கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால், உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த இயலாமல் விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளுடைய குடும்பத்திற்கு ஏற்பட்ட பட்டினி நிலைமையும், அடுத்த வேளாண் பருவ விதைப்புக்கான பணமின்மையும் விவசாயிகளை மரணத்தை நோக்கி தள்ளியிருக்கிறது.
விவசாயிகளின் இழப்பிற்கான காரணங்கள்
குளிர்கால விதைப்புப் பயிர்களின் அறுவடையை கொரோனா- ஊரடங்கு முடக்கிப் போட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஊரடங்கினால் போதிய விவசாயத் தொழிலாளர்களின்றி விளைபொருட்களை அறுவடை செய்ய இயலாமலும், போக்குவரத்து கட்டுப்பாடுகளினால் அறுவடை செய்த விளைப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப முடியாமலும், சந்தைகள் இயங்குவதில் நிலவிய கட்டுப்பாடுகளும் விவசாயிகளினுடைய வருமான இழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளன. 60 சதவீத விவசாயிகள் வருமான இழப்பிற்கு ஆளாகியிருப்பதாக கருத்துக் கணக்கெடுப்பொன்று தெரிவித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் நிலை குறித்து ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் ஹார்வர்ட் டி. ஹெச் சான் பொது சுகாதாரப் பள்ளி மற்றும் இந்திய பொதுச் சுகாதார அறக்கட்டளை, நீடித்த நிலையான வேளாண் மையம் (Harvard TH Chan School of Public Health, Public Health Foundation of India and Centre for Sustainable Agriculture), விவசாயிகளிடையே கருத்துக் கணக்கெடுப்பை நடத்தியது. இந்தியாவின் 12 மாநிலங்களிலுள்ள 200 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 விவசாயிகளிடம் இக்கருத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இக்கருத்துக் கணக்கெடுப்பின் முடிவில் 40 சதவீத விவசாயிகளுக்கு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காதது, விளைபொருட்களை சேமித்து வைக்க இயலாதது, போக்குவரத்து இல்லாதது போன்ற காரணங்களால் விளைபொருட்களின் அறுவடை அளவை இழந்திருக்கின்றனர்; உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
30 சதவீத விவசாயிகளினால் ஊரடங்கின் காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய இயலவில்லை. அறுவடை செய்த 63 சதவீதத்தினரிலும் 44 சதவீதத்தினர் மட்டுமே விளைபொருட்களை சந்தைப்படுத்தியுள்ளனர்; 12 சதவீதம் பேர் சந்தைப்படுத்த இன்னும் முயன்று கொண்டுள்ளனர்; 22 சதவீத விவசாயிகள் அறுவடை செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் தங்களிடத்திலே சேகரித்து வைத்துள்ளனர்.
பீகார் மற்றும் ராஜஸ்தானில் முறையே 83, 86 சதவீத விவசாயிகள் கோதுமையை அறுவடை செய்துள்ளனர். அவர்களில் முறையே 18, 10 சதவீததினர் மட்டுமே அறுவடை செய்த கோதுமையை சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது.
அறுவடை செய்த பெரும்பாலான விவசாயிகள் கடந்த அல்லது வழக்கமான அறுவடை காலங்களை விட தற்போது கூடுதல் செலவு செய்து அறுவடை செய்துள்ளனர். ஊரடங்கு காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடே கூடுதல் அறுவடை செலவுக்கான காரணமாகும்.
தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரையில், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட விற்பனைக்கான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் காய்கறிச் சந்தைகள் இயங்குவது குறைந்ததன் காரணமாக, குறைந்த அளவே சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்த 81 சதவீத விவசாயிகளில் 19 சதவீதத்தினரால் மட்டுமே சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் காய்கறிகளை சந்தைப்படுத்திய விவசாயிகளின் எண்ணிக்கை குறிப்பிடும்படியான அளவிற்குக் கூட இல்லை.
இறைச்சி விற்பனை சார்ந்த ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளில் 63 சதவீதத்தினருக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது,
கொரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் மாத இறுதியில் தொடங்கி அடுத்தடுத்த ஏப்ரல், மே மாதங்கள் விவசாய விளைபொருட்களின் அறுவடை மற்றும் விற்பனை காலமாகும். நெல், கோதுமை போன்ற தானியப் பயிர்கள் மற்றும் மா, தர்பூசணி உள்ளிட்ட கோடைகால விற்பனைப் பயிர்களின் அறுவடைகள் நடைபெறும் சமயத்தில் தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அரசினால் வெளியிடப்பட்ட ஊரடங்கு அறிவிப்பில் கோடைகால விவசாயப் பணிகள் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை. ஊரடங்கு நடைமுறைக்கு வந்த சில நாட்களுக்குப் பின்னர் விவசாய பணிகளுக்கு, போக்குவரத்துகளுக்கு தடையில்லை என அரசு அறிவித்த போதும் யதார்த்தத்தில் இப்பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டது. அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் அரிசி, கோதுமையை விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்பும் கூட, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை விற்பனை செய்வதற்கு கிடைக்கவில்லை.
இந்திய அரசின் அலங்கரிக்கப்பட்ட அறிவிப்புகளின் உண்மை மதிப்பு என்ன?
இந்நிலையில்தான் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரண உதவித் திட்டங்களை அரசு அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த திட்டங்கள் தானேயொழிய, கொரோனா ஊரடங்கிற்கான சிறப்புத் நிவாரணத் திட்டங்கள் கிடையாது. முதல்கட்ட நிவாரண உதவியாக அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடி நிவாரண நிதி தொகுப்பில் விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை இரண்டு ஆயிரம் வீதம் ஆண்டுக்கும் ஆறாயிரம் வழங்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியைத் தான் விவசாயிகளுக்கான கொரோனா நிவாரண நிதியாக அரசு அறிவித்தது. ஊரடங்கே இல்லாமல் இருந்திருந்தாலும் விவசாயிகள் குறிப்பிட்ட இரண்டாயிரம் ரூபாய் நிதியை பெற்றிருப்பர்.
அடுத்ததாக அரசினால் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி ”ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” நிவாரணத் தொகுப்பிலும், விவசாயிகள் தொடர்பாக இதே நிலையே நீடித்தது. வழக்கமாக விவசாயிகளிடமிருந்து அரசு செய்யும் தானியக் கொள்முதலையும், பால் கொள்முதலையும் கொரோனா- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு செய்த நிவாரணமாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார். நடைமுறை செயல்பாட்டில் இருந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெற்ற இழப்பீட்டை, அரசின் ஊரடங்கு நிவாரணமென உரிமை கோரினார்.
விவசாயக் கடன் அறிவிப்புகளின் மதிப்பு
மார்ச், ஏப்ரல் மாதங்களில் விவசாயிகளுக்குக் கடனாக 86 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதை ஆத்ம நிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் கீழ் அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் 2021 நிதியாண்டிற்குள் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாதமொன்றிற்கு 1.25 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய 2.5 லட்சம் கோடி கடனில் வெறும் 86,000 கோடி கடனை மட்டும் கொடுத்து விட்டு அதனை கொரோனா ஊரடங்கு நிவாரணமாக அரசு குறிப்பிடுகிறது.
அதேபோல் (வடநாட்டு விவசாயப் பருவக் காலங்களான) ராபி பருவத்திற்கு பின்னரான மற்றும் கரிப் பருவக்கால விவசாய பணிகளுக்கான கடன் தொகை ஒதுக்கீடாக நபார்டு வங்கி ஒதுக்கியுள்ள 90,000 கோடி ரூபாய் கடனைப் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், 30,000 கோடி ரூபாய் கடனை நபார்டு வங்கியின் மூலம் கொரோனா ஊரடங்கு நிவாரணமாக வழங்குவோமென்று அரசு அறிவித்தது.
கோரொனா ஊரடங்கால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கான குறிப்பிடும்படியான சிறப்பு இழப்பீட்டுத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, விவசாயிகளுக்கான இழப்பை அரசு ஈடு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஊரடங்கில் விவசாயிகளது இழப்பை தவிர்த்திருக்கூடிய திட்ட செயல்முறைகளும் கூட ஊரடங்கு அறிவிப்பின் போது அரசிடம் இல்லை.
ஊரடங்கு செயல்முறையில் விவசாயிகளது தரப்பை அரசு கவனத்தில் எடுத்திருக்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை தவிர்த்திருக்க முடியும். ஊரடங்கு அறிவிக்கப்படும் பொழுதே விவசாயிகளுக்கான இழப்பை தவிர்திருக்கக்கூடிய திட்ட செயல்முறைகளை அரசு செயல்படுத்தத் தவறிவிட்டது. உற்பத்தி செய்த விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய வழியில்லாத விவசாயிகள் ஒருபுறம், அன்றாட காய்கறித் தேவைகளை வருமானமில்லாத ஊரடங்கு நாட்களில் விலை கொடுத்து பெற முடியாத சாமானிய மக்கள் மறுபுறம் என விவசாய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் சந்தித்த இழப்பை அரசு இடையீடு செய்து நீக்கியிருந்தால் இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டிருக்காது.
இன்றைய தொழில்நுட்ப யுக காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக வேளாண் துறை இருக்கிறது, இந்திய மக்கள் தொகையின் 42 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இருந்த போதும் அரசு தம் கொள்கை முடிவுகளில் புறக்கணிக்கும் துறையாக வேளாண் துறை இருந்து வருகிறது. இதன் காரணமாக சமூகப் பொருளியல், வருமான சமமின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்; இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையுள்ளது. அரசின் வேளாண் சமூக புறக்கணிப்பு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேலும் அதிகரித்திருப்பதையே மார்ச், ஏப்ரல் மாதத்தில் மரத்வாடா பகுதியின் 109 விவசாயிகளது மரணம் வெளிப்படுத்தியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் விதை, இடுபொருட்கள் விலையேறும் பட்சத்தில் விவசாயிகள் தரப்பு இன்னும் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கொரோனா ஊரடங்கிற்குப் பின்னரான காலத்திலாவது அரசு விவசாயிகளை காக்குமா?