தண்ணீர்

பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்

2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு விதமான நிகழ்வுகள் எவருடைய மனதையும் விட்டு அகலாது. கொரோனா பெருந்தொற்று நோயால் உலகமே தனது இயக்கத்தை சட்டென்று நிறுத்தியதும் அதன் பின்னால் நடைபெற்ற முழுமுடக்கமும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நினைவுகளை தந்திருக்கின்றன. பிரபலங்கள் முதல் சாமானியன் வரை பலபேருடைய இழப்புகள் கண்முன்னே பார்த்திருக்கிறோம். 2020-ம் ஆண்டில் எது நிகழ்ந்தாலும் அது விநோதமாகவே தோன்றவில்லை. இந்த ஆண்டின் இயல்பான நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். 

மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.

ஆம். மேலே சொன்னது கற்பனையல்ல. அப்படியென்ன மிகப்பெரும் தாக்குதல் என்று கேட்பீர் எனில் “முதல் முறையாக நீருக்கு விலை வைத்திருக்கிறார்கள்” உலகின் மிகப்பெரிய வணிக சந்தையில். இதன் முக்கியத்துவம் என்ன..? பார்ப்போம்.

உலகின் மிகபெரும் வணிகப் பொருள் எது?

உண்மையில் உலகில் விலை வைக்க இயலாத பொருளாக, அனைத்து உயிர்களுக்குமானதாக ஒன்று இருக்குமானால் அது ‘நீர்’ தான். அதனால் தான் “நீரின்றி அமையாது இவ்வுல‌கு” என்று பொதுமறை வள்ளுவம் கூறுகிறது. கடுந்தாகத்தில் ஒருவன் தவிக்கும்போது நீரைத் தவிர எதுகொடுப்பினும் மறுக்கக்கூடும். நீருக்கு இணையான ஒன்று இவ்வுலகில் இல்லை.

உலகின் விற்கப்படும் மிகப்பெரும் வணிகப் பொருள் என்னவென்றால் அதிகாரபூர்வமாக எல்லோரும் அறிந்தது அது “கச்சா எண்ணெய்”. கச்சா எண்ணெய் அதிகாரப்பூர்வமாக விலை குறிப்பிட்டு உலகின் மிகப்பெரிய வணிக சந்தையான CME  எனப்படும் “சிகாகோ மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச்” (Chicago Mercantile Exchange) வணிக சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் நடைபெறுகிறது. 

ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் உண்மையிலேயே உலகின் மிகப்பெரிய வணிக பொருள் என்னவென்றால் “தண்ணீர்” தான். ஏனெனில் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் அடிப்படை நீர். ஒரு பொருளை உற்பத்தி செய்யவோ, பயிரை விளைவிக்கவோ தேவையான அடிப்படை ‘நீர்’.

நேரடியாக நம் வீடு முதல் தொழிலகங்கள் வரை அடிப்படையான செயல்கள் எல்லாம் நீரை முதலாகக் கொண்டே நடைபெறுகிறது. இப்படி நேரடி பயன்பாடு மட்டுமல்லாமல் இங்கு பயிரிடும் எந்தவொரு தானியங்கள், விளைபொருட்கள் அல்லது பொருட்கள் ஆகிவற்றை ஏற்றுமதி செய்யும்போது மறைமுகமாக அவற்றை உருவாக்க நாம் செலவழிக்கும் நீரையும் ஏற்றுமதி செய்வதாகத் தான் அர்த்தம் .இதை ‘மறை நீர்” (Virtual Water)  என்கிறார்கள். இந்த அடிப்படையிலும் பார்த்தோமானால் உலகில் அதிகம் வர்த்தகமாகக்கூடிய பொருள் ‘நீர்’. எனலாம்.

1% நீரே நம் தேவைகளுக்கான ஆதாரம்

உயிர் வாழ்வதற்கான அடிப்படையான நீர் இப்போது முதல்முறையாக வணிகப் பொருளாக பட்டியலிடப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது . தண்ணீர் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையில் தலையாயது. இந்த பூமிப்பந்தானது 71% சதவிகிதம் நீராலானது. இந்த 71% சதவிகிதத்தில் 96.5% சதவிகித நீரானது உலகத்தின் சமுத்திரங்களில் நிறைந்துள்ளது. வெறும் 3.5% சதவிகித நீரே பயன்பாட்டிற்கு ஏற்றது. இந்த 3.5% சதவிகிதத்திலும் அதன் 69% சதவிகித நன்னீர் பனிப்பாறைகளில் உறைந்து காணப்படுகிறது. மேலும் 30% சதவிகிதம் நிலத்தின் அடியில் தேங்கியிருந்தது. அதை துளையிட்டு உறிஞ்சியெடுக்க மிகுந்த பொருட்செலவு ஆகும். இறுதியாக இருக்கும் 1% சதவிகித நீரே

நம் எல்லோருக்குமான தேவையாக இருக்கிறது என்றால் அதன் முக்கியத்துவத்தை உணரலாம். 

இந்த 1% சதவிகித நீரே நமது அடிப்படை தேவைகள், விவசாயம், பொருள் உற்பத்தி என அனைத்திற்குமான ஆதாரமாக இருக்கிறது. (ஆதாரம் – அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் – usgs.gov). இந்த முக்கியத்துவத்தை தனக்கான பொருள் வரவாகப் பார்க்கிறது உலகின் பெருவணிக நிறுவனங்கள்.

நீரின் மதிப்பை குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் NQH2O என்ற குறியீட்டெண்

இப்போது பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த நீர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த நீர் பயன்பாட்டில் கலிஃபோர்னியா மாகாணம் 9% சதவிகிதத்தைப் பயன்படுத்துகிறது. காலநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், விவசாய உற்பத்தி என மூன்று அடிப்படை காரணிகளை கொண்டு விலை நிர்ணயித்திருப்பதாக அதன் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பட்டியலிடப்பட்டிருக்கும் நீர் ‘NQH2O’ என்ற குறியீட்டெண்களின் பெயரால் குறிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் நான்கு மிகப்பெரிய ஆற்றுப்படுகைகளான  மத்திய ஆற்றுப்படுகை (Central Basin) , சீனோ ஆற்றுப்படுகை (Chino Basin), சான் கேபிரியல் ஆற்றுப்படுகை (Main San Gabriel Basin) மற்றும் மஜாவே ஆற்றுப்படுகை (The Mojave Basin) இவற்றின் அருகில் இருக்கக்கூடிய நிலப்பகுதியின் நீர்வளத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. 

அங்கு 2012-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை $2.6 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 260 கோடி மதிப்பில் நீர் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பை பணமாக மாற்றவேண்டும் என்ற வேட்கையே இப்படி மனிதகுலத்தின் மீது மட்டுமல்ல உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களின் மீதான தாக்குதலாக எழுந்து நிற்கிறது.

கச்சா எண்ணெயைப் போன்று நீருக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அடிப்படை விலை

அங்கு ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு அடி கனநீள ஆழத்தில் 3,25,851 காலன் நீர்(12,33,480 லிட்டர்) இருப்பதாக கணக்கில்கொண்டு அதை விலைக்கான அடிப்படை கணக்கீடாக வைத்திருக்கிறது வர்த்தக சந்தை.

இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதியில் (31/10/2020) அறிமுகமாகியுள்ள நீர் குறியீட்டெண் அறிமுகநாளில் ஒரு ஏக்கர் நிலத்தில் $371.11 மதிப்பில் அதாவது 27,365 ரூபாய் மதிப்பை அடிப்படை விலையாக  கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த கட்டுரை எழுதப்படும் நாளின் (11/12.2020) NQH2O  குறியீட்டெண்ணின் மதிப்பு $489.11 டாலர் அதாவது 36,066 இந்திய ரூபாய். இதன்படி அதிகாரப்பூர்வமாக ஒரு லிட்டர் நீரின் விலை 34 ரூபாய். இனி படிப்படியாக அனைத்து நாடுகளும், பெரும் வணிக நிறுவனங்களும் நீரின் வர்த்தகத்தில் இறங்கக்கூடும். இது நேரடியாக அரசுகளுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்து மக்களுக்கு அதன் சுமைகள் இறங்கக்கூடும். மனிதர்களின் பயன்பாட்டிற்கான நன்னீரே இந்த விலை குறியீடுகள் மூலம் நசுக்கப்படும்போது, இந்த பூவுலகில் வாழும் மற்ற உயிர்கள் என்னவாவது?

இந்த வர்த்தக சந்தை எனப்படும் கமாடிட்டி சந்தையைப் (Commodity exchange) பற்றி எழுதினால் மிகப்பெரிய கட்டுரையாக நீளும் என்பதனால் தேவைப்படும் தகவல்களை இப்போது கொடுத்திருக்கிறோம். உன்மையில் அந்த சந்தையின் அடிப்படை தகவல்களை அறிந்தால் மட்டுமே விரிவாக அறிவதற்கு ஏதுவாக இருக்கும். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தேவையான விளக்கங்களை பின்பு தருகிறோம்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

One Reply to “பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்”

  1. இது முதலாளித்துவத்தின் உச்சநிலை ,இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம் என்பதை மறந்த்தன் விளைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *