ஐந்து மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிறது.மறுபுறம் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) மேற்கொண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த ஜனவரி மற்றும் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏறத்தாழ 2.5 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இதில் 2.2 கோடி பேர் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பொருளாதார நம்பிக்கையாக இருக்கும் தங்களது வேலை பறிபோனது பற்றிய செய்தியை அறிந்த கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலைகுலைந்து உள்ளது.

இந்த வேலை இழப்பு என்பது எதிர்பாராத நிகழ்வு அல்ல.தினசரி வருவாயை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா முதல் அலையின் நாடு தழுவிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம். முறைசாரா துறையில் இருக்கும் தினக்கூலிகள் அரசு கொடுத்த நிவாரணமான சொற்ப பணத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் தான் இருந்தனர் . வறுமையில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு மேலும் கனமான சுமையை ஏற்றியுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வின் சில கூறுகள் பின்வருமாறு:

2021 ஜனவரி மாத கணக்கெடுப்பின்படி மொத்தமாக பணியாற்றிய நபர்களின் எண்ணிக்கை சுமார் 40.1 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சற்று குறைந்து 39.8 கோடியானது .தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மேலும் சரிந்தது.

தினசரி கூலிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஏப்ரல்-மே மாதங்களில் 1.72 கோடிக்கு அதிகமாகமான தினசரி கூலி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அவர்களின் வருமானத்தின் மீது பேரிடி விழுந்துள்ளது.அதேபோல் மாத சம்பளம் மற்றும் வணிகப் பிரிவுகளில் வேலை பார்ப்பவர்களும் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் இந்த துறைகளில் வேலை இழந்துள்ளனர்.அவற்றில் பெரும்பாலும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த ஆண்டை போலவே விவசாயத் துறை  சார்ந்தவர்கள் வேலையை இழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் விவசாயத் துறையில் சுமார் 60 லட்சம் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.கோதுமை மற்றும் பிற ராபி பயிர்களுக்கு அறுவடை காலம் முடிவடையும் போதும், மற்றும் ​​மே மாதத்தில் காரீஃப் விதைப்புக்கான தயாரிப்புகள் வரவிருக்கும் சூழ்நிலையில் 90 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

கட்டுமான துறையில் 88 இலட்சத்திற்கும் அதிகமான வேலை இழப்பு :

அதிகபடியான வேலை இழப்புகளை சந்தித்த சில துறைகள் கீழே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாதங்களில் கட்டுமான துறை 88 லட்சம் தொழிலாளர்களை வெளியேற்றியுள்ளது.இவர்களில் பெரும்பாலும் தினக்கூலிகள். மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற துறைகளில் உற்பத்தி துறை (42 லட்சம் வேலைகள் இழந்தன),  விருந்தோம்பல் துறை (40 லட்சம்) மற்றும் வர்த்தகத் துறை(36 லட்சம்) ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான மாநிலங்களில் உற்பத்தி துறைக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இருந்தும் அத்துறையில் குறிப்பிடத்தக்க வேலையிழப்பு நேர்ந்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில், வேலை செய்தவர்களுக்கு ஊதியங்கூட வழங்கப்படவில்லை. பல மாநிலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு ஊதியம் பெறவில்லை. இந்த ஊழியர்கள் வேலையற்றவர்களாக என்று கணக்கிடப்படுவதில்லை.ஆனால் உண்மையில் அவர்கள் வேலையிலிருந்தும் எந்த பயனும் பெறவில்லை.

நகர்ப்புறத்தின் அவலநிலை

2021 மே மாதத்தில் வேலையின்மை விகிதம் இரட்டிப்பாகி உள்ளது.மே மாதம் வேலையின்மை கிட்டத்தட்ட 12% ஆக கணக்கிடப்பட்டுள்ளது.பின் ஜூன் 4-ம் தேதி கணக்கீட்டின்படி 13% -மாக உயர்ந்துள்ளது. மே மாதத்தில் நகர்ப்புற வேலையின்மை கிட்டத்தட்ட 15%-மாக உள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 11% என மதிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஆண்டைப் போலவே, அவர்கள் பணிபுரியும் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கிராமப்புற வருமானம் அதிக எண்ணிக்கையிலான மக்களிடையே பிரிக்கப்பட்டு, தனிப்பட்ட வருமானங்களைக் குறைந்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலையின்மையால் கட்டுமானம், உற்பத்தி, விருந்தோம்பல் (உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள்) மற்றும் வர்த்தகம் (கடைகள், மால்கள் போன்றவை) போன்ற துறைகளில் வேலை செய்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறியுள்ளனர்.

இந்த கொரோனா கட்டுப்பாடுகளின் போது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தாமல் தடுக்க அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இந்த  இழப்பு அதிகரித்து வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில் தொழிலாளர்களை, குத்தகைதாரர்கள் வெளியேற்றுவதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.மேலும் அவர்களின் ஊதியங்கள் தடுக்க கூடாது. இது குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு சில வழிகாட்டு நடைமுறைகளை கொண்டு வரவேண்டும்.

ரேஷன் கார்டுகள் உள்ளவர்களுக்கு மாதத்திற்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது போதுமானதாக இல்லை.அத்தோடு இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் வாழ்வதற்கு தேவையான  நிதி உதவியையும் அரசு செய்ய வேண்டும்.

தகவல்கள்: newsclick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *