வேதாந்தா குழும நிறுவனம் ஆந்திரா மாநிலத்தில் தொடங்கவுள்ள ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி மக்களுக்கு கேடு விளைவிப்பதாக மூடப்பட்ட, வேதாந்தா குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலத்தை வென்று விரைவில் இத்திட்டத்தை தொடங்க இருக்கிறது.
வரும் டிசம்பர் 17-ம் தேதி ஆந்திர மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரக்தூரு கிராமத்தில் இதற்கான கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை எதிர்த்து பல கல்வியாளர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள், பாதிக்கப்படப்போகும் கிராமங்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறார்கள்.
வேதாந்தாவின் திட்ட முன்வரைவு
2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய ஏலத்தின் மூலம் கெய்ர்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் இந்த ஏலத்தை கைப்பற்றியது. சுமார் 650 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த திட்டம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேதாந்தா நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 30 மில்லியன் மெட்ரிக் கன அடி ஹைட்ரோகார்பன் எரிவாயுவை உற்பத்தி செய்ய இருப்பதாகவும் வேதாந்தாவின் திட்ட முன்வரைவு தெரிவித்துள்ளது.
மேலும் வேதாந்தாவின் இந்த அசுர திட்டத்திற்கு கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள காசா பகுதியில் 35 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் 10 ஹைட்ரோகார்பனை பதப்படுத்துவதற்கான கட்டுமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் வேதாந்தாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா நிறுவனம் நீரியல் விரிசல் (Fracking) முறையால் ஏற்படும் பாதிப்பை தனது சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் குறிப்பிடவில்லை என இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் கே.பாபுராவ் எச்சரித்துள்ளார்.
“மீத்தேன் வாயுக்களை நீரியல் விரிசல் முறைகளால் (Fracking Process) எடுக்க முன்மொழியப்பட்டுள்ளதே இத்திட்டத்தின் முதன்மையான பிரச்சினை. நீரியல் விரிசல் முறை என்பது ஒரு ஆபத்தான செயல்முறையாகும். இதனால் இப்பகுதி பூகம்பத்தால் எளிதாக பாதிக்கக்கூடிய பகுதியாக மாறக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மகசூல் பயிர்களை விளைவிக்கும் வயல்வெளிகளை எல்லாம் இத்திட்டத்திற்கு ஒதுக்க அரசாங்கத்தின் தரப்பிலிருந்து காட்டப்படும் தீவிரம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக” பாபுராவ் தெரிவித்துள்ளார்.
மீத்தேன் வாயுக்களை வெளியேற்றும் நீரியல் விரிசல் முறை
நிலக்கரிப்படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. சுமார் 1000 மீ முதல் 5000 மீ வரை நிலத்துக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நீரின் அழுத்தத்தினால் பாறையிடுக்குகளின் உள்ளே புதைந்து கிடைப்பவை ஆகும். நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றியதன் பின்னரே மீத்தேன் வாயுவால் வெளிவர முடியும்.
ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வெளியேற்றப்படும் நிலத்தடி நீரை தொடர்ந்து அழுத்தபட்ட காற்றின் மூலம் 78 வகையான வேதிப்பொருட்கள் நீருடன் கலந்து நிலத்தினுள் செலுத்தபடும். இதன் மூலமாக நிலத்திற்கு அடியில் விரிசல் உண்டாகி மீத்தேன் வாயுக்கள் வெளியேறும். பின்னர் வெளியேறும் மீத்தேன் வாயுக்களை நிலத்திற்கு மேல் கலன்களிள் பிடித்து சுத்திகரித்து பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும்.
பின்னர் ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு அதிகமான உப்பு கலந்து இருக்கும். மேலும் குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா,ஆர்செனிக் போன்ற பலவிதமான நச்சு கழிவுகளுடன் கதிரியக்க கழிவுகளும் வெளியேற்றபடுகின்றன.
தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனம்
வேதாந்தா நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் 2 தொகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிணறுகளை 4,00,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் (கடல் மற்றும் தரை பகுதிகளில்) தோண்டி மீத்தேன் எடுக்க இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தது. இதற்காக 13,000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தது.