வ.உ.சி மற்றும் காந்தி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகாத்மா- காங்கிரசின் மௌனத்தில் இருட்டடிக்கப்படும் ‘மக்கள் தலைவர்’, பெரியவர் வஉசி

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் எழுதிய கட்டுரை

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆகப்பெரிய சாதனைகள் படைத்த தனக்கிணை மற்றிலா மாபெரும் மக்கள்தலைவர் வஉசியே! பெரியவரின் வகிபாகம் பன்முகப் பரிமாணம் வாய்க்கப்பெற்றது. வஉசிக்கொரு பாஸ்வெல் என்றால் அது ரெங்கையா முருகனே. அவரது தரவாதாரங்களுக்கூடாகவே என் இப்பதிவை முன்வைக்கின்றேன்.

தேசப்பிதா மகாத்மாவின் சத்திய சொரூபம் அவருடைய வாழ்வில் மகத்தான ஈராளுமைகள் முன்னர் நிலைகுலைந்தது. அண்ணல் அம்பேத்கர் தலித்மக்கள் மத்தியில் பெற்ற செல்வாக்கு, பெரியவர் வஉசியின் சுத்த சுயம்புவான எழுச்சி முன்னோடித் தகைமைப்பாடுகள். 

“நான் கதர் சிதம்பரம் இல்லை, சுதேசி. காந்தி கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை.” எனக் காங்கிரஸ் நடிப்புச்சுதேசிகள் முன்னே வீறுகொண்டு பெருமிதப் பிரகடனம் முழங்கிய பீடுசான்றவரே பெரியவர். மக்கள்தலைவர் எனும் சிறப்புத்தகுதி படைத்தவர் வகிபாகங்கள் பன்முகப் பரிமாணம் வாய்க்கப்பெற்றவையே! 

முதன்மையானது சுதேசியப் பொருளாதாரக் கட்டுமான முன்னெடுப்பான கப்பல் போக்குவரத்து வணிகம். விவசாயத் தொழிற்சங்கம் (11-10-1921); கோரல்மில் போராட்டம் (1907-1908) ரசியாவரை புகழ்பெற்றது. மிகப் பரவலான பத்திரிகைகள் பாராட்டைப்பெற்றது. ஆகியவகையில் தொழிற்சங்க அரசியலிலும் முன்னோடி, பாரதிக்கும் அவருக்கும் இடையிலான மாமன்மச்சான் உறவு; ஜேம்ஸ் ஆலன் தன்முன்னேற்ற நூல்கள் தமிழாக்கம்; பதிப்பாசிரியப்பணி எனப் பரந்துபட்டது. திலகரோடு நின்ற போதும் அவரது மதவாதத்தை அறவே ஏற்கவில்லை. 

தாய்மடி அறியாக்குட்டிகளாய் பூதகி முலைகளில் மோதிக்கிடக்கும் தமிழர்தம் அவலமே பேரவலம். ஒன்றை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் காந்தியத்தை நெஞ்சார வரிப்புணர்வோடு ஏற்ற சான்றோரும் வரிப்புணர்வோடு அதற்கெனவே தம் வாணாளையே செகுத்த பல்துறை வாணர்களை, தலைவர்களை, தொண்டர்களை இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அளவு வேறெங்கும் கண்டதுண்டா? ஏனெனில் இது அய்யனும், திருமூலனும், கணிகுன்றனும், சங்கச்சான்றோரும், சிவவாக்கிய முதலாச் சித்தர்களும், இராமலிங்கமும் சமயஞ்சாராத் தமிழறம் தழைத்த சமத்துவபூமி. அத்தகையை காந்திய வரிப்புணர்வாளர் தரப்புகளை அடுத்துக் காண்போம்.

தமிழக மண்ணின் பல்துறைக் காந்திய வரிப்புணர்வாள ஆளுமையர்

காந்தியத்தின் இரு கருத்தாக்கங்கள் சமூக இருப்பைத் தக்கவைக்கும் ஷேப்டி வால்வ் சிஸ்ட்டமாகச் செயல்பட்டன. அவரது வர்ணதர்ம வியாக்கியானம் நிலக்கிழமைக்கு அரணாகவும்; தர்மகர்த்தா சோசலிசம் முதலாளியத்துக்கு அரணாகவும் பாதுகாவலாயின. அவற்றினின்றும் விடுபட்டது ஜோசப் கொர்னீலியஸ் குமரப்பாவின் விடுதலை இறையியல். காந்தியப் பொருளாதாரத்தை வளர்ந்தெடுத்துக் கோட்பாட்டாக்கமாக வடிவமைத்தவரும் குமரப்பாவே. காந்தியாரிடமே கறாராகக் கணக்குக் கேட்டவர். அவர் மீது காந்தியாரிடமே புகார் அளிக்கப்பட்டபோது அவர் ”மதராஸிகள் எப்போதும் காரசாரமானவர்களே” எனப் புன்னகையோடு பதிலளித்தார்.

