வா.செ.குழந்தைசாமி

அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்துடன் வளர இவரே காரணம்!

வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

கரூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரையிலுள்ள வாங்கலாம்பாளையத்தில் 14.7.1929 அன்று பிறந்தவர் வா.செ.குழந்தைசாமி. 

காரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். 

நீர்வளத்துறை ஆய்வு

அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை ஆய்விலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு ’குழந்தைசாமி மாதிரியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராய்

பிறகு தமிழகம் திரும்பி, சென்னை கிண்டி பொறியியற் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக ஆய்வுப்பணி மற்றும் கற்பித்தலை மேற்கொண்டார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பை சிறப்பாகச் செய்தார். அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 

அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது துணைவேந்தர்

சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரிகளைப் பிரித்துத் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அவர் துணைவேந்தரான போது, இது வெற்றி பெறுமா என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது. ஆனால் மூன்று முறை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து அது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று பெயர் பெறும் அளவுக்கு அதை வளர்த்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக தலைமையேற்று அந்த நிறுவனத்தையும் வளப்படுத்தினார்.

அதனால் தான் ’துணைவேந்தர்களுக்கெல்லாம் துணைவேந்தர்’ என்று மாணவர்களாலும், பேராசிரியர்களாலும் அழைக்கப்பெற்றார்.

விருதுகள்

தொழில்நுட்பத்துறைகளிலும், கல்விப் புலத்திலும் இவரது பணிகளுக்காக 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2002-ல் பத்மபூஷன் விருதையும் வழங்கினார்கள்.

இந்தியாவிலும் மற்ற காமன்வெல்த் நாடுகளிலும் தொலைதூரக் கல்வி, திறந்தநிலைக் கல்வி ஆகியவற்றுக்கு இவரது தலைமையில் நிகழ்ந்த பணிகளைப் பாராட்டி 1999-ல் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பும் இவருக்கு விருது வழங்கியது.

தமிழ்ப்பணி

பேரா வா.செ.குழந்தைசாமி பெருந்தமிழறிஞர் தேவநேயப் பாவாணரிடம் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிஞர் குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைகளையும், பல கட்டுரைகளையும் அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். 

அறிவியல் தமிழ், வாழும் வள்ளுவம், இது கல்வி யுகம், செம்மொழிகளின் வரிசையில் தமிழ் ஆகிய நூல்கள் இவரின் தமிழுக்கான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாகும் .

’வாழும் வள்ளுவம்’ நூலுக்காக 1988-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றார். ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசு திருவள்ளுவர் விருது வழங்கியது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்

தமிழை செம்மொழியாக இந்திய அரசு அறிவித்ததில் இவரது பங்கு முக்கியனானது. இவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் கூட.

”தந்தை பெரியாரின் பேச்சும் மூச்சும் தமிழ்நாட்டுப் புழுதியோடும் காற்றோடும் கலந்து விட்டன. அதை எவரும் அழிக்க முடியாது” என்று பெரியார் சிந்தனை தொகுப்பு வெளியீட்டில் பேசியவர். இறுதிவரை பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்ட பகுத்தறிவாளர் அவர்.

உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தைத் தமிழ் மொழியின் மூலம் மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும், அந்த நோக்கத்தில் தமிழை புலம்பெயர்ந்த தமிழர்களும் எளிதாகக் கற்க தமிழ் எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியவர்.

நீரியில் அறிஞரும், கல்வியாளரும், கவிஞரும், பெரியாரியவாதியுமான வா.செ.குழந்தைசாமி அவர்கள் தம் 87-ம் வயதில் 10.12.2016 அன்று மறைவுற்றார். அவரது நினைவு நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *