இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015 ஆம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையையும் சென்னை சந்திக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பெரும் அழிவுகளின் துவக்கம் இது என்று சூழலலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை உருவான போது நீரின் ஆதாரமாக இருந்தவை
கூவம் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகில் ஆங்கிலேயர் உருவாக்கிய கோட்டையைச் சுற்றி உருவான சென்னை மாநகரில் ஆரம்ப காலத்தில் கிணறுகளே நீரின் ஆதாராமாக இருந்தது. 1871-ம் ஆண்டு சென்னை ஒரு நகராக விரிவடையும் போது, அதன் மக்கள் தொகைப் பெருக்கம் 4 லட்சத்தை அடைந்தபோதே நீர் நிலைகளில் கழிவுகள் கலந்தன.
இதனால் ஏற்பட்ட நோய்களில் இருந்து தப்பிக்க ஆங்கில அரசிற்கு சென்னை குடிநீர் திட்டம் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கொற்றலை ஆற்றில் தாமரைப்பாக்கத்தில் அணை கட்டி சோழவரம் ஏரியில் நீர் நிரப்பி கான்கிரீட் குழாய்கள் வழியாக கீழ்பாக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்ட கட்டுப்பாடு அறையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை, புரைசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் கொண்டுவரப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் குடிநீர் திட்டம்.
ஒரு சிறு நகராக உருவாகிய போதே முதலில் மாசுபட்டது நீர்நிலை தான் என்கிற படிப்பினையில் இருந்து சென்னையின் ஒவ்வொரு விரிவாக்கத்தையும் திட்டமிட்டிருந்தால் இன்றைய மழைக்காலம் பேரிடராக மாறியிருக்காது.
கடந்த 380 ஆண்டுகளில் சென்னை மாநகரம் உருவாகி விரிந்த வரலாறு
- பிரான்சிஸ் டே 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் கூவம் ஆற்றின் கழிமுகத்தில் வாங்கிய நிலத்தில் எழுப்பிய செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 48 ஆண்டுகள் கழித்து 1687 ஆண்டு டிசம்பர் 30-ம் நாள் மதராசப்பட்டினம் கார்பாரேஷன் ஆகியது.
- 1893-ல் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர் ஆகியவை ஆங்கிலேயர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
- 1708-ல் திருவொற்றியூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகியவையும் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியது.
- விரிந்து கொண்டே போன சென்னை நகரின் எல்லை மீண்டும் அதிகாரப்பூர்வமாக 1946-ல் மாம்பலம், சைதாப்பேட்டை, புலியூர், கோடம்பாக்கம், சாலிக்கிராமம், அடையார், அயனாவரம், அமைந்தகரை ஆகியவற்றைச் சேர்த்து மாநகராட்சி ஆகியது.
- ஆங்கிலேயர் வெளியேறி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்டவற்றை சென்னையுடன் இணைத்தார்கள்
- சென்னை பெருநகர மாநகராட்சியாக பெயர் மாறிய 2009-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட 7 நகராட்சிகளும், போரூர் உள்ளிட்ட மூன்று பேரூராட்சிகளும் இணைந்தது.
- இது மட்டுமில்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நந்தம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பேரூராட்சிகளும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.
இன்றைய சென்னை மாநகராட்சி என்பது ஒரு மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேருராட்சிகள், 216 கிராமங்களை உள்ளடக்கிய 10 ஊராட்சி ஓன்றியங்களை உள்ளடக்கியது. இது அதிகாரப்பூர்வமாக அரசு போட்ட எல்லைதான். ஆனால் ஓடி வரும் வெள்ளத்திற்கு இந்த எல்லைகள் எல்லாம் தெரியாது.
ஆறுகளும், வடிகால்களும், ஏரிகளை இணைக்கும் கால்வாய்களும்
கூவம் ஆற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் உருவான சென்னை, இன்று கொற்றலை, கூவம் ,அடையாறு, பாலாறு, இவையனைத்தையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் என்று விரிந்துள்ளது.
