1) மாமல்லபுரம் பார்வையாளர்களுக்கு அனுமதி
மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இன்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தளங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை. தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்றும், ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி செல்போனில் பதிவாகியுள்ள நுழைவு சீட்டை காண்பித்து உள்ளே செல்ல முடியும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
2) ஊர் திரும்பிய மீனவர்களை கைது செய்த காவல் துறை
கன்னியாகுமரி மாவட்டம் மேல முட்டத்தைச் சேர்ந்த சகாய ததேயுஸ் ஸ்டீபன், ஜோசப் எட்வின், பிரான்சிஸ், கீழ முட்டம் அல்டோ மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது ரஜிப் உடின் ஆகியோர் ஓமன் நாட்டில் அப்துல்லா கமீஷ் என்பவருக்கு சொந்தமான விசை படகில் பல மாதங்களாக வேலை செய்து வந்தனர்.
அவர்கள் கடந்த 4 மாதங்களாக இந்த மீனவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. பலமுறை கேட்டும் வழங்காததால், மீனவர்கள் இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
அதன் பின் படகு உரிமையாளர் இந்திய தூதரகத்துக்கு எப்படி சென்றீர்கள் என கேட்டு அவர்களை தாக்கி சித்ரவதை செய்துள்ளார். இதற்கு மேல் ஓமனில் இருப்பது உயிருக்கு ஆபத்து என்று கருதிய 5 மீனவர்களும் பாஸ்போர்ட் படகு உரிமையாளரிடமே இருந்ததால், வேறு வழியின்றி படகிலேயே கடந்த 4-ம் தேதி புறப்பட்டனர். அந்த வகையில் சுமார் 2,400 கி.மீ. உயிரை பணயம் வைத்து நேற்று அதிகாலை குமரி வந்து சேர்ந்தனர்.
ஆவணம் இல்லாமலும், அனுமதியின்றியும் குமரிக்கு வந்ததாக குமரி மீனவர்கள் 5 பேர் உள்பட 6 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
3) முதலமைச்சர் வீடு முற்றுகை
பணி வழங்கக் கோரிக்கை விடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டை 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முற்றுகையிட முயற்சி; காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை.
4) பாஜகவினர் மாநில அரசைக் கவிழ்ப்பதில் மும்முரமாக உள்ளனர் – உத்தவ் தாக்கரே
மராட்டிய மாநில அரசை அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் என்றால், அதைவிட மோசமானது உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை தேசத்துரோகி என முத்திரை குத்துவது ஆகும்.
பாஜகவினர் மாநில அரசைக் கவிழ்ப்பதில் மும்முரமாக உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மாநில அரசு செய்த திட்டப்பணிகளைப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை. மகாவிகாஸ் அகாடி அரசு மீது மக்களிடம் எந்த அதிருப்தியும் இல்லை.
5) மம்தா-வைக் கொல்ல சதி
மேற்கு வங்கத்தில் உள்ள பர்கானாவில் நேற்று நடந்த அரசு விழா ஒன்றில் அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி பேசுகையில், ‘‘மேற்கு வங்க அரசியலில் இருந்து மம்தாவை ஒழிக்க பாஜக முயற்சிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், மம்தாவை கொல்வதற்கான திட்டத்தை அக்கட்சி வகுத்துள்ளது. கோடிக்கணக்கான மேற்கு வங்க மக்களின் தாயான மம்தாவை, எங்கள் ரத்தத்தை சிந்தியாவது பாதுகாப்போம்.’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
6) மினி கிளினிக் திறப்பு
காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எளிதாக அளிக்கும் நோக்கில் தமிழக அரசு மினி கிளினிக் திட்டத்தை கடந்த செப்டம்பரில் அறிவித்தது. இந்நிலையில் இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் தொடங்கப்படும் மினி கிளினிக்-களில், சென்னையில் மட்டும் 200 இடங்களில் இந்த கிளினிக்குகள் அமையவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் ராயபுரம், மயிலாப்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட 20 இடங்களில் செயல்படும் மினி கிளினிக், படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7) எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கும் தடுப்பூசி வேண்டும்
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறையினர், ஆயுதப் படையினர், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சி ஊழியர்கள் என 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது கட்டமாக 50 வயதைக் கடந்த 27 கோடி முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் முதற்கட்டப் பட்டியலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை சேர்க்க வேண்டும் என்று ஹரியானா பாஜக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
8) தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் நேற்று 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,98,888 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 10,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9) வஞ்சிக்கப்பட்ட தமிழகம்
மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தை ‘தற்சார்பு இந்தியா’ நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு, இதுவரை 27 மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.9,879.61 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10) மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார்.
கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி, பூம்புகாரில் பிறந்த இவர் வானவில், பாண்டவர் பூமி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, சங்கமம், அழகி, பசும்பொன் உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக இருந்தவர்.
தமிழில் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். மேலும் தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு காலமானார்.