அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டுடன் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி முதல் நடத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 405 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் இந்த கலந்தாய்வின் மூலம் 399 இடங்களில் மாணவ மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
அண்மை ஆண்டுகளில் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர்களாக சேர்ந்திருப்பது இந்த ஆண்டே. ஆனால் நீட் கோச்சிங் சென்டர்களுக்காக ஏழை மாணவர்கள் அதிகம் செலவிட வேண்டிய சூழலும் கூடவே சேர்ந்து உருவாகியிருக்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மாணவர்களாக இருப்பதால் கோச்சிங் சென்டர்களின் கட்டணம் என்பது அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுவதாக இருக்கிறது.
தேர்வானவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இரண்டு முறை, மூன்று முறை என்று முயன்று தான் தேர்வாகி வந்திருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கான கோச்சிங் சென்டர் கட்டணம் என்பது சாதாரண ஏழைகளைப் பொறுத்தவரை எட்ட முடியாத உயரத்தில்தான் இருக்கிறது.
கோச்சிங் சென்டர்களை மையப்படுத்தியே நீட் தேர்வின் தேர்ச்சி
- ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கும் மாணவி அபிஷா மூன்றுமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.
- அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்த தேனி மாணவர் ஜீவித்குமார் கூட கடந்த ஆண்டு முயற்சி செய்து வெற்றி பெறமுடியாமல், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு தனியார் பயிற்சி மையத்தில் இணைந்தே இந்த ஆண்டு வெற்றிபெற்றார்.
ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வீட்டு வேலை செய்பவரின் மகன்
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் இரண்டாவது முறையாக எழுதி தேர்வாகி இருக்கிறார். அவரது தந்தை வெங்கடேசன் ஆட்டோ டிரைவர். வெங்கடேசனின் மனைவி நாகலட்சுமி, பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வருபவர். இவர்களின் மகன் நரசிம்மன், கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். டாக்டர் கனவுடன், ‘நீட்’ தேர்வு எழுதினார். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. எனினும், அம்மா கொடுத்த ஊக்கத்தால், இந்தாண்டும், ‘நீட்’ தேர்வுக்கு தயாரானார். தற்போது சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது.
இதுகுறித்து மாணவர் நரசிம்மன் பத்திரிகையார்களிடம் கூறியதாவது:
”பயிற்சி மையத்தில் சேர அம்மாவின் நகைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்தோம். அது போதாததால் அப்பா வட்டிக்கு பணம் வாங்கினார். இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டினார். அம்மா பல வீடுகளுக்கும் வேலைக்கு சென்றார். பெற்றோர் சுமையை குறைக்க, நானும், மருந்து கடையில் பகுதி நேர வேலை பார்த்தபடி படித்தேன்”
என்று கூறியுள்ளாளர்.
நெசவுத் தொழிலாளியின் மகள்
- சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.ரம்யா, தமிழக அளவில் 10-வது இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஒதுக்கீட்டில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
ரம்யாயின் தந்தை நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மாணவி ரம்யா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள், பிளஸ் 1-ல் 512, பிளஸ் 2 வகுப்பில் 533 மதிப்பெண்கள் என பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அரசு தேர்வு மையத்தில் சேர்ந்து படித்து நீட் எழுதியவரால் மருத்துவப் படிப்பை எட்ட முடியவில்லை.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த ரம்யாவை அவரது பெற்றோர், ராசிபுரத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். நெசவுத் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், ரூ.1.10 லட்சம் செலவு செய்து படித்து தான் மருத்துவம் எனும் கனவை எட்ட வேண்டியுள்ளது
கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள்
- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும் என ஒரே கிராமத்தில் இருந்து 5 மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் 5 பேரும் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஆசிரியர்கள் உதவியுடன் மீண்டும் தனியார் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி எடுத்துள்ளனர். இவர்களில் 3 பேர் சென்னையிலும், இரண்டு பேர் திருச்சியிலும் தங்கள் சக்திக்கு மீறிய பணத்தை பயிற்சி மையத்திற்கு செலுத்த வேண்டியிருந்துள்ளது.
விவசாயக் கூலியின் மகள்
மாணவி தரணிகாவின் அம்மா, அப்பா இருவருமே விவசாயக் கூலிகள்தான். நன்றாக படிக்கும் மாணவியாக இருந்த போதிலும் நீட் கோச்சிங் சென்டரில் சேர பணம் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு தேர்வாக முடியவில்லை. விவசாயக் கூலிகளான அவரது பெற்றோர் மிகுந்த கஷ்டப்பட்டு சக்திக்கு மீறிய கடன்களை வாங்கி, அவரை இந்த ஆண்டு மீண்டும் தேர்வெழுத வைப்பதற்காக கோச்சிங் சென்டரில் சேர்த்திருக்கிறார்கள்.
தற்போது மருத்துவ மாணவியாக தேர்வாகியுள்ள தரணிகா, ஊடகங்களிடம் பேசும்போது,
”நான் எப்படியாவது மருத்துவராகி என் பெற்றோர் எனது நீட் கோச்சிங் கட்டணத்திற்காக வாங்கியுள்ள கடனகளை அடைக்க வேண்டும்”
என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகளின் பின்னே உள்ள வலி மிகவும் துயர் மிகுந்ததாகும்.
பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!
மாணவர்களை கடன்காரர்களாக கல்லூரிக்கு அனுப்பப் போகிறோமா?
நீட் எனும் நுழைவுத் தேர்வு இந்த சூழலைத் தான் இங்கு உருவாக்கியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மகிழ்ச்சியான விடயம் என்றாலும், கோச்சிங் சென்டர்கள் எனும் கல்விக் கொள்ளையை ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தலையில் திணிக்கும் இந்த தகுதித் தேர்வு தேவையா என்று மக்கள் எழுப்பும் கேள்வி முக்கியமானதே.
இந்த கேள்விக்கு விடையில்லாமல் 7.5% சதவீத ஒதுக்கீட்டினால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என நினைத்தால் நாம் ஆண்டுதோறும் 17 வயது பிள்ளைகளை கடன்காரர்களாக கல்லூரிகளுக்கு அனுப்பப் போகிறோம் என்பதே உண்மை.
நீட் தேர்வுக்கு தாயராகும் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவரும் இதே போன்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.