வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இரண்டு இடங்களில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன் படி நேற்று திரிகோணமலையில் கரையை கடந்தது. மீண்டும் பாம்பனிலிருந்து 110 கி.மீ., தூரத்திலும், குமரியிலிருந்து 310 கி.மீ தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த முறை அது தமிழகத்தில் கரையை கடக்கும். குறிப்பாக பாம்பன் – கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அதே போல வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யததில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது
புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் அளவு கூடியுள்ளதால் மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 7,605 ஏரி, குளங்கள் உள்ளது. இதில் 979 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஆறு, குளங்களை கண்காணிக்க அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குளங்கள் நிரம்பினால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை இன்றும், நாளையும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள்.
பாம்பனில் 70 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். புயலின்போது தேவை ஏற்பட்டால் மின்சாரம் நிறுத்தப்படும்.
தற்போதைய புரெவி புயல் காரணமாக ராமநாதபுரத்தில் 44 நிவாரண முகாம்களில் 1200 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 முகாம்களில் 150 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் காரணமாக கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் கொடைக்கானல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.