நடந்து முடிந்த 2020-ம் ஆண்டானது இந்தியாவில் பதிவான அதீத வெப்பமான ஆண்டுகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் மையம் தெரிவித்துள்ளது.
1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.
அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
2000-ம் ஆண்டுக்குப் பிறகான இரு 10 ஆண்டுகளில் (2000-2010 மற்றும் 2011-2020)சராசரியான நிலத்தின் வெப்பநிலை முறையே 0.23 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருப்பதாகவும், ஆதலால் இந்த 20 ஆண்டுகளையும் வெப்பமான தசாப்தங்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
- குறிப்பாக 1901-ம் ஆண்டுக்குப் பிறகான 15 அதிக வெப்பமான ஆண்டுகளில், 12 ஆண்டுகள் 2006-க்குப் பின்னரே பதிவாகியுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
- அதீத வெப்பநிலை நிலவிய 5 ஆண்டுகளாவன: அதிகபட்சமாக 2016-ம் ஆண்டு 0.71 டிகிரி செல்சியஸ் அளவும், அதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு 0.55 டிகிரி செல்சியஸ், 2017-ம் ஆண்டு 0.541° செல்சியஸ், 2010-ம் ஆண்டு 0.539°செல்சியஸ் மற்றும் 2015-ம் ஆண்டு 0.42°செல்சியஸ் அளவும் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2020-ம் ஆண்டில் இந்தியாவில் பதிவான சராசரி நிலத்தின் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை இயல்பை விட 0.29°C செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும், இந்த வெப்பநிலை 1901-ம் ஆண்டில் (நாடு தழுவிய வெப்பநிலை பதிவு தொடங்கிய ஆண்டு) இருந்து கணக்கிடுகையில் எட்டாவது அதீத வெப்பமான ஆண்டாகும்.
இதே 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை என்பது 1.2 டிகிரி செல்சியஸ் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணங்கள்
இந்தியாவில் நிலவிய இந்த அதீத வெப்பநிலைகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்திய வானிலை ஆய்வுத் மையம் சில முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளது. அவை
1) பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் வெப்ப அளவுகளின் மாறுதல்களின் காரணங்களாக ஒட்டு மொத்தமாக வெப்பநிலை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
2) மேலும் இந்தியாவில் 2020-ம் ஆண்டு குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை 0.14 டிகிரி அளவில் இயல்பை விட அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களைத் தவிர ஆண்டின் அனைத்து மாதங்களிலும் சராசரி மாத வெப்பநிலை என்பது இயல்பை விட அதிக வெப்பமாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
2020 ஆண்டு மழைக்காலத்தில் இந்தியாவில் மழைப்பொழிவு சராசரி இயல்பை விட 109 மடங்கு அதிகமாகவே இருந்ததுள்ளது. ஆனாலும் அதிகமான வெப்பநிலை பட்டியலில் 2020 ஆண்டு இடம்பெற்றுள்ளது என்பது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் 2020-ல் இறந்தவர்கள்
2020-ம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் குளிர் காற்று போன்ற தீவிர வானிலை மாற்ற பாதிப்புகளையும் இந்தியா அனுபவித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இது போன்ற தீவிர வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 1,565 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல்கள் காரணமாக மட்டும் 815 நபர்கள் இறந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக வெள்ளம், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல்கள் காரணமாக பீகார் மாநிலத்தில் மட்டும் 379 நபர்கள் உயிரிழந்துள்ளனர் .இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் 356 நபர்கள் இறந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்பட்ட 5 புயல்கள் காரணமாக இந்தியாவில் 115 நபர்களும் 17,000க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் இறந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
“கிழக்கு பசிபிக் கடல்பகுதி குளிர்ந்த நிலையில் இருந்தபோதிலும் 2020 வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாகும் இடம்பெற்றுள்ளது. கார்பன் வெளியேற்றத்தின் காரணமாக புவி வெப்பமடைந்து இது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, மழைக்காலத்திற்குப் பிந்தைய காலங்களில் வெப்பநிலை அதிகரித்து வரும் போக்கு அதிகரித்துவருவதை தரவு காட்டுகிறது” என புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை மாற்ற விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் தெரிவித்தார்.