வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
வே.மு.பொதியவெற்பன் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். தனித்தமிழ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் என தொடர்ந்து பங்காற்றியவர். இன்னும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவர்.
புதுமைப்பித்தன் குறித்து முழுமையாக ஆராய்ந்து தனது ஆய்வை நிறைவு செய்த தமிழறிஞர். ஒரு சமூகப் பொறுப்புள்ள இயக்கப் போராளி. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவாளராக இருந்தவர். புரட்சி பண்பாட்டு இயக்கத்திலும் இயங்கியவர்.
பதிப்புப் பணி
சீலிக்குயில் என்கிற பதிப்பு நிறுவனத்தையும், முனைவன் மற்றும் பறை போன்ற இதழ்களையும் கொண்டுவந்தவர். சிறுபத்திரிக்கை இயக்கத்தின் முன்னோடியான மணிக்கொடியின் பொன்விழாவை முனைப்புடன் கொண்டாடியவர். அதற்காக மணிக்கொடி பொன்விழா மலரின் பொறுப்பாசிரியராக இருந்து வெளிக்கொண்டு வந்தவர். பொன்விழா மலரின் சிறப்பாசிரியராக எம்.வி.வெங்கட்ராம் இருந்தார். ஆசிரியர் குழுவில் பேராசிரியர் அ.மார்க்ஸ், ஜமாலன், வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
பிரமிளுக்கு விருது அளித்தவர்
குடந்தையில் உள்ள இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்களுக்கும், தீவிர விவாதத்திற்கும் களமாக அமைந்தது அவரது சீலிக்குயில் புத்தகப் பயணம். கவிஞர் பிரமிளுக்கு முதல் விருது அளித்துப் பாராட்டியது பொதியவெற்பன் அவர்கள்தான். அதேநேரத்தில் அவர் பாப்லோ நெரூடாவுக்கும் ரசிகர்.
சிற்றிதழ்களில் அவரின் எதிர்வினைக் கடிதங்கள்
சீலிக்குயில் வெளியீடாக வெளிவந்த பொதியவெற்பனின் பறை-1990 தொகைநூல் சிற்றிதழ் பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்தது. காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் நோபல் பரிசு உரையும், ஹூலியோ கொர்த்ஸாரின் சிறுகதையும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. இன்னமும் சிற்றிதழ்களின் வாசகர் பகுதிகளில் ஆர்வத்தோடு அவரது எதிர்வினைக் கடிதங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘போலிகளின் நரிமுகத்தை, பொய்மைகளின் அறிமுகத்தைத் தோலுரித்துக் காட்டவந்தேன்’ என்ற சுய பிரகடனம் செய்துகொண்டவர் அவர். அதன் ஒரு பகுதியே தான் எழுதும் எதிர்வினைக் கடிதங்கள் என்று இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் கூறியிருப்பார்.
தனித்தமிழ் இயக்கத்தின் பற்றினால் பெயரை மாற்றிக் கொண்டார்
தனித்தமிழ் இயக்கத்தினைப் பின்பற்றி தன் பெயரை மாற்றிக் கொண்டார். “நம் பெயரையே ஏன் நாம் மாற்றிக்கொள்ளக் கூடாது? இப்படிச் சிந்தித்ததாலேயே மு.சண்முகசுந்தர நேதாஜியாக இருந்தவன் வேலம்மாள்.முத்தையா.பொதியவெற்பன் ஆனேன். இத்தகைய பெயர் மாற்றம், தனித் தமிழியக்கத் தாக்கமென்றால், என் தலைப்பெழுத்துகளை மாற்றிக்கொள்ள வித்திட்டவர் குத்தூசி குருசாமி” என்று இந்து தமிழுக்கு எழுதிய கடிதத்தில் பேராசிரியர் பொதியவெற்பன் தன் பெயர் மாறிய வரலாற்றைக் கூறியிருப்பார்.
திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் நூலை முன்வைத்து இரா.கந்தசாமி எழுதிய கட்டுரையில் பொதியவெற்பன் குறித்து
”ஒரு பெருந்தலைமுறை தாண்டி, வரலாற்றுத் தொடர்ச்சியென தமிழ்ச் சமூக உளவியலின் நுண்ணலகுகளில் ஊடாடி, இருபதின் சமூக, கலை இலக்கியக் களங்களின் களப்பணியாளராய், அக்களங்களின் ஆணி வேர்களை அறிந்து தம்மனோர்க்குக் கை கொடுத்து, அல்லோர் மாட்டு அறச் சீற்றமுற்று, அங்குமிங்கும் சிதைவுற்றுத் தடுமாறிப் புரைக்கேறும் உளைவுற்ற இருப்புகளைத் தலையில் தட்டி அவர்தம் புரைநீக்கி, சிலம்பமாடி வெற்றி மண்ணை நெற்றி மண்ணாய்க் காட்டிச் சிறுபுன்னகையின் அடக்கத்தோடு எங்களுக்குக் கற்றுத்தரும் அவரின் விமரிசன முறையியலின் அழகியலுக்குள் புகுந்துவரும் நாமும் இனி புதிதே!
எம் போன்ற இளைய ஆய்வாளர்களுக்கு முதலில் புலப்படுவது தலைமுறை தாண்டிய அவருடைய வாசிப்பனுபவத்தின் பிரும்மாண்டம். இங்கிருந்து, ஒருபால் கோடாத அவருடைய அறிவின் நுட்பமும் அறமும் அவற்றின் அழகியலும் அடுத்தடுத்துப் புலனாகி வியக்க வைக்கின்றன. பொதிகைச் சித்தர் ஊடாடும் களங்களின் ஆழமும் அகலமும் நுண்மையும் பற்றிய வரலாற்றுப் புரிதல்களோ, வாசிப்பின் நெறிமைகளோ நமக்குப் போதாதுதான்.
