கேரளா மாநிலம் மூணாறில் இருந்து 20 கிலேமீட்டர் தொலைவில் உள்ள பெட்டிமுடி எனும் இடத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டத்தில் கடந்த 07/08/2020 அன்று இரவு பெருமழை வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலசரிவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் 84 தமிழ் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதுவரை 42 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு விரிவடைந்த டாடா தோட்டம்
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பொழுது திருநெல்வேலி, மதுரை, திருச்சி என பல பகுதிகளில் இருந்து கொத்தடிமைகளாக கொண்டு செல்லபட்ட தமிழர்களின் உழைப்பினைப் பயன்படுத்தி, காடுகளை அழித்து மலைகளை ஆக்கிரமித்து தேயிலை தோட்டங்களை உருவாக்கினார்கள். அப்படி 53 ஆயிரம் ஏக்கர் குத்தகைக்கு ஆரம்பிக்கப்பட்ட டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனம் தற்போது இடுக்கி மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு அளவிற்கு விரிவடைந்துள்ளது. 5 லட்சம் ஏக்கர் வனத்தை அழித்த டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனம் ஒட்டு மொத்த நிலத்தையும் தனக்கே உரிமை கோரி வருகிறது. நீதிமன்றம் அந்த நிலத்தை டாடாவின் கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு உரிமையாக்க முடியாது என்று கூட தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலை
ஆனால் அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் நிலையோ இன்னும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது போலவே மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு நிறுவனத்தின் பரிந்துரையோடு சென்றால் அச்செலவை நிறுவனம் ஏற்க வேண்டும் என்பது விதி. ஆனால் மருத்துவமனையும், தோட்ட நிர்வாகமும் கூட்டு சேர்ந்துகொண்டு, தொழிலாளர்களுக்கான மருத்துவச் செலவினங்களை அளிக்காமல், சிறப்பு கூலியும் அளிக்காமல் சுரண்டும் நிலை இருக்கிறது.
ஐம்பது கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு மலையில் ஏறும் தொழிலாளர்களுக்கு சிறுநீர் தடத் தொற்று, எலும்பின் இணைப்புகள் தேய்மானம் அடைவது என பல்வேறு உடல்நல சீரழிவுகள் உருவாகின்றன. தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களில் 60% பேருக்கு கருப்பை அகற்றப்பட்டிருப்பதற்கும் இதுவே காரணமாகும்.
தமிழ் தொழிலாளர்கள் பலியானதற்கு யார் காரணம்?
அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தால் வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகள் பாதுகாப்பு இல்லாத ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளைப் பயன்படுத்தி 4 தலைமுறைகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள். இவற்றின் சுவர்கள் பிளந்து நிற்கின்றன. கழிவறைகளின் கதியும் இதுதான்.
இந்த வீடுகளை வெள்ளையடிக்க ஆண்டுதோறும் 10 ரூபாய் கொடுக்கிறது நிறுவனம்.ஒதுக்கபட்ட இந்த மோசமான வீடுகளும் கூட தொழிலாளர்களுக்குச் சொந்தமில்லை. ஒரே வீட்டைப் பிரித்து இரு குடும்பங்களை அமர்த்துகிறது.
பெரும்வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றினால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை, பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்பதே கேரளா முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
பெண் பிள்ளை உரிமை என்ற பெயரிலான பெண்கள் அணியின் போராட்டத்தின் போதும் இந்த கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைகள் தேயிலை தோட்ட நிர்வாகத்தாலும், தொழிற்சங்கங்களாலும், அரசாலும் காதுக்கொடுத்து கேட்கப்படாததால்தான் இன்று 84 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட வந்த பிணராயி விஜயனை சந்திக்க பெண் பிள்ளை உரிமை அமைப்பின் பொறுப்பாளர் கோமதியை அனுமதிக்கவில்லை. அதனால் தன்னந்தனியாக போராடிய அந்த அமைப்பினர் வைத்த கோரிக்கை என்பது தமிழ் தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலம் வழங்கி தனியே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதுதான். பெண் தொழிலாளர்களின் பிரதிநிதியான அவரை சந்திக்கக் கூட கேரள முதல்வருக்கு நேரம் இல்லை.
மரணத்தில் கூட ஏன் இந்த பாரபட்சம்?
இந்த சூழலில் இப்போதும் கேரள சி.பி.எம் அரசு விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சமும், நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு 5 லட்சமும் என்று பாரபட்சமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 20 லட்சம் நிவாரணம் அறிவித்தது.ஆனால் நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு வெறும் 2 லட்சம் என அறிவித்ததன் மூலம் கேரளா மாநில அரசோ, மத்திய அரசோ தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் இழப்பை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
இதற்குப் பிறகாவது பாதுகாப்பான இடங்களில் நிலம் கொடுத்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதன் மூலம்தான் எதிர்காலத்தில் நிலச்சரிவு போன்ற விபத்திலிருந்து தொழிலாளர்களைக் காக்க முடியும்.
”ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்…
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்…”
எனும் ஆதவன் தீட்சண்யா வின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.