1) தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் கோட்டைபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 5 விசைப்படகுகளில் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மூன்று படகுகளும் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2) சபரிமலையில் கொரோனா
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், உட்சபட்சமாக ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது. அந்த வகையில் சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3) ஈரோட்டில் விவசாயிகள் போராட்டம்
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார மசோதா 2020-ஐ சட்டமாக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுடெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. அதன்படி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஈரோட்டில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நேற்று ஈரோடு, பெருந்துறை ரோடு மேம்பாலம் பகுதியில் தனியார் இடத்தில் விவசாய சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம் தொடங்கினார்கள்.
4) சுற்றுலா மையங்கள் திறப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அதில், முக்கொம்பு சுற்றுலா மையமும் ஒன்றாகும்
முக்கொம்பு சுற்றுலா மையம் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. முக்கொம்பு திறக்கப்பட்டதையொட்டி, பணியாளர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தினர். மேலும் பூங்காக்களை சீரமைத்து கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர். கிருமிநாசினி கொடுத்து கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அதேபோல தமிழக முழுவதும் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5) கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அந்த சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
6) தமிழ்நாட்டில் கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று 1,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,00,029.
தமிழ்நாட்டில் கொரோனாவால் நேற்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,909 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,20,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7) எய்ம்ஸ் செவிலியர்கள் போராட்டம்
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் நேற்று மதியம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்தப் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியா்கள் சங்கத்தினா் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
8) ஐந்து மணிநேரம் முடங்கிய கூகுள்
கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், கூகுள் ட்ரைவ், கூகுள் மீட், கூகுள் டாக்ஸ், கூகுள் அசிஸ்டன்ட் தொடங்கி முக்கிய சேவைகள் நேற்று மதியம் முதல் முடங்கின.
இதனையடுத்து டுவிட்டரில் #GoogleDown #YouTubeDOWN #GoogleOutage என்ற ஹேஸ்டேக்குகள் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த கூகுள், பிரச்னைகளை சரி செய்து வருகிறோம் என்று தெரிவித்தது. ஜிமெயில், யூடியூப் சேவைகள் மீண்டும் வேலைசெய்ய தொடங்கின. மற்ற சேவைகளும் ஒவ்வொன்றாக சீரானது.
மொத்தமாக ஐந்து மணி நேரம் கூகுள் சேவைகள் முடக்கப்படிருந்தது.
9) 7000 தொழிலாளர்கள் மீது வழக்கு
கோலார் ஐபோன் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைந்து வருவதாகவும், சில தொழிலாளர்கள் தங்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் சங்கங்கள் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதி சனிக்கிழமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொழிலாளர்கள் கற்களை வீசி கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்தனர்.
தற்போது நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் 7,000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் 160 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10) பாஜக எம்.பி-யின் சர்ச்சைக்குரிய சாதிவெறி பேச்சு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜக-வின் போபால் தொகுதி எம்.பி-யுமான பிரக்யா சிங் தாக்கூர் சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் சேஹோரில் நடந்த சத்ரிய மகாசபா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். “நம்முடைய தர்மசாஸ்திரத்தில் சமுதாயம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.
“நீங்கள் ஒரு சத்திரியரை சத்திரியர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஒரு பிராமணரை பிராமணர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்வதில்லை. ஒரு வைசியரை வைசியர் என்று அழைத்தால் அவர்கள் மோசாக உணர்வதில்லை. ஆனால், நீங்கள் ஒரு சூத்திரரை சூத்திரர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக உணர்கிறார்கள். இது ஏன்? அறியாமை காரணமாக அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.” என்று பேசியுள்ளார். அதற்கு மிகப் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.