வைரஸ் நுண்ணுயிரிகள் சூழ்நிலைக்கேற்ப அதன் மரபணுக்களில் உருமாறி புதிய வடிவங்களைப் பெறுகின்றன. இன்றுவரை நீடித்திருக்கும் கொரோனா வைரஸில் இதுபோல மரபணு மாறியதாக ஏறத்தாழ 4000 வகைகளுக்கு மேல் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் யுனைடெட் கிங்டம் எனப்படும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸின் வகைகளானது மிகவும் அதிவிரைவாக பரவக்கூடியவையாக இருக்கின்றன. தடுப்பூசிகள் இந்தவகை வைரஸ்களுக்கு எதிராக குறைந்த செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்பதும் மேலும் கவலையை அதிகப்படுத்துகின்றது.
தொற்றுநோயை பரப்பும் வைரஸை உடலினுள் நுழையவிடாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது மற்றும் கைகளை கழுவுவது ஆகியவற்றை முறையாக தவறாமல் கடைபிடிப்பதுதான் இப்போது நம் முன் இருக்கக்கூடிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இதுவரை கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த முக்கிய வைரஸ் வகைகளை பார்க்கலாம்.
தென் ஆப்ரிக்கா வகை பிறழ்வு B.1.351 (The South Africa variant – B.1.351)
முதலில் கண்டறியப்பட்ட இடம்:
501Y.V2 என்றும் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸின் இந்த பிறழ்வு 2020-ம் ஆண்டின் அக்டோபர் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு டிசம்பரில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தென்னாபிரிக்க நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த கொரோனா வைரஸின் பிறழ்வானது அதன் முந்தைய பிறழ்வுகளை போலில்லாமல் இளைஞர்களை அதிகமாக பாதிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிறழ்வே தென்னாப்பிரிக்கா முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்ததற்கு காரணமாக இருந்திருக்கிறது.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
இதுவரை இந்த பிறழ்வு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் உட்பட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனவரி 28 அன்று, தென் கரோலினா மாநிலத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாத இருவரை பாதித்ததாக அறிவித்தார்கள்.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
இந்த பிறழ்வும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட மற்றொரு பிறழ்வும் சில ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட பிறழ்வைப் போலவே இதுவும் மிக வேகமாக மக்களிடையே பரவக்கூடியதாக இருக்கின்றது. அதேசமயம் இது மிகவும் ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முன்னாள் இயக்குனர் ஸ்காட் கோட்லீப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இந்த பிறழ்வானது தற்போது மருத்துவ உலகம் மேற்கொள்ளும் மேற்கொள்ளும் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் சிகிச்சைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது இன்னும் ஆபத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்கிறது.
யு.கே வகை அல்லது கென்ட் வகை பிறழ்வு -பி.1.1.7 (U.K. variant -B.1.1.7)
முதலில் கண்டறியப்பட்ட இடம்:
இந்த மாறுபாடு முதன்முதலில் யுனைடெட் கிங்டமில், குறிப்பாக லண்டனிலும், அருகிலுள்ள கென்ட் மாவட்டத்திலும் செப்டம்பர் 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிறழ்வு சில இடங்களில் “கென்ட்” மாறுபாடு என்று குறிப்பிடப்படுகிறது. இது 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் பிரிட்டன், டென்மார்க் மற்றும் அயர்லாந்தில் வேகமாக பரவி வருகிறது.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இந்தவகை கொரோனா பிறழ்வின் காரணமாக தொற்றைக் கண்டன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சோதனை முன்னறிவிப்பை வெளியிட்டன. அந்த அறிக்கை தற்போதைய 2021-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தவகை பிறழ்வின் தொற்று அமெரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதைத் தெரிவிக்கிறது. தற்போதைய பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து இந்த மாறுபாடு அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
