பெரம்பலூர் மாவட்டம் ஓகலூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அருள் பிரபு கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்.
குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிரான போராட்டம், பூச்சிக் கொல்லிக்கு எதிரான ஆர்ப்பாட்டம், முகிலனுக்கு ஆதரவான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி போராட்டம் என மக்களுக்கான போராட்டங்களில் முன் நிற்பவர்.

அதுமட்டுமில்லாமல் சமூகப் பணிகளில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது, சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிப்பது, விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வது, நீர் மேலாண்மை சம்பந்தமான வேலைகளை செய்வது என இயங்கிக் கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.
2016-2017ல் ஆண்டு தமிழ்நாட்டில் பெரும் வறட்சி ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதில் இறந்த அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் உணவு பொருட்கள், இலவச மாடுகள், அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் என அனைத்தும் கிடைக்க பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து பணியாற்றியவர்.

கிராம சபையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற இன்னும் பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தான் பணியாற்றிய பகுதியில் அனைத்து சமூக மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக உழைத்தவர் அருள் பிரபு. இவருக்குத்தான் தற்பொழுது அவர் பணி செய்த பகுதியிலுள்ள சாதியவாதிகள் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் சாதிய வன் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து அருள் பிரபு நம்மிடம் கூறியதாவது,
என் வாழ்க்கையில் இதுவரை நடக்காத ஒரு சம்பவத்தை நான் அன்று சந்தித்தேன்.
கடந்த 27.5.2021 அன்று எப்பொழுதும் போல எனது களப்பணியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்யும் முதற் கட்ட பணிகளை செய்து கொண்டிருந்தோன்.
மதிய உணவு வேளையின் போது அந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி நுழைவு வாயிலில் நான் என்னுடன் வேலை செய்யும் நண்பர் மற்றும் கூலியாட்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது பள்ளியில் ஒரு அறையிலிருந்து வந்த இருவர் எனது இருசக்கர வாகனத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் கேவலமாக திட்டத் தொடங்கினார். நான், ‘இங்கு வேலை செய்கிறேன் சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்’ என்று சொன்னேன். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து வாகனத்தின் சாவியை பிடுங்கி கொண்டார்கள்.
நான் இப்படி செய்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று கூறியவுடன் அவர்கள் என்னை சாதி பெயரைச் சொல்லித் திட்டு என் வயிற்றில் பலமாக எட்டி உதைத்தனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே நான் அணிந்திருந்த பேண்ட்டில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்க உந்தப்பட்டு மயக்க நிலையை அடைந்து விட்டேன்.
பிறகு எனது அருகில் இருந்த நண்பர்கள் தண்ணீர் கொடுத்து என்னை தூக்கினார். சாதியப் போக்குடன் என்னைத் தாக்கிய அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னுடன் இருந்த பிற நண்பர்களையும் அடித்து எங்கள் இரு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள்.
பிறகு அங்கிருந்து கொண்டே தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு நம்மை கீழ் சாதிக்காரர்கள் அடித்து விட்டார்கள் வாங்க என்றார்கள்.
சம்பவம் நடந்த அந்த இடத்திற்கு சிலர் வந்தார்கள் ஆனால் வேடிக்கைதான் பார்த்தார்கள். அவர்கள் இன்னும் கோபமடைந்து அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து உங்களை பார்த்தால் வெட்டி விடுவேன் என்று மிரட்டினார்.
நான் காவல்துறைக்கு புகார் தெரிவித்துவிட்டு அவ்வூரிலுள்ள பஞ்சாயத்து தலைவர் வீட்டில் சென்று பாதுகாப்புக்காக அங்கு இருந்தேன்.
அவ்வூரிலுள்ள ஏரியில் குளித்து விட்டு பிறகு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
அடுத்தநாள் குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
எனக்கு மீண்டும் வயிற்றில் வலி மற்றும் வீக்கம் இருந்ததால் பின்பு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
சமூக செயற்பாட்டாளர் ஆனா அருள் பிரபு மீதான சாதிய தாக்குதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர் அழுத்தம் கொடுத்ததனால்
இப்பிரச்சனை டிஎஸ்பி, எஸ்பி, டிஐஜி ஆகியோரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் காரனமாக இவ்வழக்கிற்கு தனிப்படை அமைத்து இன்று குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால் இப்பொழுது அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதால் அதன் மீதான விசாரணைக்காக அருள் பிரபுவையும் காவல்துறை அழைத்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவர்கள் ஜாமீனில் வெளிவந்தால் அது அருள் பிரபுவின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். எனவே அச்சாதிய வன் கொடுமையாளர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து எல்லாத் தரப்பு மக்களின் முன்னேறத்திற்காக பாடுபடும் அருள் பிரபு போன்றோருக்கு இச்சமூகம் உடன் நிற்பது அவசியமாகும்.