மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக கவிஞர் யுகபாரதியின் எழுத்துகளில் பண்டாரத்திப் புராணம் எனும் பாடல் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியான “கண்டா வரச் சொல்லுங்க” எனும் பாடல் மாரி செல்வராஜின் எழுத்தில் வெளிவந்து அனைவராலும் விதந்து பேசப்பட்டது. அப்பாடல் நாட்டார் தெய்வ மரபின் குறியீடுகளைக் கொண்டே எழுதப்பட்டிருந்தது.
“ஊரெல்லாம் கோயிலப்பா, கோயிலெல்லாம் சாமியப்பா;
ஒத்த பூடம் கூட இல்லையப்பா, எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா;
கண்டா வரச் சொல்லுங்க, கர்ணன கையோட கூட்டி வாருங்க;”
என்று ஒவ்வொரு வரியும் நாட்டார் மரபினை எதிரொளிக்கும் விதமாகவே அமைக்கப்பட்டிருந்தது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தங்கள் ஆதர்ச தலைவர்களை இப்பாடலின் வரிகளுக்கு பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
பண்டாரத்தி புராணம்
’பண்டாரத்தி புராணம்’ பாடலும் நாட்டார் தெய்வ மரபு, காதல், ஆணவக் கொலை என பல்வேறு சமூக அரசியல் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவந்து ஏராளமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
”பண்டாரத்தி எனும் காலப்பறவை ஏமராஜாவின் மாடவிளக்கான கதை” என்று ஆணவக் கொலையின் கதையைப் பேசி துவங்குகிறது. ”காலசாமி கோயிலில சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம்” என்று சாதி மறுப்பு காதல் திருமணத்தின் கதையைப் பேசத்துவங்கி, ”பாதகத்தி சாதி சனம் வேலெடுத்து வருமுன்ன, வாளெடுத்து சண்டையிட வாசலில காத்திருந்தேன்.” என்று அந்த கதைப்பாடல் வலியோடு விரிகிறது.
பண்டாரத்தி புராணம் உருவாக்கம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ள பாடலாசிரியர் யுகபாரதி, வாய்மொழி கதைகளால் விரிந்த மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் எண்ணுமளவிற்கு கலை இலக்கியவாதிகள் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லையோ எனத் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுகபாரதி அவர்களின் முழுமையான பதிவு பின்வருமாறு
கதைப்பாடல்களுக்கு நாட்டுப்புற இலக்கிய மரபில் தனி இடமுண்டு. வாழ்ந்து மறைந்தவர்களின் வீரத்தையும் பிரதாபத்தையும் சொல்லக்கூடிய அப்பாடல்களின் வழியே கட்டமைக்கப்பட்ட வரலாறுகள் எண்ணிலடங்காதவை.
நல்லதங்காள், கட்டபொம்மன், முத்துப்பட்டன், சின்ன நாடான், மம்பட்டியான், வெங்கலராசன், கௌதல மாடன், மதுரை வீரன், இமானுவேலர், காத்தவராயன், பூவையார், கள்ளழகர், பசும்பொன்னார், மணிக்குறவர் என பலரையும் கதைகளின் மூலமும் பாடல்களின் மூலமே அறிந்த காலம் ஒன்றுண்டு.
இன்று பாடலில் கதை சொல்லவோ அக்கதைகளின் ஊடாகச் சமூக அரசியலைக் கற்பிக்கவோ வழியில்லை. வாய்மொழிக் கதைகளால் விரிந்த மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் எண்ணுமளவுக்குக் கலை இலக்கியவாதிகள் நாட்டார்க் கதைப்பாடல்களைக் கவனிக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.
நாட்டார் மரபின் தொடர்ச்சியை திரைப்பாடலாக்குவதில் பெருவிருப்பமுடையவன் மாரி
இத்துறையில் பெரும்கவனம் ஈர்த்த தொ.பரமசிவமும், அ.கா.பெருமாளும் செய்துள்ள ஆய்வுகள் முக்கியமானவை. நாட்டார்த் தெய்வங்களின் வரலாற்றையும் பின்னணிக் கதைகளையும் ஆய்ந்து வருபவர்களில் என்னைக் கவர்ந்தவர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம். அவரது நூல்கள் பொக்கிஷங்கள். புனைவுகளுக்கு வழிவிடும் வகையிலான துப்பறிதல்கள்.
வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகளே வரலாறாகின்றன. தம்பியும் இயக்குநருமான மாரிசெல்வராஜ், நாட்டார் மரபின் தொடர்ச்சியைத் திரைப்பாடலிலும் கொண்டுவருவதில் பெருவிருப்பமுடையவன்.
அழித்தொழிக்கப்பட்டுவரும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை, சமூக அரசியலின் சரடுகளைத் திரையிலும் மீட்டெடுக்கும் திட்டமுடையவன். அதுபடி, பண்டாரத்திப் புராணத்தை பாடலாக்கித் தர வேண்டினான். மாரியின் பாட்டி பெயரும் தமக்கை ஒருவரின் பெயரும் அதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இப்பவும் அனைத்துத் தரப்பாரும் ஆசையுடன் இட்டுக்கொள்ளும் பெயர்களில் அதுவும் ஒன்று.
இது, முழுக்க முழுக்க காதலின் வெம்புதலில் கிளைத்த உக்கிர புராணம். அயோத்திதாசப் பண்டிதர், இம்மண்ணில் பரவிய சனாதன சடங்குமுறையைக் கேள்விகேட்க, பெளத்தத்தின் துணைகொண்டு சில புராணங்களை ஆக்கி அளித்திருக்கிறார். `பண்டாரத்திப் புராணம்’, மாரியும் நானுமாகக் காதலுக்கு உருவாக்கித் தந்துள்ள கற்பனை வடிவம்.
சமூக நீதியின் உட்கிடக்கை
இப்புராணத்தில் சமூகநீதியின் உட்கிடக்கை பொதிந்திருக்கிறது. காதலுக்காக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் அவை எழுப்பும் அச்ச உணர்வுகளையும் தொட்டுக்காட்டியிருக்கிறோம். `கண்டா வரச்சொல்லுங்க’ மூலம் கிடக்குழி மாரியம்மாள் வெளிச்சமேடைக்கு வந்ததுபோல் இப்பாடல்மூலம் நாதஸ்சுர இசைக்கலைஞர் மருங்கன் மகிழ்வெய்துவார்.
பண்டாரத்திகளின் காதலில் ஏமராஜாக்கள் எழுந்துவரட்டும். காதலே ஜெயமென்று வாலி ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். கர்ணனோ காதலே நிஜமென்று கனன்று எரிகிறான். தழல் காதலில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?