சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தீவிரமான பரப்புரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். திமுக டி.ஆர்.பாலு தலைமையில் ஆ.ராசா, பேராசிரயர்  அ.ராமசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தேர்தல் அறிக்கை தயாரிக்க நியமித்துள்ளது. காங்கிரஸ் ,அதிமுக என அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

புதுமையான தேர்தல் அறிக்கை

தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதுமையான செயலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த தேர்தலில் துவங்கி வைத்துள்ளது. தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைத்த வளர்ச்சியை  நோக்கிய திட்டமிடலுக்கு ஏற்றார்போல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அரசு சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021 என்பதை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையினை அனைத்து அரசியல் கட்சியினரையும் நேரில் சந்தித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளித்து வருகிறார்கள். 

இதர தேர்தல் அறிக்கைகள்

மேலும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திஃபேன் தலைமையில் மனித உரிமைக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம், பண்பாடு மற்றும்  கலைத்துறையினரும் தேர்தல் கோரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவினர்

சுற்றுச்சூழல் அறிஞர் பேரா.சுல்தான் இஸ்மாயில், நீரியல் அறிஞர் பேரா.ஜனகராஜன்,  உயிர்ம விவசாய அறிஞர் பாமயன், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், பேரிடர் மேலாண்மை ஆலோசகர் சுரேஷ் மரியசெல்வம், சமூக செயற்பாட்டாளர் நித்தியானந்தன் ஜெயராமன், சமுக செயற்பாட்டாளர் பிரியா பிள்ளை, பூஜா, ஆய்வாளர் விஜய்சங்கர், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், வழக்கறிஞர்கள் சுந்தராஜன் மற்றும் வெற்றிச்செல்வன்,  சூழலியல் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு இந்த அறிக்கையில்  பங்களிப்பு செய்துள்ளனர்,

என்னென்ன மேற்கொள்ளப்பட வேண்டும்?

  • சூழலியல் கொள்கைகள், 
  • காலநிலை மாற்றம், 
  • நீர்வளம், 
  • வேளாண்மை, 
  • மின்ஆற்றல் உற்பத்தி, 
  • காற்று மாசு, 
  • சதுப்பு நிலங்கள், 
  • மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வனவுயிர் பாதுகாப்பு, 
  • கடலோரப் பகுதிகள் மீன்வளம், 
  • போக்குவரத்து, 
  • சுகாதாரம் ஒருங்கிணைந்த நலன், 
  • தொழிற்சாலை மாசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகள்,
  • கழிவு மேலாண்மை, 
  • பேரிடர் மேலாண்மை, 
  • கட்டுமானம், 
  • பசுமைத் தொழில் 

என்று பதினாறு தலைப்புகளில் தமிழகத்தில் உள்ள சிக்கல்களில் செய்ய வேண்டியவை குறித்து கூறப்பட்டுள்ளது.

  • அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளபடி இயற்கை வளங்களின் பயன்பாடு அனைத்தும் தரப்பு மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். இதை நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கான தனித்துவமான சூழலியல் கொள்கை உருவாக்கபட வேண்டும் என்று துவங்கிறது அந்த அறிக்கை. உணவு இறையாண்மை, விவசாயிகளின்  வாழ்வுரிமை ஆகிவற்றைப் பாதுகாக்கக் கோருகிறது. திட்டங்களை நடைமுறைபடுத்தும் முன் மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
  • பாரிஸ் ஒப்பந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் 2040-ம் ஆண்டிற்கு முன் கார்பன் சமநிலையை அடைவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் கோருகிறது. காலநிலை மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சி மையங்கள் மாவட்டம்தோறும் உருவாக்கப்பட வேண்டும். இளம் வயதிலேயே சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க  ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை காலநிலை மாற்றம் குறித்த பாடங்களை இடம்பெறச் செய்யக் கோருகிறது. 
  • கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை பேரிடர்கள் நடைபெறுவதை கணக்கில் கொண்டு வானிலை, மழைப்பொழிவு, விவசாயம், கடல்வளம் என தமிழகத்திற்கு தேவைப்படும் தகவல்களைப் பெற தனி செயற்கைகோளை ஏவிட கோரிக்கை வைக்கிறது. கடல் வளத்தைக் கெடுக்கும் கடல் நீர்  சுத்திரிகரிப்பு ஆலைகளை கைவிட வேண்டும் என்பது  உட்பட 15 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது இந்த அறிக்கை.
  • தமிழகத்திற்கு தனியான  நீர்வள அமைச்சகம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் அந்தந்த பகுதி மக்களை உள்ளடக்கிய நீர்நிலை பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்.
  • நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், சிற்றூர், ஒன்றிய, மாவட்ட அளவில் உயிர்ம வேளாண் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
  • நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாக்க உயிரினப் பூங்காக்கள் அமைக்க வேண்டும். அனைத்து  தானியங்களையும், காய்கறிகளையும் குறைந்தபட்ச ஆதார விலை அடைப்படையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஆதார விலையை தேசிய விவசாயிகள் ஆணையம்  அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி படி உருவாக்க வேண்டும் என்று விவசாயிகளின் வாழ்வாதராத்தைப் பாதுகாக்கவும், வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கும், நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவும் முப்பது கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • குவிக்கப்பட்ட மின்னுற்பத்தி கொள்கைகளிலிருந்து பரந்துபட்ட மின் உற்பத்தி கொள்கைக்கு மாற வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து மக்களுக்கும் சூரிய மின்தகடும், எல்.இ.டி விளக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று சமூக முன்னேற்றத் திட்டங்களை முன்வைக்கிறது. இந்த அறிக்கை எரிசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை விடுவித்து பொதுப்பங்களிப்பை அதிகரிக்கக் கோருகிறது. உப்பூர், உடன்குடி, நெய்வேலி, எண்ணூர் விரிவாக்கங்களை கைவிட வேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரிக்க சூரிய மின்சக்திக்கு படிப்படியாக மாற்ற வேண்டும். தங்கள் தேவைக்கு அதிகமாக தயாரிக்கும் மின்சாரத்தை மாநில மின்வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என்று நிலைத்த வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய 20 கோரிக்கைகளை முன்வைக்கிறது. 
  • காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் பசுமை பூங்காக்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த ஐந்து கோரிக்கைகளையும், பள்ளிக்கரணை, பிச்சாவாரம், பழவேற்காடு, காட்டுப்பள்ளி, அடையாறு உள்ளிட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த  சதுப்பு நிலங்களை பாதுகாக்கபட்ட சூழல் மண்டலமாக அறிவிக்கவும் கோருகிறது.
  • மாதவ் காட்கில் அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க சிறப்பு சட்டம், யானைகளின் வலசை பாதைகளைப் பாதுகாக்க தனி சட்டம்  வேண்டும். தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள்  அடையாளம் காணப்பட்டு அவை செழிக்க சிறப்பு திட்டங்கள் வேண்டும்  என்பது உட்பட மலை, நீர்நிலைகள், வனவுயிர் பாதுகாப்பு போன்றவற்றிற்கு 20 கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர்.  
  • இது இல்லாமல் கடலோரப் பகுதிகளின் மீன் வளம், போக்குவரத்து, சுகாதாரம் ஒருங்கிணைந்த நலன், தொழிற்சாலை மாசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகள், கழிவு மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, கட்டுமானம், பசுமைத் தொழில் என்று மீதம் உள்ள தலைப்புகளிலும் தமிழகத்தின் சூழல் மற்றும் மக்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழ்நாடு நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடையவும் தேவையானவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர்,

தமிழகத்தில் ஆட்சியில் அமர இருப்பவர்கள் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு பூலகின் நண்பர்கள் அமைப்பினர் தயாரித்துள்ள இந்த சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை நடைமுறைப்படுத்தவும் வேண்டியது முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *