ஊழி கடிகாரம்

அழிவின் விளிம்பில் இருக்கிறதா மனித குலம்? எச்சரிக்கும் ஊழி கடிகாரம் (Doomsday Clock)

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்கிறது தமிழர்களின் நாகரிகம். உண்மையிலேயே அப்படிப்பட்ட உயர்வான நாகரிகத்தை, பண்பாட்டை இந்த உலகம் கடைபிடிக்கிறதா என்பது பற்றி கேட்டால் யாரிடமும் பதிலில்லை. மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் தொடங்கியது என்பது ஆதி காலந்தொட்டே நடந்து வருகிறது. நிலத்தின் மீதான ஆசை மட்டுமல்லாமல் அதிகாரபலம், பொருளாதாரபலம் என்று வெவ்வேறு வடிவமெடுக்கிறது மனிதனில் பேராசை. 

அதேசமயம் உலகில் புதிதாய் மலரும் அனைத்து உயிர்களுக்கான நல்ல சூழ்நிலையையை உருவாக்கி வைத்திருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். “தகுதி பெற்றதே உயிர் வாழும்” என்பது உண்மைதான், ஆனால் எது தகுதி என்பதில்தான் எல்லா சிக்கல்களும்  இருக்கிறது. அழிவை உற்பத்தி செய்யும் ஆயுதங்களையே அதற்கான  தகுதியாகக் கொண்டு மனித உயிர்களை தினந்தோறும் உலகின் ஏதாவதொரு மூலையில் கொன்றுகுவித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இத்தகைய அழிவு கண்டுபிடிப்புகளை விரும்பாத இத்தகைய செயல்களில் இதில் உடன்பாடில்லாத விஞ்ஞானிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அழிவை நோக்கி செல்லும்  மனிதகுலத்திற்கு அவர்கள் ஒரு எச்சரிக்கையை கொடுக்க விரும்பினார்கள். அதுவே ஊழி கடிகாரம் (Doomsday Clock ). விரிவாக பார்ப்போம் .

நோபல் பரிசின் பின் உள்ள அறியப்படாத வரலாறு

இன்று உலகின் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசின் பின்னேயும் அறியப்படாத ஒரு வரலாறு இருக்கிறது. மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ‘ஆல்பிரெட் நோபல்’ தான் முதன்முதலாக மிக அபாயகரமான வெடிபொருளான ‘டைனமைட்’ வேதிக் கலவையை 1867-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதுவே உலகம் கண்டுகொண்ட முதல் அழிவு ஆயுத கண்டுபிடிப்பு. 

1888-ம் ஆண்டு அவரின் சகோதரர் உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். அப்போது ஒரு செய்தித்தாள் உண்மையறியாமல், இறந்தது ‘ஆல்பிரெட் நோபல்’ என்று தவறுதலாக செய்தி வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பாக “மரண வியாபாரி மரணமடைந்துவிட்டார்” என்றும் , ”மக்களை மிக அதிகளவிலும் , விரைவாகவும் கொல்வதற்கான ஆயுதவழியைக் கண்டறிந்ததால் மிகப்பெரும் செல்வந்தராக  மாறிய ‘ஆல்பிரெட் நோபல்’  இறந்துவிட்டார்”  எனவும் குறிப்பிட்டது. 

இதனால் மனம்வருத்திய ‘ஆல்பிரெட் நோபல்’ தன்மேல் விழுந்த பழிச்சொல்லை இனி வரவிருக்கும் வரலாற்றிலிருந்து  தவிர்க்கும் விதமாக தன் பெயரிலான ‘நோபல்’ பரிசை வடிவமைத்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி  ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவே இன்று உலகின் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்குகிறது. நோபல் என்னும் மனிதனின் பின்னால் இருக்கக்கூடிய பழிச்சொல் இன்று பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.

எப்படியிருந்தாலும் ஒரு மனிதன் தன்னுடைய தவறுகளுக்கு மனம்வருந்தி அதைக் களையச் செய்துகொண்ட ஒரு ஏற்படாகத்தான் இதை கருதவேண்டியிருக்கிறது. கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு உதவியாகத்தான் இருக்கவேண்டும். இதற்காக பாடுபடும்  விஞ்ஞானிகளும் அன்றும், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.விதிவிலக்குகளாக நோபல் போன்றோரும் உண்டு.

