ஆத்துப்பாக்கம் தலைவர் அமிர்தம்

தலித் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத சுதந்திரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தினைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்காமல் அவமானப்படுத்திய நிகழ்வு விவாதத்தினை உருவாக்கியிருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்து 74வது சுதந்திர தினத்தை நம் மக்கள் பெருமிதத்துடன் கொண்டாடியுள்ளோம். ஆனால் 74 ஆண்டுகளாகியும் இன்னும் ஒவ்வொரு ஆண்டும் சாதியின் பெயரால் தலித் பஞ்சாயத்து தலைவர்களை இந்தியக் கொடியினை ஏற்றுவதை தடுக்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. எதை எதையோ தேசத் துரோகமாகவும், தேசிய அவமானமாகவும் பார்க்கும் நாம், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த அனுமதிக்காத இந்த வன்கொடுமையை எப்போது தேசிய அவமானமாக உணரப் போகிறோம்?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அமிர்தம் என்கிற பட்டியல் வகுப்பினைச் சேர்ந்த பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். அவர் ஊராட்சி மன்றத் தலைவர் என்பதால் தொடக்கப் பள்ளியில் கொடியேற்றி உரையாற்றுவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார். 

அதனை ஏற்று பள்ளியின் சுதந்திர தின நிகழ்விற்கு சென்ற அமிர்தம் அவர்களை, அவர் தலித் என்பதால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ஹரிதாஸ் என்பவரும், பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளும் இணைந்து அவமானப்படுத்தியுள்ளனர். ஜனவரி 26 குடியரசு தின நிகழ்வின் போதும் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது செல்போனை பறித்துவிட்டு தாக்கியிருக்கின்றனர்.

சாதியின் பெயரால் கொலைகள் நடப்பதும், பட்டியல் சமூகத்தினர் தாக்கப்படுவதும், ஆணவக் கொலைகளும், அவமானப்படுத்தலும் இன்னும் இந்த நாட்டில் தொடர்கதையாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவரை குடியரசுத் தலைவராக அமர வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. தலித்துகள் மீது நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல்களை தடுப்பதற்கான கடுமையான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் உறுதி செய்திட வேண்டும். அதை செய்யாத வரை எத்தனை சுதந்திர தினங்களை நாம் கொண்டாடினாலும், கடைசி மனிதனுக்கும் உண்மையான சுதந்திரத்தினை உறுதி செய்துவிட்டதாக நாம் பெருமை கொள்ள முடியாது. 

நாட்டின் அரசியல் சாசனத்தினை உருவாக்கியவரின் சிலையையே கூண்டுக்குள் அடைத்து பாதுகாக்க வேண்டிய நிலையிலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவரின் சிலைகள் உடைக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் நிலையிலும்தான் நம் சமூக சூழல் இருக்கிறது. பட்டியல் சமூகத்தின் பிரதிநிதித்துவனை இன்னும் இன்னும் உண்மையான அதிகாரத்தினை நோக்கி விரிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அவர்கள் அளித்த புகார் இன்று ஊடகங்களில் வெளியானதன் காரணமாக இது குறித்த விவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் அமிர்தம் அவர்களின் புகாரினை மாநில மனித உரிமைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது. அவரது புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பி மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இது மனித உரிமை மீறல் என்றும், இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சாதிகள் ஒழிந்து நாம் கொண்டாடப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்பதனை இந்திய சமூகம் உணரட்டும்.

மனித உரிமைகள் ஆணையம் எழுப்பியுள்ள கேள்விகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *