சமூக செயற்பாட்டாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான கவுதம் நவ்லகா மீது மனிதநேயம் காட்டாத சிறை அதிகாரிகளை மும்பை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கவுதம் நவ்லகா பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, மும்பையில் இருக்கும் தலோஜா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் சிறையில் தனது கண்ணாடி திருடு போனதால் தனது அன்றாட பணியை செய்ய சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு புதிய கண்ணாடியை வழங்க அவரது குடும்பத்தினர் முயற்சித்து வந்தனர்.
ஆனால் தலோஜா சிறை அதிகாரிகள் புதிய கண்ணாடிகளை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
நவ்லகா-வின் உடல்நிலை
“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் நவ்லகா-வின் வழக்கறிஞர், நவ்லகா கண்ணாடி இல்லாத காரணத்தால் அருகில் இருப்பவற்றைப் பார்க்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் அறிவுரை
மும்பை உயர்நீதிமன்றத்தில் பீமா கோரேகான் தொடர்பாக நடைபெற்று வந்த ஒரு வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறைச்சாலைக்குள் நவ்லகா-வின் கண்ணாடி திருடப்பட்டது குறித்தும் புதியதாக அனுப்பப்பட்ட கண்ணாடிகளை அதிகாரிகள் வாங்க மறுத்தது குறித்தும் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், மனிதாபிமான ரீதியில் அணுகாத சிறை அதிகாரிகளுக்கு, சிறைவாசிகளின் தேவைகளை உணர்த்துவதற்கு போதிய பயிற்சி அளிக்க வகுப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என காட்டமாக அறிவுரை தெரிவித்துள்ளனர்.
“மனிதநேயம் மிக முக்கியமானது,(மனிதநேயத்தை பின்பற்றினால்) மற்றவை தானாக பின்தொடரும். சிறை அதிகாரிகளுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டிய முக்கிய தருணம் இது” என்று நீதிபதி ஷிண்டே தெரிவித்தார்.
தலோஜா சிறையில் நடைபெறும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழங்குடி உரிமை ஆர்வலரான ஸ்டான் சுவாமியும் இதே தலோகா சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வரும் 83 வயதான ஸ்டான் சுவாமிக்கு நீர் அருந்த வசதியாக ‘ஸ்ட்ரா’ வழங்க முயற்சித்தனர். ஆனால் சிறை அதிகாரிகள் ஸ்ட்ரா வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடுமையான எதிர்ப்புக்குப் பின் நவம்பர் இறுதியில் அவருக்கு ஸ்ட்ரா வழங்கப்பட்டதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.
இதேபோல் கடுமையான உடல் உபாதைகளால் தவித்து வந்த தெலுங்கு கவிஞர் வரவர ராவை சிகிச்சைக்காக வெளிமருத்துவமனையில் அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்து வந்தனர். பின்னர் நவம்பர் 18-ம் தேதி வரவர ராவ்-வை 15 நாட்களுக்கு நானாவதி மருத்துவமனைக்கு மாற்றுமாறு தலோஜா சிறை அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீமா கோரேகான் வழக்கு
டிசம்பர் 31, 2017 அன்று புனேவில் உள்ள சனிவார் வாடாவில் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியதால் ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் போர் நினைவிடத்தில் வன்முறையைத் ஏற்பட்டதாக அரசு தரப்பில் பலர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து புனே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் வழக்கு விசாரணையை புனே போலீசாரிடம் இருந்து கடந்த ஜனவரி மாதம் என்.ஐ.ஏ புலனாய்வு முகமை எடுத்து விசாரித்து வந்தது.
ஸ்டான் சுவாமி, வரவர ராவ், கெளதம் நவ்லகா போன்ற பல ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்பட்டனர். தற்போது வரை யார் மீதான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.