ளிச் செங்கோலை கொண்டு செல்லும் காலனி ஆதிக்கப் பழக்கத்தினை ஒழித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போதே மத்திய சட்டக்கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் கிருஸ்ணய்யர்

7.07.1973-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.  பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எந்த ஒரு குடிமகனும் வழக்கு தொடுக்கலாம் என்ற நிலையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களும் பகவதி அவர்களும் பொதுநல வழக்காடுதல் என்ற புதிய முறையை நீதித்துறை வரலாற்றில் உருவாக்கி சாதனை படைத்தார்கள்..

நீதிமன்றத்தின் ஒரு தனி நீதிபதிக்கு எழுதக்கூடிய கடிதங்களை ரிட் எனப்படும் நீதிபேராணை மனுக்களாக மாற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற முறையையும் முதல் முதலாக தோற்றுவித்தார்..

ஒரு தனிமனிதரின் சுதந்திரம் போலிசாரால் பறிக்கப்படும்போது நீதிமன்றம் அதனை குறித்த காலத்தில் விசாரிக்கவில்லை என்றால், அது பலரது சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று தனது தீர்ப்பில் எழுதினார்.

1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் முன் விசாரணைக்கு வந்தது. இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. சின்னப்பரெட்டி தனது புத்தகத்தில் கிருஷ்ணய்யர் பற்றி சொல்லும்போது “நிராயுதபாணிகளுக்காக துடிக்கும் ஓர் இதயம்” என்று பெருமையாக பதிவு செய்துள்ளார்.

மரணதண்டனைக்கு எதிரான குரல்

கூடங்குளம் அணு உலையை செயல்பட அனுமதிக்க கூடாது என்று பிரதமருக்கும் தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியவர். இடஒதுக்கீடை தீவிரமாக ஆதரித்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை கிருஷ்ணய்யர் வலுப்பெற செய்தார்.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையினரின் மனித உரிமை மீறல்களில் பாதிக்கபட்டவர்களுக்காக, 1996ல் பழங்குடி மக்கள் நல சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டபோது வழக்கினை நடத்துவதற்கான விதி இல்லை என்று சொல்லப்பட்டது. 11.11.1996ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு கிருஷ்ணய்யர் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தினை பெற்ற அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ. சாமி அவர்கள் பழங்குடி மக்கள் நல சங்கம் தாக்கல் செய்த மனுவினை மனிதஉரிமை, நீதிமன்றங்களின் நோக்கம், அதிகார வரம்பு, செயல்பாட்டின் தன்மை ஆகியவை குறித்து திட்டவட்டமாக வரையறுக்க விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

அற்புதம் அம்மா வி ஆர் கிருஷ்ணய்யரை சந்தித்த கோப்பு படம்

100வது வயதிலும் “தூக்கு தண்டனைக்கு தூக்கு அளிக்க வேண்டும்” என்றும், “தூக்கு தண்டனை வழங்கப்படுதல் மனித உரிமைக்கு எதிரான தீர்ப்பு” என்றும் கூறிவந்தார். சுமார் 20 வருடங்கள் சிறையில் வாடும் பேரறிவாளனை விடுவிக்க அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு அப்போதைய முதல்வருக்கும், ஆளுநருக்கும் கடிதங்களை எழுதினார்.

உடல்நல குறைவால் 2014, நவம்பர் 24 அன்று கொச்சியிலுள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழந்தது, மூச்சுக்குழலழற்சி போன்றவற்றால் டிசம்பர் 4 2014 அன்று காலமானார.

இந்திய நீதித்துறை வரலாற்றில்  எளிய மக்களுக்காக ஒலித்த அரிதான குரல்களில் முதன்மையானது  வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *