சென்னை கடற்கரை மண்டலத்தில் செயல்பட்டு வரும் அதானி நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை மூடச் சொல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடற்கரை மேலாண்மை சட்ட விதிகளை மீறியுள்ள இந்த எண்ணெய் சேமிப்புக் கட்டுமானங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முறையான காரணங்கள் இன்றி அனுமதி வழங்கியதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இந்த எண்ணெய் கிடங்கு கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமலேயே இந்த கிடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
அதானி குழுமத்துடனான கூட்டு நிறுவனமான கேடிவி ஆயில் மில்ஸ் நிறுவனம்
2016-ம் ஆண்டில் அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கேடிவி ஆயில் மில்ஸ் மற்றும் கேடிவி ஹெல்த் ஃபுட்ஸ் நிறுவனம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடற்கரை மேலாண்மை சட்ட அனுமதி பெறாமல் சென்னையில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்களை கட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து உள்ளூர் மீன்பிடி சமூகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
என்ன சொல்கிறது கடற்கரை மேலாண்மை சட்டம் 2011?
கடற்கரை மேலாண்மைச் சட்டம் 2011-ஐப் பொறுத்தவரை சமையல் எண்ணெய் போன்ற எரிவாயு அல்லாத எண்ணெய்களுக்கான சேமிப்பு கட்டமைப்புகள் கடற்கரைப் பகுதிகளில் கட்டப்படும்போது, அறிவிக்கப்பட்ட துறைமுகப் பகுதிகளுக்குள் (Notified Port Area) தான் இருக்க வேண்டும். அதாவது துறைமுகப் பகுதியில் 7 கி.மீ தூரத்திற்குள் தான் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு துறைமுகப் பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமலே கட்டப்பட்ட கிடங்குகள்
2016-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இத்திட்டதிற்கான அனுமதியை வழங்குவதற்காக பரிசீலித்தது. ஆனால் அனுமதியினை வழங்கவில்லை. இதைப் பொருட்படுத்தாமல் அந்த நிறுவனம் சேமிப்புக் கிடங்கையும், குழாயையும் கட்டியது. இது குறித்தான தகவல் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு 2017-ம் ஆண்டு வந்தபோது உடனடியாக அனைத்து பணியையும் நிறுத்தச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது. மேலும் கடற்கரை மேலாண்மை சட்டம் அனுமதி பெறாமல் மீண்டும் பணியைத் தொடங்க கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
2018-ம் ஆண்டு கடற்கரை மேலாண்மை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம்
2018-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கடற்கரை மேலாண்மை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அந்த திருத்தம் ஒரு கட்டமைப்பினை கட்டியதற்குப் பின்னர் அனுமதி பெற்று கொள்வதற்கு வழிவகுத்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டத்திற்கான அனுமதியை தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை ஆணையத்திடம் இருந்து அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு (Post-facto clearance) பரிந்துரைத்தது.
2019-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி
ஆனால் மார்ச் 2019-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் கே டிவி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து பசுமை தீர்ப்பாயம் இதற்கான தீர்ப்பை 2020-ம் ஆண்டிற்கு ஒத்திவைத்தது.
இறுதியாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை செப்டம்பர் 30, 2020 அன்று அறிவித்தது. கேடிவி திட்டத்திற்கான கடற்கரை மேலாண்மை சட்ட அனுமதி வழங்கியதற்கான சரியான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு
எங்கு சூழலியல் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும், அங்கு சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் விதிமுறையில் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். தேவைக்கேற்றார் போல் விதிமுறைகளை மாற்றி பயன்படுத்தக் கூடாது. இத்தகைய உதாரணங்கள் விதிமுறைகளை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை வழங்கிவிடும். மேலும் கடற்கரை பகுதிகள் முழுவதும் கண்மூடித்தனமாக இத்தகைய கட்டமைப்புகளை அனுமதிப்பது கடலோர சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது பாரம்பரிய மீனவர் சமூகத்தின் நலனை பாதிக்கும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இரண்டு மாதங்களுக்குள் ரூ.25 லட்சம் இழப்பீடு சமர்ப்பிக்கும்படி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதுடன், கடற்கரை மேலாண்மை சட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் அவர்கள் கட்டிய கட்டுமானங்களை மூன்று மாதங்களுக்குள் அகற்றுமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.அப்படி மூன்று மாதங்களுக்குள் கட்டமைப்புகளை அகற்ற நிறுவனம் தவறினால் கட்டமைப்புகளை அகற்ற தமிழக மாநில கடற்கரை மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவதை எதிர்த்து தீர்ப்பாயத்தை அணுகிய கே.ஆர்.செல்வராஜ் குமார், மோங்காபே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். “எதிர்காலத்தில், கடற்கரை சார்ந்த சூழலியலை பாதுகாக்க உது போன்ற சட்டவிரோத செயல்களை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம், இந்த தீர்ப்பு மீனவர் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும். என தெரிவித்தார்.
நன்றி: Scroll.in & Mongabay