விவசாய தலைவர்கள்

விவசாயப் போராட்டத்தை நடத்தும் தலைவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நரேந்திர மோடி அரசாங்கத்தின் விவசாய சட்டங்களுக்கு எதிரான தற்போதைய போராட்டத்திற்கு தலைமை தாங்கும் விவசாயத் தலைவர்களாக மருத்துவர், ராணுவ வீரர், அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் என்று படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் விவசாயத்தை  முதன்மையாக கொண்டவர்கள்.

விவசாயிகளின் அமைப்புகளின் தலைவர்கள், போராட்டக்காரர்களை அணிதிரட்டுவதற்கும், போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைப்பதற்கும் கைகோர்த்துள்ளனர்.

இவர்களில் ஜக்மோகன் சிங் பாட்டியாலா, ஜோகிந்தர் சிங் உக்ரஹான், பால்பீர் சிங் ராஜேவால் மற்றும் மருத்துவர் தர்ஷன் பால் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

ஜக்மோகன் சிங் பட்டியாலா

64 வயதான பாட்டியாலா, பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் பஞ்சாப் அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறையில் பணியாற்றியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலை துறந்து விட்டு முழுநேர விவசாயியானார். முன்னர் பாரதிய கிசான் யூனியன் ஏக்தா அமைப்பில் செயல்பாட்டார். பின்னர் அதிலிருந்து பிரிந்து Bharti Kisan Union Ekta (Dakaunda)  எனும் புதிய அமைப்பை தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றினார். 

பாட்டியாலா ஜூன் மாத தொடக்கத்தில் மூன்று  சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. விவசாய சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றப்படுவதற்கு மூன்று மாதங்கள் முன்னரே 10 உழவர் அமைப்புகள் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) பதாகையின் கீழ் கூட்டுக் கூட்டத்தை நடத்தினர். அதில் சட்டங்களின் விதிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று முடிவு செய்தனர்.

 பாட்டியாலா மற்றும் அவரது அமைப்பின் தலைவர் பூட்டா சிங் புர்ஜ் கில் இணைந்து ஒரு வல்லமைமிக்க  போராட்டக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் அவர்களது அமைப்பு ஏற்கனவே விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் உழவர் தற்கொலை வழக்குகளில் இழப்பீடு போன்ற விஷயங்களில் முன்னணி குரலாக இருந்து வருகிறது.

31 விவசாயிகள் குழுக்களை AIKSCC-ன் குடையின் கீழ் கொண்டுவந்தது இவரது முக்கியப் பணியாகும். மேலும் இந்த குழு தான் செப்டம்பர் முதல் போராட்டங்களில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜொகிந்தர் சிங் உக்ரஹான்

75 வயதான உக்ரஹான் பஞ்சாபில் மிகப் பிரபலமான மற்றும் துடிப்புமிக்க  விவசாய சங்கங்களில் ஒன்றான பி.கே.யூ ஏக்தா உக்ரஹானுக்கு தலைமை தாங்குகிறார். பெரும்பாலான உழவர் பிரச்சினைகளில் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தலைவராக இருக்கிறார். மால்வா பிராந்தியத்தில் இவர் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக இவர் இருக்கிறார்.

உக்ரஹான் இராணுவத்தில் இருந்து, ஓய்வுக்குப் பிறகு விவசாயத்திற்குத் திரும்பினார். மேலும் 2002-ம் ஆண்டில் பி.கே.யு உக்ரஹான் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கினார். 

பி.கே.யு உக்ரஹான் தற்போதைய போராட்டத்திற்கு தலைமை தாங்கும் 31 அமைப்புகளில் இல்லை. ஆனால் பஞ்சாபில் அதற்கு இணையான போராட்டங்களை நடத்தி வருகிறார். செப்டம்பர் மாதம் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பாட்டியாலா இல்லத்திற்கு வெளியே உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியதில் இவரின் பங்கு முக்கியமானது. முன்னாள் ஆசிரியரும், பி.கே.யு உக்ரஹான் அமைப்பின் பொதுச் செயலாளருமான சுக்தேவ் சிங் கோக்ரிகலன் தலைமையிலான குழுவானது ரயில் மறியல் போராட்டம், பாஜக தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தல் என பஞ்சாபில் நடந்த போராட்டங்களில் பல நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

 போராட்டக்குழுவில் இல்லை என்றாலும் அவர்களின் திட்டம் பெரும்பாலும் AIKSCC-ன் கீழ் உள்ள 31 அமைப்புகளுடன் ஒருங்கிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பல்பிர் சிங் ராஜேவால்

77 வயதான ராஜேவால் பஞ்சாபில் நன்கு அறியப்பட்ட நபர். 1990-களில் அவர் பஞ்சாபில் ஒரு விவசாய சங்கத்தை உருவாக்கி  தலைமை தாங்கினார். பி.கே.யுவின் அரசியலமைப்பை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

அவரது பரந்த அனுபவமும், பஞ்சாபில் விவசாயத்தைப் பற்றிய ஆழமான அறிவும் அவரை இந்த போராட்டத்தின் கருத்தியல் வழிகாட்டியாக மாற்றியுள்ளது.