குமரப்பா கீழைவானின் நம்பிக்கை நட்சத்திரமே. மாவோவை நேரில் சந்தித்து உரையாடியவர். அவரையும் ஆந்திர பூமியின் கோராவையும் நான் பின்னை காந்தியர் என வரையறை செய்கிறேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் இணையர், மணலூர் அம்மையார் போலும் ஆளுமையர் நூலகர் ‘பாலம்’ கிருஷ்ணமூர்த்தி (கொஞ்ச நாள் ரஜினிகாந்த் இல்லத்திலவர் வளர்ப்புத்தந்தையாக இருந்தவர்) காந்தியம், வள்ளுவமே  வாழ்வறமாய் உபநிடதம், திருமந்திரம், புறநானூறு இவற்றில் ஆழங்கால்பட்ட வெள்ளியங்காட்டான், “என் சிலுவையை நான்தானே சுமக்க வேண்டும்” என்று விருதுகளைப் புறந்தள்ளிய வீறார்ந்த ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா இருவருமே காந்திய அறப்பிடிவாதத்துக்கு அடையாளம் ஆனோரே. அவர் தம் நூல்களைத் தாமே கல்வி வளாகங்ளுக்கு சுமந்து சென்று நூல்களை விற்பனை செய்வார். (அதன் அடுத்த பாய்ச்சலாய் என் தெரிவிலான அனைவர் நூல்களையும் கல்வி வளாகங்களுக்கும், இலக்கிய நிகழ்வுகள், அரசியல் மாநாடுகளிலும் ‘ஆக்கர் யாபாரி’ யாக (தலைச்சுமை வணிகன்) காவித்திரிந்தே கடைவிரித் தேன்.)

இயற்கை வேளாண் அறிவியலார் தமிழறிஞர் பாமயன் கூட்டுப் பண்ணைய முறை நிபுணர், அத்தொடர்பில் நிறைய எழுதியும் உள்ளார். நம்மாழ்வாருக்கே அவர் முன்னோடி. நம்மாழ்வார், குமார் அம்பாயிரம்,. ஆரண்யா அல்லி, வெற்றிமாறன், நெல் ஜெயராமன், ‘நல்ல கீரை’

அமைப்பினர், வள்ளுவர் பெயரில் பண்ணயம் போட்டு காந்திபெயரில் பருவெட்டு வேர்க்கடலைப் பயிர்ச்செலவு செய்த பண்ணையர் என உழவர்குடி வேளாண் பெருமக்கள். 

மார்க்சிய உடலில் காந்திய உயிர் என்ற தமிழ்த்தென்றல் திருவிக, திருவேதியன் பிள்ளை. மருத்துவர் ஜீவானந்தன், சாளைபஷீர், அ.மார்க்ஸ், எஸ்.என்.நாகராசன், பொன்னையா சந்திரன், பிரேம், ரமேஷ், தமிழகத்தின் முக்கிய காந்தியச் சிந்தனையாளர் பட்டாபி ராமன், ‘நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” எனக் காந்தியாராலேயே போற்றப்பெற்ற ஜீவா இவ்வாறெல்லாம் மற்ற மாநிலத்தில் எங்கேணும் காணக்கிடைக்குமா?

பட்டாபிராமையா அதிகாரபூர்வ காங்கிரஸ் வரலாற்றிலும், பப்ளிகேஷன் டிவிஷன் காந்தியத் தொகுப்பிலும் இருட்டடடிப்பு

பட்டாபி சீதாராமையாவின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வரலாற்றிலும் பெரியவர் பற்றிய அறவே புறக்கணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதனையும், பப்ளிகேஷன் டிவிஷன் காந்தியத் தொகுப்பு (98 பாகங்கள் சுமார்  ஐம்பாதாயிரம் பக்கங்களிலும்) வெளியீட்டிலும் நிகழ்த்தப்பட்டுள்ள இருட்டடிப்பை வெட்டவெளிச்சம் ஆக்கிவிடுகின்றார் ரெங்கையா முருகன்.

1888 முதல் 1948 வரையிலான காந்திய வாழ்வு 90 பாகங்கள் சுமார் 43,000 பக்கங்கில் ஆளுமையாளர் அடைவு (The collected works of Mahathma Gandhi: ,Intex of persons) அதில் தமிழக ஆளுமையர் 150 நபர் இடம்பெற்றுள்ளனர். வஉசி பெயர் இம்மியளவும் இடம்பெறவே இல்லை. சுப்பிரமணிய சிவா இருதரவும், பாரதி பெயரும் இடம்பெறவே இல்லை. மிதவாதப் போக்கினர் தரப்புகளே மேலதிகமாக இடம்பெற்றுள்ளன. பெரியவர் மறைவின்போது ஹரிஜன் இதழில் அஞ்சலிக் குறிப்புக் கூட எழுத மகாத்மாவிற்குத் தோன்றவே இல்லை. இப்படி வஉசி, பாரதி குறித்த பாராமுகத்தை எல்லாம் காந்தி பொம்மைக்குரங்குகளாய் கள்ளமௌனம் சாதிக்கும் வரலாற்றாளரின் Historicity-இன் லட்சணத்தை என்ன பெயரிட்டு அழைப்பதுவோ? மகாத்மாவின் தேர்ந்தெடுத்த மறதிக்கு என்னென்ன நியாயக் கற்பிப்போ?

ஒன்றை இங்கே நாம் உன்னித்து நோக்கவேண்டும். காந்தியத் தொகுப்பிலும் சரி, காங்கிரஸ் வரலாற்றிலும் சரி மிதவாதத்தரப்பை மட்டுமே தூக்கிப்பிடித்து, தீவிரத் தரப்புகளை முன்னிலைப்படுத்தும் போக்கே காணக்கிடக்கின்றது. 

“பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டுகளை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு வரலாறு எழுதினர். அதிலும் பெயர்பெற்ற வரலாற்றாசிரியர்களும் கூடத் தமிழ் தெரியாததால் கல்வெட்டுக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியே வரலாறு எழுதினார்கள். அதாவது சொற்களால் மட்டுமே அறியப்படும் விவரங்கள் இதை Tyrarny of words என்று ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார்.”
– தியாடோர் பாஸ்கரன் (‘உயிர் எழுத்து’ பிப். 2010).

நானோர் வரலாற்று மாணவன். பரிதிமாற்கலைஞர் வலியுறுத்தும் ‘சரித்திரக்கண்’, சி.வை.தா-வின் ‘வரலாற்று மெய்ம்மை'(Historicity) நாட்டம், பிரமிள் பேசி நிற்கும் ‘சரித்திர விபரங்களை அனுசரித்தல்’ என்பனவற்றையே என் வரலாற்று வாசிப்பு அணுகுமுறையாக கைக்கொள்ளக் கூடியவன். வஉசி ஆய்வாளர் எனும் வகைமையில் ஆ.இரா.வேங்கடாசலபதியே குறிப்பிடத்தக்க முன்னோடி. இன்னும்

 அனித்தா கிருஷ்ணமூர்த்தி, செ.திவான், எழிலமுதன் எனத் தொடரும் வரிசையில் மகத்தான பாய்ச்சலே ரெங்கையா முருகன். அவரின் ஆத்மார்த்தமான வரிப்புணர்வும் மக்கள்தலைவரின் தனிச்சிறப்பை விதந்தோதி இனங்காணவல்ல துல்லியமும் நம்மிடையே பெரியவருக்கொரு பாஸ்வெல்லாக அவரை நமக்கு வழங்கியுள்ளன.

1915 – 1916 ஆண்டுகளுக்கிடையே காந்தியாருக்கும் வஉசிக்கும் இடையே கடிதப் போக்குவரத்துகள் நிகழ்ந்தேறி உள்ளன. சில சந்திப்புகளும் நிகழ்ந்துள்ளன. இவற்றை முதலில் நமக்கு அறியத்தந்தவர் சலபதியே. தென்னாப்பிரிக்காவாவில் திருவேதியன் பிள்ளை வஉசி-க்குக் கஷ்ட நிவாரண நிதியாக 5000 திரட்டிக் காந்தியார் மூலமாக வஉசி-யிடம் சேர்ப்பிக்குமாறு வழங்குகின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அத்தொகையை செலவழித்துவிட்டு அப்புறம் மகாத்மா அதை அப்படியே மறந்துவிட்டாராம்?