பேராசிரியர் கோச்சடை பொதிகைச் சாரல் என்ற கட்டுரையில்
”ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்தி நாளில் தொடங்கப்பட்ட புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டதிலிருந்து புதிய விற்பனை அறிவை அவர் புரட்சிகர அரசியல் கலை, இலக்கிய கூட்டங்கள் நடக்கிற இடங்களிலெல்லாம் புத்தகம் விற்பார். அதற்கென அவரளவில் இருக்கும் 23 பைகளில் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கடை பரப்பி இருப்பார். கூட்ட நுழைவாயிலில் அவர் கடை போட்டு உட்கார்ந்து இருப்பது கோயில் வாசலில் துவாரபாலகர் நினைவூட்டும். அதுபோல மற்றும் முற்போக்கு இளைஞர் அணி கூட்டங்கள் என்றால் மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சிகள் இருக்கும். அதில் கம்யூனிஸ்டுகள் நாங்கள் கஷ்ட ஜீவிகள் என்ற பாடலை தோழர் பொதியவெற்பன் பாடுவார். மதுரை கோரிப்பாளையம் நாளங்காடி அருகில் மேடையில் அவர் பாடியது இன்னமும் என் நினைவில் உள்ளது.
புரட்சிகர இலக்கியங்களையும் மற்ற தரமான நூல்களையும் அவர் வெளியிட்டுள்ளார் பிறரிடமிருந்து வாங்கி விற்றும் பரப்பினார். தஞ்சை பிரகாஷ் பஞ்சமர் தொகுதியை வெளியிட்ட பிறகு தொடர்ந்து டேனியல் படைப்புகளை வெளியிட்டார்.
பொதியவெற்பன் பதிப்பாசிரியராக இருந்த தோழமை மூலம் சனங்களின் கதையை அச்சேற்றினார். அது கவிஞருக்கும் தமிழ் கவிதை உலகுக்கும் ஒரு திருப்புமுனை ஆனது. ரவிக்குமாரை அறிமுகப்படுத்தியவர். விற்பனை மூலம் ஆதாயம் திரட்ட என்பதற்காக அன்றி கொள்கைகளை பரப்புவதற்காகவே நூல்களை வெளியிட்டார்.
ஓட்டை மிதிவண்டி செலவு எத்தனை கல் தொலைவு கட்டுரையில் ஆ.அரிமாப்பாமகன்
உலகத் தமிழ்க் கழகம் தழைத்து பரவிய 1970-75 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தின் முன்னோடிகளாக விளங்கியவர்களில் பொதியவெற்பன் மிகவும் சுறுசுறுப்பானவர். திருக்காட்டுப்பள்ளி அம்மையகரம், திருவையாறு புலவர் சுப்பையா, குடந்தை பொதியவெற்பன், தரங்கை பன்னீர்செல்வம், காரை இறையடியான், திருவாரூர் இயற்றமிழ் பயிற்றகம் சரவணத் தமிழன் போன்றோர் உலகத் தமிழ் கழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்கள்.
பொதியவெற்பனைப் பொறுத்தவரையில் எடுத்த செயலை முடிக்கும் பாங்கினர். உலகத் தமிழ் கழகத்தின் கிளைகளை தோற்றுவிப்பதற்கு இரவு பகல் பாராமல் குடந்தை நகரைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் சென்று படித்த இளைஞர்களை தேடித் திரட்டி தமிழுணர்வு ஊட்டி, அமைப்புகளை உருவாக்கியவர். ஓட்டை மிதிவண்டி செலவு எத்தனை கல் தொலைவு! நாச்சியார் கோவிலா! திருநாகேஸ்வரமா! கோட்டையூரா! பம்பை படையூறா! பாலக்கரையா! திருவிடைமருதூரா! இப்படி பற்பல ஊர்களுக்குச் சென்று பல கிளைக் கழக அமைப்புகளை தோற்றுவித்துடன் நில்லாமல், அங்கங்கு தமிழுணர்ச்சி ஊட்டவல்ல பாட்டரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வகுத்து நடத்தியவர்.
பொதியவெற்பன் எழுதிய நூல்களில் சில
புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும் (ஆய்வுக் கட்டுரைகள்)
சூரியக் குளியல் (கவிதைகள்)
சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும் (மணிக்கொடிக் கலைஞர்களைப் பற்றிய ஆய்வு)
புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும் (கட்டுரைகள்)
திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் (கட்டுரைகள்)
புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் (தொகுப்பு)
தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும் (தொல்காப்பிய-திருக்குறள் உரையியல் ஆய்வுகள்)
கருமை செம்மை வெண்மையைக் கடந்து (பதிப்பியல் இறையியல் மெய்யியல் ஆய்வுகள்)
1983-ஜுலைக் கலவரத்திற்குப் பிறகு, ஈழத் தமிழ்க் கவிதைகளை வெளிக்கொண்டு வந்தவர். தமிழில் “கவிதாநிகழ்வு“ எனகிற நிகழ்வை அறிமுகப்படுத்தியவர்.
இன்று பொதிகை சித்தரின் பிறந்த நாள். எங்களோடு ஒருவராய் எங்கள் இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் ஐயா வே.மு.பொதியவெற்பன் அவர்களுக்கு மெட்ராஸ் ரிவ்யூ குழு தனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறது.
வே.மு.பொதியவெற்பன் அவர்கள் Madras Review இணையத்தில் எழுதிய கட்டுரைகளைப் படிக்க
முகப்பு ஓவியம்: நன்றி TSounthar
எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா
தமிழ் அறிஞர் திரு பொதிய வெற்பன்