இந்த ஆறுகள் மட்டுமல்ல, சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 124 ஏரிகள் இருந்ததாக பொதுப்பணித்துறையின் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஏரிகள் பூந்தமல்லி, போரூர், காரப்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம் என்று சங்கிலித்தொடர் ஏரிகளாகவும், அதன் இணைப்புக் கால்வாய்களுமாக இருந்துள்ளன.
இது மட்டுமல்ல இன்று வெள்ள அபாயப் பகுதிகளாக இருக்கும் பெரும்பகுதியானது, ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சென்னை மாநகராட்சியில் மொத்தம் பதினாறு வடிகால்கள் ஒடுகின்றன. அவற்றின் மொத்த நீளம் 27.921 கி.மீ. இவற்றை சென்னை மாநகராட்சி பராமரிக்கிறது.
- பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆறு ஆகிவற்றை பொதுப்பணித்துறை பராமரிக்கிறது.
இந்த வடிகால் பாதையிலும், ஏரிகளிலும், ஏரிகளுக்கு இடையிலான இணைப்புப் பாதைகளிலும் உருவெடுத்து நிற்கும் கட்டிடங்கள்தான் பருவமழையை பேரிடராக்கி விடுகிறது.
ஒரே இடத்தில் குவிக்கப்படும் தொழில் நிலையங்கள்
இன்று கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஒரே இடத்தில் குவிக்கப்படும் நிறுவனங்கள் தவிர்க்கபட்டு, சிறிய நகரங்களிலும் தொழில் நிலையங்களை தொடங்கலாம் என்று ஆலோசனை சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் என்று வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஒரே பகுதியில் குவித்ததற்கு முன்னரே இதனை திட்டமிட்டிருந்தால் இத்தகைய சிக்கல் வந்திருக்காது.
முப்பது ஆண்டுகளாக நடந்த மக்கள் தொகைப் பெருக்கத்தையும், அது இயல்பிற்கு மாறாக இடப்பெயர்வின் வழியே பெருகியிருப்பதையும் பார்த்தாலே நாம் புரிந்துகொள்ள முடியும்.
முப்பதே ஆண்டுகளில் மக்கள் தொகையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம்
- இந்தியாவில் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட 1991-ம் ஆண்டு எடுக்கப்பட்ட, ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர் செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 46,53,593 ஆகும்.
- அதில் இருந்து பத்தாண்டுகளில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் என்று பிரிக்கப்பட்ட பின்னர் 2001-ன் மக்கள் தொகை காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொகை 28,77,468 ஆகவும், திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 27,54,756 ஆகவும் அதிகரித்தது.
- கிட்டத்தட்ட பழைய செங்கல்பட்டு மாவட்ட நிலப்பகுதிக்குள் 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்னர்.
- 2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பினை எடுத்து பார்த்தால், இரண்டு மாவட்டங்களிலும் சேர்ந்து முறையே 37,28,104 + 39,98,252 =77,26,352 ஆக உயர்ந்திருக்கிறது.
- இருபது ஆண்டுகளில் ஒரு சிறிய பகுதியை நோக்கி முப்பது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.
இது இயல்பான வளர்ச்சி அல்ல. உதாரணமாக நெல்லை மாவட்டத்தில் 2001-ல் மக்கள் தொகை 27,23,988. 2011-ல் 30,77,233 என்றுதான் மாறி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் 24,18,366 லிருந்து 27,22,290 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாம் கூடுதலாக தேடிச் செல்கிறபோது, இந்த மாவட்டத்தில் சென்னை மாநகரில் அங்கமாகவும், புறநகர் பகுதியாகவும் இருக்கும் பகுதிகளில் இந்த மக்கள் பெருக்கம் நிகழ்ந்திருப்பதும், அவைதான் இந்த பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பேரிடரில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதையும் அறியமுடியும்.
நீர் வழித் தடங்களால் சூழப்பட்ட அழகு நகரமாக இருந்திருக்க வேண்டிய சென்னயின் சாபமாக அதே நீர் வழித்தடங்கள் மாறியிருக்கின்றன.