கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

சாதி ரீதியாக அவமானப்படுத்தி பொம்மை போல் நடத்துகிறார்கள்; பதவி விலக முடிவெடுத்த கால்பிரவு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி

மானாமதுரை அருகே சாதியின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தியதால் தலித் பெண் ஊராட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ராஜேஸ்வரியை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்படவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியும் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுப்பதாகவும் கூறி ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். 

தலைவராகத் தேர்வாகி மக்கள் பணி செய்ய விடாமல் தன்னை ஒரு பொம்மையைப் போல் நடத்துவதால் விரக்தியடைந்த ராஜேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முற்பட்டுள்ளார்.

கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் சாதிய ரீதியான அவமானப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ள 5-வது ஊராட்சி மன்றத் தலைவராக ராஜேஸ்வரி இருக்கிறார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி சன் நியூசுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தது

மெம்பர் கூட்டம் போட்டால் கூட தன்னிடம் எந்த ஆலோசனையும் பெறுவதில்லை. இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு “நீ இதில் தலையிட வேண்டாம்” என்று பதில் தெரிவித்தனர். ஊராட்சி துணைத் தலைவர் “மக்கள் பணியாளர்ககளை நானே நியமிக்கிறேன். நீ எதுக்கு போடுற?” என்று கூறி என்னை மிரட்டுகிறார்கள். என்னால் அவர்கள் கொடுக்கும் தொல்லையை தாங்க முடியவில்லை. 

பஞ்சாயத்து போர்டு மோட்டார் அறை சாவி கொடுக்கச் சொல்லி கேள்வி எழுப்பியதற்கு, “அது என்ன உங்க அப்பன் வீட்டு சாவியா அத கேக்குற?” என்று தெரிவித்தனர், இது போன்று எந்த சாவியும் தன்னிடம்  கொடுப்பதில்லை என PDO அதிகாரியிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார். 

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளதால் நாற்காலியில் அமர்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு மாதிரியாக பார்ப்பதாக ராஜேஸ்வரி வருந்தினார். தான் எங்கு சென்றாலும் மரியாதை கிடைப்பதில்லை, ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர். 

என் வீட்டுக்கே வந்து அவர்கள் சொல்வது படி தான் கேட்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இதனால் தொல்லை தாங்க முடியாமல் தற்போது ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முடிவு செய்தேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இது போன்ற தலித் ஊராட்சி மன்ற தலைவர்களை இழிவுபடுத்தி பணி செய்ய விடாமல் தடுப்பது அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்சாட்டில் ஒரு பெண் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றுள்ளதால் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜேஸ்வரி பதவி விலக முடிவெடுத்த விவகாரம் பரபரப்பை உருவாக்கியதால், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில் பதவி விலகும் முடிவினை ராஜேஸ்வரி திரும்பப் பெற்றுள்ளார். 

தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடரும் சாதிய ஒடுக்குமுறை

  • கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்கு திட்டை கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமரவைத்து சாதிய ரீதியாக அவமானப்படுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பின்  ஊராட்சி மன்ற செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  • நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவராக இருக்கும் பிரியா பெரியசாமி, சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறி மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு ஊராட்சி செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டது.
  • கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள கே.கிருஷ்ணாபுரம் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதாவை நாற்காலியில் அமர விடாமலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவரது பெயரை எழுதக் கூடாது என்று சொல்லியும், அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டல் விடுத்ததையடுத்து, சரிதா எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்துவேன் என்றும் அறிவித்தார். பின்னர் சரிதாவின் புகாரின் பேரில் கொலைமிரட்டல் விடுத்த பாலசுப்ரமணியம் என்பவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த சுதந்திர தினத்தன்று சாதி பாகுபாடு காரணமாக தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப்பட்டார். பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் என்பதால் அவருக்கு அவமரியாதை நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு அதே பெண்  ஊராட்சித் தலைவரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *