சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி இருந்ததாகவும், அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முக்கியமான உணவாக மாட்டிறைச்சி இருந்ததாகவும் தொல்லியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிந்துசமவெளி தொல்லியல் தளங்களில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாத்திரங்களில் பன்றிகள், மாடுகள், எருமை மற்றும் ஆடுகளின் இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் மற்றும் பனாரஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த ஆய்விற்கு ”வடமேற்கு இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் மண்பாண்டங்களின் உயிரியல் எச்சங்கள்” (“Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India”) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையான சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் என்ன வகையான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டறிய பாத்திரங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அங்கு கிடைத்த உயிரியல் எச்சங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர். பண்டைய தெற்காசியாவின் உணவு முறைகள் பற்றிய விவரங்கள் இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
எந்தெந்த இறைச்சி வகைகள் உண்ணப்பட்டன?
இந்த பாத்திரங்களில் கண்டுபிடிக்கப்பட்டதில் விலங்கு எலும்புகளைப் பொறுத்தவரை சுமார் 50-60% மாடுகள் அல்லது எருமைகளிலிருந்து வந்தவை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10% ஆடுகளின் எலும்புகளும் உள்ளன. இதன் மூலம் சிந்துசமவெளி மக்களுக்கு மாட்டிறைச்சி என்பது விருப்பமான உணவாக இருந்திருக்கக் கூடும் என்று தெரிய வருகிறது.
சிந்துவெளி மக்களின் உணவில் கோழி இறைச்சியும் ஒரு பகுதியாக இருந்ததற்கு சிறிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முயல்கள் மற்றும் பறவைகளை சாப்பிட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சிறிய அளவில் கடல் உணவுகளுக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
தனித்துவமான ஆய்வு முறை
பாத்திரங்களில் ஈர்க்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் போன்றவற்றின் வேதித் தன்மைகளை ஆய்வதன் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பாத்திரங்களின் உள்ளே படிந்துள்ள படிமங்களை ஆய்வு செய்ததால் இந்த ஆய்வு தனித்துவமானது என்று ஆய்வில் ஈடுபட்ட அக்சைதா சூரியநாராயணன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் “விதைகள் அல்லது தாவர எச்சங்கள் கிடைக்கும். “இங்கு விலங்குகளின் உயிரியல் எச்சங்கள் கிடைத்துள்ளது” என்றும் கூறினார். இங்கு மாடு, ஆடு மற்றும் பன்றி ஆகியவற்றின் இறைச்சி பரவலாக உண்ணப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஆய்வுகள்
இதற்கு முன்னர் சிந்துவெளி மக்களின் உணவு குறித்து இரண்டு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. 2012-ம் ஆண்டு அருணிமா கஷ்யாப் நடத்திய ஆய்வில் கத்தரிக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் போன்றவை உணவில் பயன்படுத்தப்பட்டதை வெளிக்கொண்டுவந்தார். அடுத்ததாக கல்யாண் சேகர் சக்ரவர்த்தி சில மாதங்களுக்கு முன் நடத்திய ஆய்வில் ஆட்டிறைச்சி பயன்படுத்தப்பட்டிருப்பதையும், பால் சம்மந்தமான பொருட்களான வெண்ணெய், பன்னீர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்தார்.
தற்போது மாடு, ஆடு, பன்றி போன்றவை பெருமளவில் உண்ணப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் இந்த ஆய்வு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகம்

சிந்து சமவெளி உலகின் முதல் பெரிய நாகரிகங்களில் ஒன்றாகும். இந்த நாகரிகமானது வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். சிந்து பள்ளத்தாக்கில் 1,400 க்கும் மேற்பட்ட நகரங்களும் இருந்தன. உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள 5 கிராமங்களில் கிடைத்த 172 பாத்திரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பகுதிகளை ஆராய்ந்த பல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், அங்கு இருந்த நாகரிகம் திராவிட நாகரிகமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.