விவசாயிகளின் பிரச்சனைகளை அவர் தெளிவாகப் பேசுவது மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையின் போது ஒரு பலமாகக் கருதப்படுகிறது. 31 தொழிற்சங்கங்களின் கூட்டங்களின் போது அவர்களுக்கு இடையில் தோன்றிய மாறுபட்ட கருத்துக்களை ஒன்றிணைப்பதையும், எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துவதிலும் இவரது பங்கு முக்கியமானது. அவரது முதிர்ச்சியான அனுபவம் இதற்கு காரணமாகும். இந்த போராட்டத்திற்கான கோரிக்கைகளை வடிவமைத்ததில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

அகாலி தளம் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் நெருக்கமாகக் கருதப்பட்டவர். குறிப்பாக விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுப்பதில் ராஜேவால் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கும், அகாலி தளதிற்கும் வழிகாட்டினார். இருந்தபோதும் எந்தவொரு கட்சியிலிருந்தும் எந்தவொரு அரசியல் பதவியையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் தர்சன் பால்

மருத்துவ நிபுணர் பால் 70 வயதானவர்  தற்போதைய போராட்டத்தில்  பின்னணியில் ஒருங்கிணைப்புப் பணியை செய்யும் இவர் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய சக்தியாகும். பல ஆண்டுகளாக விவசாயக் கடன் தள்ளுபடிக்காகப் போராடி வரும், கிரந்திகாரி கிசான் யூனியனின் தலைவராக உள்ளார். ஜூன் மாதத்தில் மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த முதல் சில அமைப்புகளில் இவருடையதும் ஒன்று.

போராட்டத்திற்காக 31 அமைப்புகளை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்த விவசாயத் தலைவர்களில் டாக்டர் தர்ஷன் பாலும் ஒருவர். இப்போது இந்த குழுவிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் பங்கு வகிக்கிறார். 

பால் தனது மருத்துவர் வேலையை விட்டுவிட்டு 2002-ல் தனது குடும்பத்திற்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். அவர் 2016-ல் கிராண்டிகாரி கிசான் யூனியனில் சேருவதற்கு முன்பு பி.கே.யு-வின் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்த ஆண்டு அதன் மாநிலத் தலைவராகப் பதவியேற்கிறார்.

ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு பஞ்சாபைத் தாண்டிய போராட்டத்தை எடுத்துச் செல்வதில் பால் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

சட்னம் சிங் பன்னு

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர், 65 வயதான  பன்னு,  நிலமற்ற தொழிலாளர்களின் போராடும் தலைவர் ஆவார்.  பன்னுவின் அமைப்பு  2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து, மஜா (எல்லை மாவட்டங்கள்) முதல் தோபா மற்றும் மால்வா என பல பகுதிகளுக்கு பரவியுள்ளது.

பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தருடன் சேர்ந்து, கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவை பன்னு உருவாக்கினார். போராட்டங்களின் தீவிரத்தில் பி.கே.யூ உக்ராஹனுடன் ஒப்பிடக்கூடியதாக அந்த அமைப்பு வளர்ந்தது. இந்த குழு கிராம மற்றும் தொகுதி ரீதியான வலுவான கிளைகளை உருவாக்கியுள்ளது. மேலும் பெண்களும், இளைஞர்களும் இந்த அமைப்பின் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர்.

பன்னுவிற்கு சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அது அவரது மகன்களால் விவசாயம் செய்யப்படுகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்கும் 31 கூட்டுக் குழுவில் இவரது அமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் இணைக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 

நவம்பர் 23 அன்று ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெற்ற பின்னரும் அவரது அமைப்பின் உறுப்பினர்கள் ஜான்டியாலாவில் ரயில் தடங்களில் அமர்ந்தனர். இருப்பினும் அவர்கள் தில்லிக்கு  எதிர்ப்பை வழி நடத்த அந்த  போராட்டத்தை கைவிட்டார். இவரது அமைப்பும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

இளம் தலைவர்கள்

கீர்த்தி கிசான் யூனியனின் இளைஞர் பிரிவின் 35 வயதான மாநில பொறுப்பாளர் பூபிந்தர் சிங் லாங்கோவால் போன்ற சில இளம் தலைவர்கள் தோன்றுவதற்கும் விவசாயிகள் போராட்டம் களம் அமைத்துள்ளது.

இந்த போராட்டத்தில் கிராமப்புற இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு லாங்கோவலும் அவரது இளைஞர்கள் குழுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. லாங்கோவால் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டதாரி ஆவார். மேலும் பஞ்சாப் மாணவர் சங்கத்திலும், கீர்த்தி கிசான் யூனியனில் சேருவதற்கு முன்பு சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்த இடதுசாரி அமைப்பான நவஜவன் பாரத் சபையிலும் உறுப்பினராக இருந்தார்.

மேலும் இளம் தலைவர்களாக இருக்கும் ருல்டு சிங் மான்சா தலைமையிலான கிசான் மோர்ச்சாவின் உறுப்பினர்களும், ஜக்ஜித் சிங் தல்லேவால் மற்றும் ஹர்மீத் சிங் கடியன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *