அமரீந்தர் சிங்

CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.

சி.பி.ஐ அமைப்பினை ஒரு அரசியல் கருவியாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி, தொடர்ந்து பாஜக அல்லாத மாநில அரசுகள் சி.பி.ஐ-க்கான அனுமதியை ரத்து செய்து வருகின்றன. 

இந்த ரத்து நடவடிக்கைக்குப் பின் பஞ்சாப் மாநிலத்தின் சட்ட எல்லைகளுக்குள் சி.பி.ஐ ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் அம்மாநில அரசிடம் உத்தரவு பெறுவது கட்டாயமாகிறது. இந்த நடவடிக்கையினால் சி.பி.ஐ பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே நடத்தி வரும் விசாரணைகள் மற்றும் அம்மாநில நீதிமன்றங்களால் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்குகள் குறித்தான விசாரணைகளுக்கு எந்த தடையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்  “தில்லி சிறப்பு காவல் அமைப்பிற்கு பிரிவு மூன்றின் கீழ் பஞ்சாப் அரசு வழங்கி இருந்த பொது ஒப்புதல்களை திரும்பப் பெரும் நோக்கில், இனி எந்தவொரு குற்றத்தையும் அல்லது வர்க்க குற்றங்களையும் விசாரிப்பதற்கு ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பஞ்சாப் அரசிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, ஜார்க்கண்ட் முதலிய மாநிலங்கள் சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த பொது அனுமதியை ஏற்கனவே ரத்து செய்துள்ளன.

அனுமதியை ரத்து செய்துள்ள அனைத்து மாநிலங்களும் தெரிவிக்கும் முக்கிய குற்றச்சாட்டு பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் சுயநலத்திற்காக  மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ-யைப் பயன்படுத்தி வருகிறது என்பதாக இருக்கிறது.

டெல்லி சிறப்பு காவல் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் காவல்துறை அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் அதிகாரப் பட்டியலுக்குள் இருப்பதால் குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் விசாரணை நடத்துவதற்கு அந்தந்த மாநிலங்களின் அனுமதி பெறுவதும், அந்த அனுமதியை தொடர்ச்சியாக புதுப்பிப்பதும் கட்டாய நடைமுறையாக உள்ளது. ஆனால் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ(NIA- National Investigation Agency) நிறுவனத்திற்கு இதுபோன்ற எந்த தடங்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு சீக்கிய மத நூலான குரு கிரந்த் சாகிப்-ஐ அவமதித்ததற்காக நடைபெற்ற போராட்டத்தில் இரு சீக்கிய இளைஞர்கள் பர்கரி என்னும் ஊரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற காலத்தில் ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசு வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு சென்றதிலிருந்து பஞ்சாப் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் ஏற்படத் தொடங்கியது. 

இதற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு ஆட்சியை பிடித்தது. 2018-ம் ஆண்டு முதல்வர் அமரீந்தர் சிங்  சட்டசபையில் குரு கிரந்த் சாகிப் நூலை அவமதித்தது சம்மந்தபட்ட வழக்கு தொடர்பான 5 முதல் தகவல் அறிக்கையை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். பின்னர் சட்டசபையிலேயே இதற்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *