36 ஆண்டுகள் கழித்தும் ஆறாத போபால் பேரழிப்பின் வடு

டிசம்பர் 2, 1984 அன்று இரவு, மத்தியப்பிரதேச மாநிலம் போபால்-இல் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெத்தில் ஐசோசயனைட் (MIC-Methylicocyanide) எனும் ரசாயனம் போபால் நகரத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட முதல் பெரிய தொழில்துறைப் பேரழிவான இது 15,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றதோடு 600,000-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்தது. இந்நிறுவனம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இன்றுவரை மக்கள் பாதிக்கப்பட்டு மீளமுடியாத துன்பத்தில் இருந்து வருகிறார்கள்.

1969-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட யூனியன் கார்பைட் தொழிற்சாலை ‘செவின்’ (sevin) எனும் ஒரு பூச்சிக்கொல்லி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ‘செவின்’ பூச்சிக்கொல்லியை தயாரிக்க மெத்தில் ஐசோசயனைட் ரசாயனத்தை ஒரு இடைநிலை மூலக்கூறாக பயன்படுத்தி யூனியன் கார்பைட் தயாரித்து வந்தது.

மீதில் ஐசோசயனைட் கசிந்தது எப்படி

யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் மூன்று 68,000 லிட்டர் சேமிப்புத் தொட்டிகள் (E610, E611, and E619) வைக்கப்பட்டு, அதில் மெத்தில் ஐசோசயனேட் சேமிக்கப்பட்டு வந்தது.

மெத்தில் ஐசோசயனேட் வைத்திருக்கும் தொட்டிகளை 50% அளவிற்கும் அதிகமாக அவற்றை நிரப்பக் கூடாது. மேலும் தொட்டியினுள் எந்த வித இரசாயன மாற்றமும் நடைபெறாமல் இருக்க நைட்ரஜன் வாயு தொடர்ச்சியாக செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இந்த நைட்ரஜன் வாயுவின் அழுத்தத்தை வைத்துதான் ஒவ்வொரு தொட்டியிலிருந்தும் மெத்தில் ஐசோசயனைட் (எம்.ஐ.சி) வெளியேற்றப்படும். 

சம்பவம் நடந்த நாள் அன்று ஒரு தொட்டியில் (E610) நைட்ரஜன் வாயு செலுத்தப்படுவது நின்றுபோனதால் மெத்தில் ஐசோசயனேடை அந்த தொட்டியில் இருந்து வெளியேற்ற முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தொட்டியிலும் 30 டன் அளவிலான மெத்தில் ஐசோசயனேட்டை மட்டுமே சேமிக்க அனுமதிக்கப்பட்ட சூழலில் அன்று 42 டன் அளவுக்கு தொட்டி நிரம்பியது.

மீண்டும் இத்தொட்டியை இயக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்தன. அந்நேரத்தில் தொழிற்சாலையின் பெரும்பாலான பாதுகாப்பு செயல்முறைகள் அனைத்தும் சரியாக செயல்படவில்லை.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி செயலிழந்த தொட்டியினுள்  தண்ணீர் நுழைந்ததைத் தொடர்ந்து ரசாயன எதிர்வினை ஏற்பட்டு தொட்டியின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கட்டுப்படுத்த முடியாத நிலையைத் தாண்டிய பின் சேமிப்புத் தொட்டிகளில் இருந்த சுமார் 30 டன் மெத்தில் ஐசோசயனைட் போபால் நகரத்தினுள் வெளியேறியது.

போபால் நகரில் ஏற்படுத்திய தாக்கம்

கசிந்த மெத்தில் ஐசோசயனைட் வாயு 15,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதோடு 600,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மக்களை பாதித்தது. மெத்தில் ஐசோசயனைட் தாக்கத்திற்கு ஏற்ற முறையான சிகிச்சை முறைகள் குறித்து அப்பொழுது மருத்துவர்கள் அறிந்திராத காரணத்தால் பாதிப்பு இன்னும் தீவிரமானது. மக்கள் வீதிகளில் ஓடி, வாந்தி எடுத்து இறந்து கொண்டிருந்தனர். நகரில் புதைப்பதற்கு இடமில்லாத சூழல் நிலவியது.

இந்த விபத்தைத் தொடர்ந்து போபால் நகரில் கருக்கலைப்பு 300% மற்றும் கைகுழந்தை இறப்பு விகிதம் 200% வரை அதிகரித்தது. மேலும் பல மரங்கள் மற்றும் விலங்குகள் என இயற்கை சூழலையும் சீரழித்தது. 

விபத்து நடந்த ஓரிரு நாட்களில், அருகிலுள்ள பகுதிகளில் இருந்த மரங்கள் அனைத்தும் பெரும்பாலும் பட்டுப் போயின. சாலைகளில் துர்நாற்றம் வீசும் இறந்த விலங்குகளின் சடலங்கள் நிரம்பி வழிந்தது . 