பின்னர் தெரியவந்ததும் வருத்தம் தெரிவித்து கோபாலி எனும் இஸ்லாமியரிடம் உரிய வட்டியுடன் பெற்றுக்கொள்ளுமாறு முறைப்படுத்தி விடுகின்றார். கோபாலியும் அவ்வாறே கொடுக்கக் காந்தியார் மறதிக்கு வட்டி தண்டணையா என வட்டியை மறுத்து அசலை மட்டுமே பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார் பெரியவர். இதனை ‘நாரதர்’ இதழில் எழுதியுள்ளார் தண்டபாணிப்பிள்ளை.

சலபதியின் சப்பைக்கட்டும், காந்தியார் பிம்பத்தைக் காக்கும் போக்கும்

வ.உ.சி.யை ஏமாற்றினாரா காந்தி? என ‘இந்துத் தமிழ்த்திசை’-யில் எழுதிய போது சலபதியின் தொனி மாறிவிட்டது. சிறுமதியாளர் காந்தியாரைச் சிறுமைப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றார். காந்தியார் ஏமாற்றவில்லைதான். ஆனால் அவரின் நெடுநீர்? தாமதித்த நியாயம் ஒருவகையில் மறுதலிக்கப்பட்ட நியாயந்தானே? 

நான் எழிலமுதன் மூலம் இந்தக் ‘காந்திக்கணக்கு’த் தொடர்பான சலபதியின் கட்டுரையையும், காந்தியாருக்கு வஉசி எழுதிய கடிதங்களையும் வரவழைத்துத் தோமாவிடம் (துரை.மடங்கன்) தந்தேன். அவர் சலபதி கட்டுரையைத் தமிழாக்கம் செய்து கடிதங்களையும் இணைத்து ஊடுபாவற் குறிப்புகளுடன் கட்டுரையாக்கம் செய்தார். சலபதியின் பணிகளைப் பாராட்டிக் குறிப்புரையும் அளித்தார். என் ‘பறை-2015 ‘ தொகைநூலில் அது வெளியாகியுள்ளது.

வாசகர்கள் அதனையும் இதனையும் சலபதியின் இந்து தமிழ்த்திசை கட்டுரையையும் ஒத்துறழ்ந்து நோக்கையில் உண்மைகள் அத்துபடியாகும். மக்கள் தலைவர் மகாத்மாவுக்கு முன்பிருந்தே அரசியல் களமாடியவர். ஏலவே காந்தியார் அரசியல் மதம் இரண்டிலும் பார்ப்பனியக் கூட்டிணைவுடன் செயல்பட்டவிதம் குறித்து பிரஜ்ரஞ்சன் மணி பார்வையில் கண்டோம். சுநிதிகுமார் கோஷ், சுபாஸ் சந்திர போஸ் தரப்புகளும் அதனையே வலியுறுத்த வல்லனவே. 

அவர் மதவாதத் தரப்புகளுடன் உரையாடி அவற்றை முறைப்படுத்திட முயன்றார் என்பது அ.மார்க்ஸ், பிரேம் ஆகியோர் வாதம். ஆம் அவர் RSS கூட்டங்களிலும் பங்கேற்று அவர்களை நெறிப்படுத்த முனைந்தார்தாம். ஆனாலது சரியா, அறிவார்த்தமான அணுகுமுறையா? பிறிதொருகால் பிரேம் பேசிநிற்பதே அவருக்கும் இத்தொடர்பில் போதுமான பதிலாம்!

 “ஏவல் தேவதை உலவ இடமற்றுப் போகையில் தான் இவர்ந்துறும் ஊடகத்தையே காவு வாங்கிவிடும்” 

ஆமது தானே பிரேம் காந்தியாருக்கும் நேர்ந்து போயிற்று. அவ்வளவு எளிமையாக ஏமாறக்கூடியவைகளா என்ன சங்கிகள்? ஆனாலும் ஒன்று காந்தியார் ‘பெயக் கண்டும் நஞ்சுண்டமைந்தே மெய்யாலுமே மகாத்மா ஆகியது அவர் மரணத்தால்தாம்.!

இந்துமாக்கடலை மகாத்மா கடைந்த போது வாய்த்த அமுதமே காந்தியம் எனில் சனாதனம் ஆதியிலேயே அவர் உடல் சுற்றிப்பிறந்த நஞ்சுக்கொடி. அண்ணலின் ஆவிபறித்த அம்புமட்டுமே நாதுராம்! ஹேராம்! யா அல்லாஹ்! மகத்தான மக்கள் தலைவர் பெரியவர் வஉசியின் பன்முகப்பாடுகளுமே நமக்கு எதிர்காலதத்திலும் முறையே பலதளங்களிலும் ஆற்றுப்படுத்திட வல்லமை படைத்தனவாம்.

– வே.மு.பொதியவெற்பன்

பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *