சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இவற்றில் 1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய 11 மண்டலங்களில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பணிக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அர்பசர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த சுமீட் பெசிலிட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து குப்பை அள்ளும் பணியை செயல்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் செப்டம்பர் 30-ல் இருந்து தன் பணியை துவங்குவதாக அறிவித்துள்ளனர்.
அந்நிறுவனத்திற்கான அலுவலகங்களைக் கட்ட சோழிங்கநல்லூரில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தின் இடத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த பழத்தோட்டத்தில் மாமரம், பனைமரம், வேப்பமரம், ஆலமரம், புங்கன்மரம், முந்திரி, நாவல் என 250-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும்.
மரங்களில் ஆலமரம் தான் அதிகமான ஆக்ஸிஜனை கொடுக்கக் கூடியதாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வேப்பமரம். இப்படி பல்வேறு விதமான மரங்களைக் கொண்ட காடு அது.
குப்பை அள்ளும் தனியார் நிறுவனத்திற்கு அலுவலகம் கட்டுவதற்காக பசுமைக் காடுகளை அழிக்க அனுமதிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது, பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவது ஏன், அங்குள்ள 250-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட முனைவது ஏன்? என்று சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 பெருநகரங்களில் பசுமைப்பரப்பு குறைந்த நகரங்களில் சென்னை தான் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
தில்லியில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 41 சதுர மீட்டர் பசுமைப்பரப்பு உள்ள நிலையில், சென்னையில் 13 சதுர மீட்டர் அளவுக்கு தான் பசுமைப்பரப்பு உள்ளது. சென்னையின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 14.99% ஆக உள்ள நிலையில், பெருங்குடி மண்டலத்தில் பசுமைப்பரப்பு வெறும் 5.31% மட்டும் தான்.
ஒரு நகரத்தின் குறைந்தபட்ச பசுமை பரப்பு 33% இருக்கவேண்டும். ஆனால் சென்னை மிகக் குறைந்த இடத்தில் இருக்கின்ற பொழுது, மரங்களை வெட்ட முடிவெடுப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சென்னையின் பசுமைக் காடுகளை அதிகரிப்பதற்காக அடையாறு, வளசரவாக்கம், முகலிவாக்கம் ஆகிய 3 இடங்களில் ஜப்பானின் மியாவாக்கி முறையில் அடர்காடுகளை வளர்க்க சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒருபுறம் இதை செய்து கொண்டு இன்னொரு புறம் பசுமைக் காடுகளை அழித்தால், சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் முயற்சி தோல்வியடையும்.
மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களை வெட்டுவது சென்னையின் உயிர் சூழலை அழிக்கும் முயற்சியாகும்.