இங்கிலாந்தில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் இந்தவகை மாறுபாடு ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றைவிட வேகமாக பரவக்கூடியதாக அறியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனும் ஜனவரி மாதம் முதல் முறையாக இந்த பிறழ்வானது முந்தைய பிறழ்வுகளை விட ஆபத்தானதாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஈக்” பிறழ்வு வகை – E484K (The ‘Eeek’ mutation -E484K)
முதலில் கண்டறியப்பட்ட இடம் :
இது ஒரு பிறழ்வுக்குள் ஒரு பிறழ்வு என நம் புரிதலுக்காக விவரிக்கப்படலாம். தொற்றுநோயியல் வல்லுநர்கள் குறிப்பிடுவதைப் போல இது E484K – அல்லது “Eeek” என்று அழைக்கப்படுகிறது. ஒரு வைரஸ் தனது மரபணுவில் மாறுபாடு ஏற்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க குணநலன்களைப் பெறுகிறது. அது அப்படியே தொடரும்பட்சத்தில் அந்த வைரசின் மரபணுக்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுபாடு அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதேசமயம் இது புதிதானதல்ல கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்தவகை மாறுபாடுகள் பல முறை தோன்றியிருக்கின்றன. ஆனால் குறிப்பிடத்தக்க அபாய குணநலன்களுடன் மாறும்பொழுது அந்த பிறழ்வு வல்லுநர்களின் கவனத்தைப் பெற்றது.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
யு.கே, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் முதன்முதலில் இந்த பிறழ்வு காணப்படுகிறது. மே மாதத்தில் இருந்து அமெரிக்காவில் வரிசைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸின் 200-க்கும் மேற்பட்ட மாதிரிகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
இந்த பிறழ்வு கொரோனா வைரஸின் புரத கூர்முனைகளில் நிகழ்ந்துள்ளது. தற்போது மருத்துவ உலகம் பயன்படுத்தும் அனைத்துவிதமான தடுப்பூசிகளும் புரத கூர்முனைகளின் செயல்திறனை குறைக்கும் விதமாக செயல்படும் போது இத்தகைய பிறழ்வு தடுப்பூசியின் பயனைக் குறைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது. அதேவேளையில் இந்த வகை பிறழ்வு தோன்றிய வைரஸ் மற்ற வகை பிறழ்வு கண்ட வைரஸ்களுடன் சேரும்போது இந்த வகை வைரசைக் கண்டறிய இயலாத ஆபத்தும் இருக்கிறது.
இதனால் இந்த பிறழ்வு தடுப்பூசிகளின் பயனை கேள்விக்குறியாக்குவதோடு மனித உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்கக்கூடிய அபாயமும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரேசில் பிறழ்வு வகை -பி. 1 (Brazil variant -P. 1)
முதலில் கண்டறியப்பட்ட இடம் :
தொடர்ச்சியான ஆய்வுகளால் பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் 2020 ஜூலை மாத தொடக்கத்தில் இந்தவகை மாறுபாடு கண்டறியப்பட்டது. ஜப்பான் நாட்டின் மருத்துவ ஆய்வாளர்கள் ஜனவரி மாதம் பிரேசிலில் இருந்து வந்த பயணிகளுக்கு இந்தவகை மறுபாட்டின் தொற்றைக் கண்டறிந்தனர்.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
இந்தவகை பிறழ்வு பிரேசில், பெரு, ஜெர்மனி, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 25 அன்று, அமெரிக்காவின் மினசோட்டா சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாட்டின் முதல் அமெரிக்கத் தொற்றை பிரேசிலுக்கு சமீபத்தில் சென்றுவந்த பயண வரலாற்றைக் கொண்ட ஒருவரிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
மிக அபாயகரமானதாகக் கருதப்படும் இந்த மாறுபாட்டில் ஒரு டஜனுக்கும் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பல கொரோனா வைரசின் புரத கூர்முனைகளில் காணப்படும் புரதத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த புரத கூர்முனைகளே வைரஸை மனித செல்லுடன் பிணைக்கின்றன. இதன் காரணமாக, ஆராய்ச்சியாளர்கள் இதன் தொற்று இன்னும் வீரியமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த வகை பிறழ்வை நோயெதிர்ப்பு மருந்துகள் சில ஆய்வுகளில் அடையாளம் காணவில்லை என்பதற்கான சில ஆரம்ப ஆதாரங்களும் உள்ளன. இந்த அபாயமானது மேலும் மேலும் இந்தவகை பிறழ்வின் மறுஉருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
டென்மார்க் பிறழ்வு வகை -எல் 452 ஆர் (The Denmark variant – L452R)
முதலில் கண்டறியப்பட்ட இடம் :
இந்தவகை மாறுபாடு 2020,மார்ச் மாதத்தில் டென்மார்க்கில் கண்டறியப்பட்டது.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
இந்தவகை பிறழ்வு அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதிகளில் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளிலும், சிறைச்சாலைகளிலும் மற்றும் சான் ஜோஸ் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் பரவிய கொரோனா தொற்றுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிற மாகாணங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
இந்த கொரோனா வைரஸ் திரிபு இப்போது ஆதிக்கம் செலுத்தும் மற்றவகை பிறழ்வுகளைக் காட்டிலும் பரவக்கூடியதா அல்லது ஆபத்தானதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அசலான பிறழ்வு – D614 (The original variant- D614G)
முதலில் கண்டறியப்பட்ட இடம் :
விஞ்ஞானிகளால் “ஜி” (G) என்று அழைக்கப்படும் இந்த உண்மையான பிறழ்வு 2020 ஜனவரியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் அங்கிருந்து நியூயார்க் நகரம் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியது.
பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்கள்:
இந்தவகை “ஜி” பிறழ்வு உலகெங்கும் காணப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டின் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மருத்துவப் பதிவிலிருந்து அதே ஆண்டு ஜூலை மாதத்திற்குள் உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்த கொரோனா வைரசின் தரவுத்தளத்தில் அவர்கள் பதிவேற்றிய கொரோனா வைரஸின் 50,000 மரபணுக்களில் 70 சதவீதம் இந்தவகை பிறழ்வை கொண்டிருக்கின்றன.
இந்த பிறழ்வின் வேறுபாடு:
சில விஞ்ஞானிகள் இந்த பிறழ்வானது கொரோனா வைரஸின் அசலைவிட கணிசமாகப் பரவக்கூடியது என்று கருதுகின்றனர். ஏனெனில் இந்த மாறுபாடு கொரோனா வைரஸின் மேற்பரப்பில் அதன் அசலைவிட நான்கைந்து மடங்கு அதிக கூர்முனைகளைக் கொண்டுள்ளதாக அதனை உருமாற்றியுள்ளது. அந்த கூர்முனைகள்தான் மனிதசெல்களைப் பாதிக்க உதவுகிறது. அதேசமயம் சில விஞ்ஞானிகள் இந்தவகை பிறழ்வு இன்னும் அதிகமாக பரவியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
கொரோனா வைரஸின் மாறுபாடுகளிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
தற்போது நாம் கடைபிடிக்கும் கொரோனா வைரஸைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான – தனிநபர் இடைவெளியைப் பராமரிப்பது, முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் கைகளைக் கழுவுவது போன்றவை ஆரம்ப காலங்களில் பலன்கொடுக்கக்கூடியவை. பரவும் மாறுபாடுகளுக்கு ஏற்ப மருத்துவ நிபுணர்கள் கொடுக்கக்கூடிய வழிகாட்டுதல்கள் ஒரே நேரத்தில் அந்த வகைகளில் ஒன்றிலிருந்து நீங்கள் மற்றொன்றிற்கு மாறிச்சென்று நோய்வாய்ப்படாமல் தடுக்கும்.
“வைரஸ்கள் நகலெடுக்காவிட்டால் அவை மாறாது” என்று ஒரு மருத்துவ நிபுணர் இந்தவகை பிறழ்வுகளைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்த மாறுபாடுகளைப் பற்றி விஞ்ஞானிகள் தங்களால் இயன்ற அளவு கண்டறிவதும் முக்கியம், குறிப்பிட்ட தற்காப்பு வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டுமே அவற்றின் பரவலை நாம் குறைக்க முடியும். அதே வேளையில் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் வரை, புதிய வகைகளால் என்னென்ன பாதிப்புகளை ஏற்படும் என்பது குறித்தும் நம் அனுமானங்களை இப்போது வரையறுக்க இயலாது .