போபால் சம்பவமும் அரசாங்கத்தின் நடவடிக்கையும்

மார்ச் 1985-ல் அரசாங்கம் ‘போபால் விசவாயு கசிவு சட்டம்’ எனும் சட்டம் ஒன்றை  நிறைவேற்றியது. இச்சட்டத்தின் மூலமாகத் தான் அரசு பாதிக்கபட்ட மக்களின் பிரதிநிதியாக வழக்காடத் தொடங்கியது. 

யூனியன் கார்பைடு நிறுவனம் ஆரம்பத்தில் 5 மில்லியன் டாலர் நிவாரணத்  தொகை வழங்க சம்மதித்தது. அரசாங்கம் இதை நிராகரித்து 3.3 பில்லியன் டாலர்கள் கோரியது. ஆனால் பிப்ரவரி 1989-ல் நீதிமன்ற வரம்புகளுக்கு வெளியே 470 மில்லியன் டாலர்களை செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1,00,000-300,000 வழங்கப்பட வேண்டும் எனவும் விபத்தினால் உடல் ஊனமானவர்களுக்கு ரூ .50,000-500,000 மற்றும் சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ .25,000-1,00,000 வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பணத்தை கொடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.

மேலும் யூனியன் கார்பைடு நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போபாலில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு நிதியளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஜூன் 2010-ல் அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியதற்காக யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு முன்னாள் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் பிணையில் சில நாட்களிலேயே வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

விஷவாயு கசிவு ஏற்பட்ட 30 ஆண்டுகளுக்கு மேல்

டவ் கெமிக்கல் நிறுவனம் யூனியன் கார்பைடு நிறுவனத்தை 2001 ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.அதன்பிறகு, யூனியன் கார்பைடு நிறுவனம் ஏற்படுத்திய பாதிப்புக்கும் தற்போது உள்ள டவ் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டவ் நிறுவனம் தெரிவித்து வந்தது.

இங்க்ரிட் எக்கர்மேன் போபால் விஷவாயு கசிவு குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில்,

“மரணம் ஏற்பட்டு இருந்தால் கூட பெரிய நிம்மதியாக இருந்திருக்கும். தப்பிப்பிழைத்து உயிர் வாழ்வது மிகவும் மோசமானது ”. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் வழக்கு இன்னும் முடியவில்லை. போபால் விசவாயுக் கசிவில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கானோர் இன்றும் தொடர்ந்து தேவையான சுகாதார வசதிகளை பெறமுடியாத சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிற்சாலை மூடப்பட்ட பிறகும், உள்ளே எஞ்சியவை சீல் வைக்கப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டன. விசவாயுவால் பாதிக்கப்பட்டவர்களின் நல அமைப்புகள் பல ஆண்டுகளாக அத்தொழிற்சாலையை அகற்றக் கோரி போராடி வருகின்றன. ஆலையின் 400 டன் அளவிலான கழிவுகளை அகற்ற கோரி பல வழக்குகள் இன்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக, விஷவாயு தாக்கி உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்து இருந்தார்.

மெத்தில் ஐசோசயனேட் (எம்ஐசி) என்றால் என்ன?

மெத்தில் ஐசோசயனேட் என்பது பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் திரவமாகும். இந்த ரசாயனம் வெப்பமடையும்போது அதீதமாக வினைபுரியும் தன்மையுடையதாகும். இதில் தண்ணீர் சேரும்போது பெருமளவில் ​வெப்ப எதிர்வினை ஏற்படுகிறது. 

மெத்தில் ஐசோசயனைட் தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை. இருப்பினும் இது சில பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வர்ஜீனாவின் உள்ள பேயர் கிராப் சயின்ஸ் ஆலை மட்டுமே தற்போது உலகில் உள்ள ஒரே மெத்தில் ஐசோசயனேட் சேமிப்புக் கிடங்காகும்.

மெத்தில் ஐசோசயனைட் ரசாயனம் ஏற்படுத்தும் தாக்கம்

ஆறாத புண்கள், சுவாசப் பிரச்சினைகள், பசியற்ற தன்மை, தொடர் வயிற்று வலி, மரபணு பிரச்சினை, நரம்பணுக்கள், செவி மற்றும் பார்வை திறன் பலவீனமாவது போன்ற  பல பிரச்சனைகள் குறுகிய காலத்தில் ஏற்படுத்தும்

நீண்டகால சுகாதார விளைவுகளாக நாள்பட்ட வெண்படல ஒவ்வாமை, நுரையீரல் செயல்பாடு குறைதல், கர்ப்பம் ஏற்படுவதில் பிரச்சனை, பிறந்த குழந்தை இறப்பது போன்று பல பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *