தேர்தல் திட்டங்களை வகுக்கும் IPAC எனும் நிறுவனத்தின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்.
எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
குமுறும் முன்னாள் எம்.எல்.ஏக்கள்
திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மூன்று முறை எம்.எல்.ஏ வாக இருந்த அனந்தா டெப் அதிகரி, பிரசாந்த் கிஷோரை நியமித்த பிறகு கட்சியின் வலிமை பெருமளவு குறைந்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் குழுவினர் கட்சிக்குள் ஏற்படுத்தும் பிரிவுகள், பெரும் பிரிவினைக்கு வழிவகுத்துள்ளதாகவும், இதனை மம்தாவிற்கு தான் கடிதமாக எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏவான சில்பத்ரா தத்தாவும் பிரசாந்த் கிஷோர் குறித்தான அதிருப்தியினை மம்தாவிற்கு தெரிவித்திருப்பதோடு, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். பணத்திற்காக ஒரு கம்பெனி தேர்தல் நடைமுறைகளை சொல்லித்தர வந்திருப்பதாகவும், வாக்குகள் பெறுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வதாகவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரே முன்னாள் எம்.எல்.ஏ-வான மிகிர் கோஸ்வாமி, ஒரு கான்ட்ராக்டர் ஒரு கட்சியை கட்டுப்பத்தினால், அக்கட்சி தோற்றுப் போகும் என்று அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதற்கு பின்னர் அவர் பாஜக-வில் இணைந்து விட்டார்.
கட்சியின் மூத்த தலைவர்களை தவிர்த்துவிட்டு IPAC நிறுவனமே பெரும்பாலான முடிவுகளை எடுப்பதாக கட்சிக்குள் அதிருப்தி கிளம்பியிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக IPAC கம்பெனியின் ஊழியர்கள் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை நிலை பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.