ஒன்றிய அரசினால் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து கடந்த 15 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். பெரும்பாலான எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் டிசம்பர் 8 அன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முழு அடைப்பும் நடைபெற்றது.
நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் அவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டத்தின் போதும் முஸ்லிம்கள் இப்படித்தான் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்றும், ஆனால் அதில் அவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை என்றும், தற்போது விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாகவும் பேசியுள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் என்று மற்றொரு முத்திரை
மேலும் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு பின்னால் காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் இருப்பதாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பி வருகின்றனர்.
விவசாயிகள் இவ்வளவு தீவிரமாக போராட்டங்கள் நடத்தி வரும் போதிலும், விவசாயிகளை சந்திக்காமல் விவசாய சட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
உள்துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் விவசாய சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வேண்டும் என்பது மட்டுமே தங்களின் கோரிக்கை, எந்த திருத்தத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.
அரசின் கொள்கைகளை கொள்கைகளை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகளாக சித்தரிக்கும் பாஜக-வின் கலாச்சாரம்
அரசின் எந்த கொள்கையினை மக்கள் கேள்வி கேட்டாலும், அதற்கு பதிலளிக்க முயலாமல், அதற்குப் பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக ஒரு அடையாளத்தினை திணிப்பது பாஜகவின் அரசியல் கலாச்சாரமாகவே இருக்கிறது. அரசின் கொள்கைகளை மக்கள் கேள்வி கேட்பதை தேச துரோகமாகவே தங்கள் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.
மக்கள் போராடுவதை எந்த ஆதாரமும் காண்பிக்காமல் அந்நிய சதியாக சித்தரிக்க முயல்வது எப்படி ஒரு நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும்? கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அத்தனை போராட்டங்களுக்கும் தேச விரோத முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.
- 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிய போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒசாமா பின்லேடன் படங்களை வைத்திருந்ததாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் பேசினர். பின்னர் அதையே சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் முன்வைத்தார்.
- அதைத் தொடர்ந்து நடைபெற்ற நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எதிர்ப்பு போராட்டம் என பலவற்றிலும் பங்கேற்றவர்களுக்கு ஆன்டி இந்தியன் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது.
- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்களை சீனாவிடம் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என பரப்பப்பட்டது.
- பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ்நாடு தேசவிரோதிகளின் புகலிடமாக இருக்கிறது என்று பேசினார்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களைப் பார்த்து ”பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்று பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் சதீஷ் கெளதம் பேசினார்.
- ஷாகின்பாக்கில் நடைபெற்ற CAA எதிர்ப்பு போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானின் சதி இருப்பதாக பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவிட்டார்.
- டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பாஜகவின் கொள்கைகளை எதிர்த்து மாணவர்கள் போராடியதால், தேசவிரோதிகளின் புகலிடமாக அப்பல்கலைக்கழகம் இருப்பதாக முத்திரை குத்தினர்.
- பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துவந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு ‘அர்பன் நக்சல்ஸ்’ என்ற புதிய பெயரினை சூட்டினர். பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள் மீது ஊபா வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் வெளியில் வர முடியாமல் சிறையில் இருக்கிறார்கள். சிறையில் அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது.
கேள்வி கேட்பதையும், போராட்டங்கள் நடத்துவதையும் தேசவிரோதமாகவும், அந்நிய சதியாகவும் சித்தரிப்பது நாட்டின் நலனிற்கோ, ஜனநாயகத்திற்கோ ஏற்றதல்ல என்று பல்வேறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மோடி அரசுக்கு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.
பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட உள்ள விவசாயிகள்
தற்போது இந்த பாகிஸ்தான் சதி எனும் பாஜகவின் பிராண்டிங் தற்போது விவசாயிகள் போராட்டம் வரை வந்து நிற்கிறது. அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர் ஹனான் மோலா பாஜக அமைச்சரின் இந்த கருத்து விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பஞ்சாபின் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்), ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வரவர ராவ், சுதா பரத்வாஜ், கெளதம் நவ்லகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
விவசாய சட்டங்களை கருப்பு சட்டங்கள் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அவற்றைத் திரும்பப் பெறாமல் போராட்டம் முடிவுக்கு வராது என்பதை விவசாய சங்கங்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. வரும் டிசம்பர் 14 அன்று நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முகப்புப் படம்: படத்தில் அமித்ஷாவிற்கு அருகில் அமர்ந்திருப்பவர் ராவ்சாகேப் தான்வே