இன்று செய்தித்தாள்களில் டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க உதவுமாறு பொதுவெளியில் உதவி கேட்டு விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு டெல்லி அரசுக்கு டேங்கர்கள் தேவைப்படுகின்றன; கொடுத்து உதவுங்கள் என்று அந்த விளம்பரம் அமைந்துள்ளது.
”டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. நீங்களோ, உங்கள் நிறுவனமோ ஆக்சிஜனுடன் டேங்கர்கள் வைத்திருந்தால் டெல்லி அரசுக்கு உதவுங்கள். உங்களிடம் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கான காலி டேங்கர்கள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல எங்களுக்கு உதவியாய் இருக்கும். இது ஒரு அவசர வேண்டுகோள். டெல்லி உங்களை எப்போதும் நன்றியுடன் நினைவுகூறும்.”
”உங்கள் ஆதரவு ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு உதவும்”
என்று சுகாதாரத் துறை செயலர் எஸ்.எம்.அலி அவர்களின் பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருக்கிறது. ஒரு யூனியன் பிரதேச அரசாங்கம் ஆக்சிஜன் டேங்கர்களுக்காக இப்படி பொதுவெளியில் உதவி கேட்டு நிற்பது நாடு எந்த அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதிய அரவிந்த் கெஜ்ரிவால்
ஏற்கனவே வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் சாவிற்கு தள்ளப்பட்டு வருவதையும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக மக்கள் அலைந்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நேற்று முன்தினம், “உங்களிடம் கூடுதலாக ஆக்சிஜன் இருந்தால் எங்களுக்கு கொடுங்கள்” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். அதில் மத்திய அரசு உதவிகளை அளித்த போதிலும், கொரோனா தீவிரமாக இருப்பதால் அவை போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
டெல்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறை
சனிக்கிழமை அன்று டெல்லி மருத்துவமனையில் 20 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போயினர். ஆக்சிஜன் தொடர்ந்து குறைந்ததால் பல மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளிகளை வெளியேற்றின. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த பதற்றம் சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது.
டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 104 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருந்ததாகவும், அவை கொரோனா எமெர்ஜென்சி வார்டிலிருந்து ICU-க்கு நோயாளிகளை மாற்றுவதற்கும், பொது வார்டுகளிலிருந்து ICU-க்கு மாற்றுவதற்கும் அளிக்கப்பட்டதாகவும், அந்த சிலிண்டர்களில் மீண்டும் ஆக்சிஜன் நிரப்புவதற்கு வழி இல்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனை கடன்பெறும் நிலையிலும், கெஞ்சும் நிலையிலும் இருப்பதாக மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஐநாக்ஸ் நிறுவனத்திடம் டெல்லியின் ஆக்சிஜன் அளவைக் குறைத்த மத்திய அரசு
ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமான ஐநாக்ஸ் (INOX) நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் சப்ளையின் அளவை மத்திய அரசு குறைத்திருப்பதாகவும், தங்கள் உற்பத்தியின் பெரும்பகுதி உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தாங்கள் டெல்லிக்கு அனுப்பி வந்த 105 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை 80 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு மற்றும் மத்திய அரசிடம் இருந்து வரும் ஆர்டர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பல மடங்கு அதிகரித்த ஆக்சிஜன் தேவை
மத்திய அரசினால் மொத்தமாக டெல்லிக்கு 378 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டெல்லியின் தேவை என்பது ஒரு நாளைக்கு 700 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. டெல்லியின் பத்ரா மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளைக்கு 7000 கிலோ ஆக்சிஜன் தேவைப்படுவதாக அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் குப்தா இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு முன்பாக இந்த மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவை என்பது 1500 – 2000 லிட்டர் என்பதாக இருந்தது. ஆக்சிஜன் தேவை பலமடங்கு அதிகரித்திருக்கிறது.
டெல்லி அரசின் விளம்பரத்தை சாடியுள்ள மத்திய அரசு
இப்படிப்பட்ட சூழலில் டெல்லி அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரத்தினை மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். டெல்லியில் 8 ஆக்சிஜன் ஆலைகளை அமைத்திட 2020 டிசம்பர் மாதமே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நிதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் ஒரே ஒரு ஆலையை மட்டுமே அமைத்ததாகவும், இப்போது அருவருக்கத்தக்க வகையில் விளம்பரங்களை வெளியிட்டு வருவதாகவும் பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பொய் சொல்கிறது – டெல்லி ஆம் ஆத்மி அரசு
இந்நிலையில் மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் பொய்யை பரப்பி வருவதாக ஆம் ஆத்மி கட்சி பதில் அளித்துள்ளது. 8 ஆலைகளில் 7 ஆலைகள் டெல்லியின் அரசு மருத்துவமனைகளிலும், 1 ஆலை மத்திய மருத்துவமனையிலும் எழுப்பப்படுவதாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு தாமதப்படுத்தி வந்ததாகவும், மார்ச் மாதத்தில் தான் 5 ஆலைகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி அரசின் விளம்பரம் கொரோனா தொற்றின் அச்சம் தரத்தக்க தீவிர நிலையினை நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.
-Madras Review