இதை இங்கு குறிப்பிட காரணமானது ஒரு கண்டுபிடிப்பு உலக மக்களை அவர்களின் துயரத்திலிருந்து விடுவிக்க வேண்டுமேயன்றி மேலும் மேலும் அபாயகரமானதாக இந்த மானிட  வாழ்வை மாற்றக்கூடாது.

25 நிமிடங்களில் உலகத்தை அழிக்கும் அணு ஆயுதப் பேரழிவு

 ‘ஆல்பிரெட் நோபல்’ கண்டுபிடிப்புகள் ஆயுத வியாபாரத்தின் முதல் படிக்கல் என்பதாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. ஏனெனில் அதன் பின்தான்  உலகம் தன்னுடைய கண்டுபிடிப்புகளை ஆயுதங்களை நோக்கி  திருப்புகிறது. அப்படி ஒரு கண்டுபிடிப்பாகத்தான் உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை ஜூலை 16, 1945-ம் ஆண்டு அமெரிக்காவின் மெக்சிகோ பாலைவனத்தில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்விலிருந்துதான் மனிதகுலம் தன்னைதானே அழிக்கக்கூடிய அபாயகரமான பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கிறது. இன்றோ இந்த பூவுலகில் வெளியிலிருந்து இந்த மனிதகுலத்திற்கு வரக்கூடிய ஆபத்துகளைவிட மனித இனத்தினாலேயே வரக்கூடிய ஆபத்துகள்தான் அதிகம்.

இன்றைய காலகட்டத்தில்  உலகின் ஒன்பது முன்னணி நாடுகளில் மட்டும் 13,410 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. மேலும் அவற்றில் 1,800 அணு ஆயுதங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உடனடி பயன்பாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு அணு ஆயுதப் போர் துவங்குமானால் அடுத்த 25 நிமிடங்களில் இந்த உலகம் முழுவதும் அழிந்துவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.

ஊழி கடிகாரம் என்ன சொல்கிறது?

இந்த ஆபத்தை மட்டுமல்லாமல் காலநிலை மாற்றம், தொற்று நோய்கள், போர் என்று  பல்வேறு சிக்கல்களால் மனித இனத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களினால் எவ்வளவு விரைவாக அழிவை நோக்கி செல்கிறோம் என்பது பற்றியான ஒரு உருவக ஏற்பாடே இந்த ஊழி கடிகாரம். 

இது 1947-ம் ஆண்டு “அணு விஞ்ஞானிகளின் கூட்டறிக்கை” (The Bulletin of the Atomic Scientists) என்ற அமைப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகளோடு மேலும் நோபல் பரிசுபெற்ற 13 அறிஞர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும்  கலந்தாலோசிக்கப்பட்டு அதன்பின்பே நேர அமைப்பு மாற்றி அமைக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் தன்னுடைய தொடக்கமாக நள்ளிரவு 12 மணியைக் கொண்டிருக்கிறது. அதை அடித்தளமாகக் கொண்டு இந்த கடிகாரம் உருவாக்கப்படுத்தப் படுகிறது. அதன்படி நள்ளிரவு 12 மணி அடுத்த நாளிற்கான துவக்கம். அதாவது  மனிதகுலம் முற்றிலும் அழிந்தபின் தொடங்கக்கூடிய நாளின் தொடக்கமாக இந்த 12 மணி குறிக்கப்பட்டிருக்கிறது. இங்கு குறிக்கப்படும் 12 மணி ஊழிப்பெருநாளின் முதல் நாளின் தொடக்கம் அதை அடிப்படையாக கொண்டு மணித்துளிகளை குறிக்கக்கூடிய கடிகார முள்ளும் , நிமிடங்களை குறிக்கக்கூடிய நொடி முள்ளும் இருக்கும். இவை 12 மணிக்கு முன்பான நிமிடங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு இக்கட்டான காலகட்டங்களிலும் மாற்றியமைக்கப்படும்.

1947-ம் ஆண்டு இந்த ஊழி கடிகாரம் அறிமுகப்படுத்தபட்ட போது அந்த காலகட்டத்தில் உலகின் பல்வேறு அபாயங்களை கணக்கில்கொண்டு இதன் நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக 7 நிமிடங்களாக அதாவது 11:53 PM என்ற நேர அளவில் வைக்கப்பட்டது. அதன் பின்பு இப்போதைய 2020-ம் ஆண்டுவரை முன்பும் பின்புமாக 27 முறைகள் மட்டுமே இதன் நேர அளவீடு மாற்றப்பட்டிருக்கின்றது என்பதே இதன் முக்கியத்துவத்தை குறிக்கும். உலகம் சந்திக்கும் அபாயங்களின் அளவிற்கு ஏற்ப இதன் நேரம் மாற்றியமைக்கப்படும்.

இன்னும் 100 நொடிகளே மிச்சமிருக்கிறது

1991-ம் ஆண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்து கொண்ட உடன்படிக்கையானது, இந்த இரு நாடுகளும் தங்களுடைய அணு ஆயுதங்ளைக் குறைப்பதற்கான அமைதி ஒப்பந்தமாக பார்க்கப்பட்டது. அப்போது இந்த ஊழி கடிகாரம் மிக அதிகபட்சமாக நள்ளிரவிற்கு முன் 17 நிமிடங்களாக (11:43 PM ) மாற்றியமைக்கப்பட்டது. மிக சமீபத்தில் இந்த வருடம் 2020 ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவிற்கு முன்பாக 100 நொடிகளாக குறைக்கப்பட்டிருக்கிறது (11:58:20 PM). 

இந்த ஊழி கடிகாரம் தொடங்கப்பட்ட 1947-ம் ஆண்டுமுதல் இப்போது வரை இந்த  நள்ளிரவிற்கான 100 நொடிகளே மிகக்குறைந்த கால அளவாகும் (அதாவது நள்ளிரவு 12 மணியை நெருங்க 1 நிமிடம் 40 நொடிகளே இருப்பதாக தற்போது மாற்றியமைக்கபட்டிருக்கிறது).

ஆபத்தை நோக்கி தள்ளும் காலநிலை மாற்றம்

ஜனவரி 23, 2020-ல்  வெளியிடப்பட்ட நேரம் மாற்றியமைக்கப்பட்டது பற்றிய அறிக்கையில் “இப்போதுவரை காலநிலை மாற்றத்தை  சர்வதேச நாடுகள் எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் என்பது காலநிலை அபாயங்களின் தீவிரங்களுக்கு மிக தொலைவிலேயே இருக்கிறது. இந்தவிதமான போக்குகள் இதன் ஆபத்துகளை, பேரழிவு நோய்களை உற்பத்தி செய்கிறது அவை நிலைமையை இன்னும் தீவிரமாக்குகிறது. கடந்தகாலங்களில் ஐ.நா சபை கூட்டிய காலநிலை மாற்றம் பற்றிய கூட்டத்தில் அனைத்து நாடுகளும் அருமையான யோசனைகளை தெரிவித்தன. ஆனால் அது பற்றிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதையும் யாரும் முன்னெடுக்கவில்லை. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்த காலநிலை சீர்கேடு மிக இக்கட்டான இடத்தை நோக்கி மனிதகுலத்தை இட்டு செல்கிறது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரசியல் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ள ஈரான் மற்றும் அணு ஆயுத சோதனைகளைக் கைவிடாத வடகொரியா போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இவை எப்போது வேண்டுமானாலும் மோசமான நிலையை உருவாக்கலாம். என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது .

ஒரு நிமிடம் 40 நொடிகளில் இந்த உலகில் வாழும் உயிர்கள் அனைத்தின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலையையும் நாம்தான் உருவாக்கினோம் என்பதுதான் இதிலிருக்கும் முரண்பாடு. இவ்வுலக வாழ்வு மகத்தானதுதான் ஆனால் அது மனிதனுக்கு மட்டுமே உரித்தானதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *