பரோட்டாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது எனலாம். அந்த அளவிற்கு சால்னாவோடு கலந்து கமகமவென சுண்டியிழுக்கும் தன்மையுடையது பரோட்டா. அனைத்து நேரங்களிலும் உணவு விடுதிகளில் கிடைக்கக் கூடிய உணவு. அன்றாட உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் பசியாற்றும் உணவுப் பொருளாகவும் இருக்கிறது. பல முக்கிய நகரங்களில் பரோட்டாவிற்கென புகழ்பெற்ற உணவு விடுதிகளும் உண்டு.
பரோட்டாவின் சுவை அறிந்த நாம் அதனுள் இருக்கும் ஆபத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கோதுமையிலிருந்து மைதா தயாரிக்கப்படுகிறது. இதில் என்ன ஆபத்து இருக்கப்போகிறது என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆபத்து கோதுமையிலோ அல்லது மைதாவிலோ அல்ல. அதில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் தான்.
பென்சாயில் பெராக்ஸைடு( Benzoyl peroxide)
கோதுமையிலிருந்து தயாரிக்கப்டுகிற மைதா மாவை வெண்மை நிறமாக மாற்றுவதற்காக பென்சாயில் பெராக்ஸைடு என்ற இந்த ரசாயன மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது தோல் தொடர்பான தொந்தரவுகளுக்காகவும், முகப்பூச்சுகளுக்கு, முடி நிற மாற்றத்திற்கான பூச்சு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெளிப்பயன்பாடு கூட மருத்துவர்களின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சற்று அளவு கூடும்போது தோலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவை தொடர்ந்து உண்ணும்போது உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படுகிறது.
அலாக்சன் (Alloxan)
மனித உடலில் ஏற்படும் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் முதலில் விலங்குகளில் ஆய்வை மேற்கொள்கின்றனர். எந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமோ, அந்த நோயை சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்படுகிற எலி, குரங்கு போன்ற விலங்குகளுக்கு வரச் செய்து பிறகு மருந்தை செலுத்தி ஆய்வு செய்யப்படுகிறது. இப்படி ஆய்வுக்கூடங்களில் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்படும் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் மருந்து அலாக்சன்.
இந்த மருந்தை,தேர்ந்தெடுக்கப்படும் விலங்கிற்குள் செலுத்தும்போது அந்த விலங்கின் கணையம் தாக்கப்பட்டு இன்சுலின் சுரப்பு நிறுத்தப்படுகிறது. பிறகு சர்க்கரை நோய்க்கான மருந்து செலுத்தப்பட்டு மருந்தின் திறன் சோதிக்கப்படுகிறது. இந்த அலாக்சன் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் இன்சுலின் சுரப்பை நிறுத்தச் செய்வது.
இப்படி கணையத்தைத் தாக்கி இன்சுலின் சுரப்பை நிறுத்தும் ஒரு ரசாயனம் தான் மைதாவின் கடினத் தன்மையை நீக்கி உண்பதற்கு மிருதுவாக மாற்ற பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், இந்த ரசாயன கலப்பு குறித்து ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
பரோட்டா மட்டுமல்லாமல் நாம் உண்ணும் பெரும்பாலான கேக், பன், ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களும் மைதாவால் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து மைதாவில் தயாரிக்கப்படுகிற பொருட்களை உண்ணும்போது கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ரசாயனங்கள் கலக்கப்படாத மைதாவினால் செய்யப்பட்ட உணவுப்பொருள் கிடைக்குமென்றால் தாராளமாக பரோட்டா சாப்பிடலாம். அரசு இதை உறுதிப்படுத்த வேண்டும்.
பரோட்டா சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்களுக்கு மைதாவிற்கு மாற்றாக ஒரு சின்ன டிப்ஸ். ரவை-யை அரைத்து மாவாக்கினால் மைதா தயார். முயற்சி செய்து பாருங்கள்
References:
4. https://www.webmd.com/drugs/2/drug-1344/benzoyl-peroxide-topical/details