ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது.
கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் ‘ஆய்வக இறைச்சி விற்பனை அனுமதி’ இருக்கப் போகிறது. தனது உணவுத் தேவைக்கு இறக்குமதியை வெகுவாக நம்பியிருந்த சிங்கப்பூருக்கு கொரோனா பெருந்தொற்று முடக்கம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் சிங்கப்பூர், தனது 58 லட்ச மக்கள் தொகைக்கான உணவுத் தேவையின் 90 சதவீதத்தத்தை இறக்குமதி சார்ந்தே உள்ளது.
உணவு தன்னிறைவு நோக்கி சிங்கப்பூர்
கொரோனா தந்த படிப்பினையின் காரனமாக தன் நாட்டின் உணவுத் தேவையை தாமே உற்பத்தி செய்தி கொள்வது என சிங்கப்பூர் முடிவெடுத்தது. 2030க்குள் சிங்கப்பூர் மக்களின் உணவுத் தேவையில் 30 சதவீதத்தை தாமே உற்பத்தி செய்வது என தீர்மானித்திருக்கிறது. விவசாய உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரின் இறைச்சித் தேவையை நிறைவு செய்வதற்காக ஆய்வக இறைச்சியை விற்பனைக்கு அனுமதித்துள்ளது. இதற்கான அனுமதியை ஈட் ஜஸ்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
ஈட் ஜஸ்ட் நிறுவனம் அமெரிக்காவின் சான் பிரான்ஸ்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இறைச்சி மற்றும் முட்டை வனிகத்தில் ஈடுபட்டு வரும் ஈட் ஜஸ்ட் நிறுவனம் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை உலகளவில் சந்தைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. முன்னதாக இந்நிறுவனம் செயற்கை முட்டை விற்பனை செய்தது. செயற்கை முறையில் உருவாக்கப்படும் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருக்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தது. தற்போது இந்நிறுவனம் விலங்கின் உடலிலிருந்து பெறப்பட்ட அணு மூலம் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆய்வக இறைச்சி விற்பனைக்கான உற்பத்தி சாலையை சிங்கப்பூரில் தொடங்க இருக்கிறது.
தென்- கிழக்கு ஆசியாவில் விரிவாக்கம்
சிங்கப்பூரில் ஆய்வக இறைச்சி உற்பத்தி நிலையத்தை அமைப்பதன் மூலம் முதன் முதலாக தென்- கிழக்கு ஆசியாவில் தனது வனிகத்தை தொடங்கியிருக்கிறது ஈட் ஜஸ்ட் நிறுவனம்.
ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இந்த இறைச்சி, கோழியின் இறைச்சியைப் போன்றே சுவையும், தன்மையும் கொண்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஆய்வக உற்பத்தி இறைச்சியானது, ‘உயிர் கொல்லாமையால் விளைந்த மற்றும் சூழலியலுக்கு பாதுகாப்பான இறைச்சி’ என விற்பனை விளம்பரம் செய்யப்படுகிறது.
புரதச் சத்து தேவையில் இறைச்சி உணவுகள் இன்றியமையாதவை. சில பத்தாண்டுகளுக்கு முன்பான நிலையை கணக்கிடும் பொழுது, இறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகம் உண்ணப்படும் இறைச்சி வகையாக பன்றி இறைச்சியும், அதற்கடுத்தாற் போல் கோழி இறைச்சியும் உள்ளன. அதிலும் குறைந்த விலையிலுள்ள மற்றும் மக்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சி உணவாக கோழி இறைச்சி உள்ளது. வளர்ந்து வரும் இறைச்சித் தேவையின் சந்தையை கணக்கில் கொண்டு உருவாகியிருக்கும் இந்த ஆய்வக (கோழி) இறைச்சி, இறைச்சி சந்தையில் (Livestock Market) பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சந்தைத் தேவையை நோக்கமாக கொண்டு குறுகிய காலத்தில் அதிக எடையுடன் வளரும் கறிக் கோழி (பிராய்லர்) இறைச்சி உற்பத்தி கொண்டுவரப்பட்டது. குறுகிய கால/ அதீத எடைக்காக கறிக் கோழிகளுக்கு
செயற்கையான முறையில் நுன்னூட்டங்கள் வழங்கப்பட்டன. அதன் காரனமாக குறிப்பிட்ட கறிக் கோழிகளை உண்ணுபவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளிரளம் பருவத்தினருக்கு உடற்கூறு செயல்பாட்டினில் பாதிப்பை உருவாக்குவதாக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் கோழியே அல்லாத, ஆய்வகத்தில் உருவாக்கப்படும் கோழி இறைச்சி, அதனை உட்கொள்ளும் மனிதர்களிடத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கேள்வியெழுகிறது.
மேலும் இந்த ஆய்வக இறைச்சி உற்பத்தி விவசாயிகளுக்கு எதிரானதாக அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது இறைச்சி சந்தையில் பெரு நிறுவனங்கள் இருப்பினும், அவை பெருமளவு விவசாயிகளை சார்ந்துள்ளன. அத்தகைய நிலையை ஆய்வக இறைச்சி உற்பத்தியானது மாற்றுகின்ற நிலை வரலாம். விவசாயிகளினுடைய கால்நடை உற்பத்தி சந்தையை பெரும் முதலாளிகள், தங்களின் ஆய்வக இறைச்சி உற்பத்தி மூலம் கைப்பற்றக்கூடும்.