ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய 27 சதவீத இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படாமல் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
2017ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ இடங்கள் பொதுப் பிரிவின் கீழ் சேர்க்கப்படுகிறது. பொதுப்பிரிவின் கீழ் சேர்க்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களினுடைய மருத்துவ படிப்பிற்கான இடங்களை, முற்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார நலவிடைந்தோருக்கான இட ஒதுகீட்டின்(EWS) அடிப்படையில் உயர்சாதியினர் பெற்றுக் கொண்டுள்ளனர். இடஒதுக்கீட்டின் அடிப்படையான சமூகநீதி தத்துவத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் விரோதமாக மருத்துவக் கல்வியிலிருந்து பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ள இடங்கள்
இந்தியாவிலுள்ள மாநில அரசுகளுக்கு கீழான அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களிலுள்ள மருத்துவப் பட்ட படிப்பிற்கான (MBBS) இடங்களில் 15% ஒன்றிய அரசின் தொகுப்பிற்கு கொடுக்கப்படுகிறது. மருத்துவப் பட்ட மேற்படிப்பில் (Medical PG courses) 50% இடங்கள் கொடுக்கப்படுகிறது. அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள இம்மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் இடஒதுக்கீடின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்கபப்ட வேண்டும். பட்டியலின சாதி மாணவர்களுக்கு (SC) 15 சதவீத இடங்கள், பழங்குடியின மாணவர்களுக்கு(ST) 7.5 சதவீத இடங்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(OBC) 27 சதவீத இடங்கள் என மொத்த இடங்களில் 49.5% இடங்கள் இடஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும்.
2019-ம் ஆண்டின் கணக்குப்படி, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 19100 மருத்துவப்பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் உள்ளன. அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்காக ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து 50% இடங்களை, அதாவது 9550 மருத்துவ மேற்படிப்பு(PG) இடங்களைப் பெறுகிறது. அதேபோல் மருத்துவ பட்டப் படிப்பிற்கான (MBBS) இடங்களில் மாநில அரசுகள் ஒதுக்க வேண்டிய 15 சதவீதத்தின் அடிப்படையில் 4500 இடங்கள் ஒன்றிய அரசின் தொகுப்பிலுள்ளது.
இதுபோக அரசு மருத்துவ கல்வி நிறுவனங்களில் பல் மருத்துவத்திற்கான பட்ட மேற்படிப்பில் 676 இடங்களும், பட்டப் படிப்பில் 425 இடங்களும் ஒன்றிய அரசின் தொகுப்பின் கீழுள்ளது.
OBC மாணவர்களுக்கு சேர வேண்டிய இடங்கள்
ஒன்றிய அரசின் தொகுப்பிலுள்ள மருத்துவ கல்வி இடங்களின் அடிப்படையில் பார்த்தால், மருத்துவப் மேற்படிப்பில் 2,578 இடங்களிலும், மருத்துவப் பட்டப் படிப்பில் 1,215 இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அதேபோல் பல்மருத்துவத்திற்கான பட்ட மேற்படிப்பில் 183 இடங்களிலும், பட்டப் படிப்பில் 125 இடங்களிலும் சேர்க்கப்பட வேண்டும்.
கல்வி | மத்திய தொகுப்பிலுள்ள மொத்த இடங்கள் | மத்திய தொகுப்பின் கீழ் OBC மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடங்கள் |
மருத்துவ மேற்படிப்பு | 9550 | 2578 |
மருத்துவ பட்டப் படிப்பு (MBBS) | 4500 | 1215 |
பல் மருத்துவ மேற்படிப்பு | 676 | 183 |
பல்மருத்துவ படிப்பு(BDS) | 425 | 125 |
ஆனால் ஒன்றிய அரசின் தொகுப்பின் கீழுள்ள இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் தங்களுக்குரிய மருத்துவக் கல்வியைப் பெற முடிவதில்லை.
தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் எதிர்ப்பு
ஒன்றிய அரசு தொகுப்பிலுள்ள மருத்துவ கல்வி இடங்களுக்கான மாணவச் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்குரிய இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காததை சுட்டிக்காட்டி, 2019-ம் ஆண்டே முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், “பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை சரி செய்யப்படாமல் இவ்வருட மருத்துவ கல்விக்கான மாணவச் சேர்க்கையிலும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து தற்போது பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருணாநிதி, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தம் கடிதத்தில்,” ஒவ்வொரு வருடமும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 3000 மருத்துவக் கல்வி இடங்கள் மறுக்கப்பட்டு, அவை பொதுப் பிரிவின் கீழ் சேர்க்கப்படுகின்றது” இதன் காரணமாக,”பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெறும் 371 மருத்துவ மேற்படிப்பு இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், பொதுப்பிரிவின் கீழ் கடைபிடிக்கப்படும் பொருளாதார நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் உயர் சாதியினர் 653 மருத்துவ மேற்படிப்பு இடங்களை பெற்றிருக்கின்றனர்” என விளக்கியுள்ளார்.
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் (Union/ Centre Medical Institutions) மட்டுமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசு தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கல்வியிடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்லை. இதைப்பற்றி தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திரு. கருணாநிதி, ”அம்மருத்துவ இடங்கள் ஒன்றிய அரசு தொகுப்பிற்கு ஒதுக்கப்படாமல் மாநில அரசுகளின் அதிகார கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இன்னும் கூடுதலான பயனை அடைந்திருக்க முடியும்.
”உதாரணமாக, தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்களில் 1758 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன, இவற்றில் 879 இடங்கள் ஒன்றிய அரசின் தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த 879 இடங்களில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த 879 இடங்களும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழே இருந்திருக்குமானால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இடஒதுக்கீடு நடைமுறையின்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 440 இடங்களை பெற்றிருக்க முடியும்” என்று பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை விளக்கியுள்ளார்.
மருத்துவ கல்வியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காததை பல எதிர்க்கட்சிகள் கண்டித்து குரலெழுப்பியுள்ளன. தமிழ்நாட்டைச் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
”மொத்தமுள்ள 9550 கல்வியிடங்களில் 27% இடஒதுக்கீடு உரிமையுடைய இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3.9% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “பாரளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சனை குறித்து பலமுறை குரலெழுப்பியும் ஒன்றிய சுகாதாரத் துறை இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு போதிய கவனமெடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் இச்செயலைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமூகநீதி கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து, மருத்துவக் கல்வி என்பது ஏழை, எளிய, கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் கனவிலும் எட்டாக் கனியாக ஆக்கிவிட்டது. இதே நிலைமைதான் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளிலும் நிலவுகிறது.” என்று குறிப்பிட்டுள்ள அவர்,
“பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017-2018 இல் 3101 இடங்கள் பறிக்கப்பட்டன. 2018 -19 இல் 2,429 இடங்களும், 2019-20 இல் 2,207 இடங்களும் மத்திய பா.ஜ.க. அரசால் பறிக்கப்பட்டு இருக்கின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 7,737 இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இழந்து இருக்கின்றனர்.
சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் வன்மையான கண்டனத்திற்கு உரியது. பிற்படுத்தப்பட்டோரின் சட்டபூர்வமான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எப்படி கிடைத்தது இடஒதுக்கீட்டு உரிமை?
இடஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் சமூக நிலையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சமூக தளங்களில் முன்னேற்றுவதற்காக அரசு ஏற்றுக் கொண்டுள்ள சமூக முன்னேற்ற வழிமுறையாகும். அரசு இடஒதுக்கீடு என்ற சமூக-முன்னேற்றத் திட்டத்தை ஏற்றுகொண்டதற்குப் பின்னால் சமூகப் பிரிதிநிதித்துவத்தில் புறக்கணிக்கப்பட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நூற்றாண்டுகால போராட்டமும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் உழைப்பும் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடை சட்டமாக்கிய அம்பேத்கர், பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலைமையை கணக்கெடுத்து அதற்கேற்றார் போல் அவர்களுக்கான இட ஒதுக்கீடை உருவாக்க ஆணையம் ஒன்றை அமைக்க நீண்ட நாட்களாக போராடி வந்தார். இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரால் எழுப்பப்பட்ட ’பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணைய கோரிக்கை’ ஒன்றிய அரசால் பொருட்படுத்தப்படாமல் போகவே, தனது ஒன்றிய அமைச்சர் பதவியை தூக்கியெறிந்தார்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1979ம் ஆண்டில் பி.பி மண்டல் தலைமையில் ”கல்வி மற்றும் சமூக நிலைமைகளின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையம்” அமைக்கப்பட்டது. மண்டல் ஆணையம் 1983ல் தனது அறிக்கையை சமர்பித்த பின்னும் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படாமலே இருந்து வந்தது. 1989-ல் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங், மண்டல் அறிக்கையின் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடை செயல்படுத்தினார்.
இடஒதுக்கீடு உரிமையை அழிக்க முயலும் பாஜக
இது வி.பி.சிங் அரசிற்கு ஆதரவளித்து வந்த பாரதிய ஜனதா கட்சியால் (பாஜக) கடுமையாக எதிர்க்கப்பட்டது. நாடு முழுவதும் உயர்சாதி மாணவர்களைக் கொண்டு வி.பி. சிங் அரசிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை பாஜக நடத்தியது. வி.பி. சிங் அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. உச்ச நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கும் இடைக்கால தடை வாங்கப்பட்டது. முடிவாக 1992-ம் ஆண்டு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
பல்லாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்து செயல்பாட்டிலுள்ள 25 ஆண்டுகளுக்குள்ளாகவே பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான மருத்துவக் கல்வி இடஒதுக்கீடை பாஜக தலைமையிலான அரசு பறித்திருக்கிறது. அன்று வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடை தடுத்து நிறுத்த முயன்ற பாஜக, முடியாமல் போகவே இன்று ஆட்சியில் அமர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோயுள்ள நிலையில், அதில் தப்பிப் பிழைத்து வரும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய இடங்களையும் மறுப்பது, சமூகநீதிக்கு எதிரான அதனது ‘மனுநீதியைக்’ காட்டுகிறது.
மேலும் தமிழ்நாடு அரசு தம் மக்களின் வரிப்பணத்தை கொண்டு உருவாக்கிய மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டதோடு இல்லாமல், அதனைக் கொண்டு தமிழ்நாடு உருவாக்குகின்ற ’சமூகநீதி கொண்ட பொது மருத்துவக் கட்டமைப்பையும்’ சிதைக்கின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, அவர்களது வரிப்பணத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்கள் ஒன்றிய அரசினால் உயர் சாதியினருக்கு பறித்துக் கொடுக்கப்படுகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிடமிருந்து பறித்துக் கொடுக்கும் மருத்துவ கல்வியிடத்தில் தமிழரல்லாதோர் அமர்த்தப்படுகின்றனர்.
கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு போதிய நிதி ஒத்துழைப்பு தராத போதும், தமிழ்நாடு அரசு, தான் ஏற்கனவே உருவாக்கிய தன் சுய மருத்துவக் கட்டமைப்பின் மூலம் கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது. மருத்துவம், உணவு உள்ளிட்ட மக்கள் நலக் கட்டமைப்புகளில் நேரடியாகப் பங்காற்றும் மாநில அரசுகள் அக்கட்டமைப்புகளில் கொண்டிருக்க வேண்டிய தன்னதிகாரத்தின் யதார்த்த அவசியத்தை கொரோனா உணர்த்தியிருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடுகளோ தொடர்ந்து அதற்கு நேர் மாறானதாகவே இருக்கிறது.
வேறெப்போதும் விட கொரோனா காலம் பொது மருத்துவத்தின் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தம்முயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் பலர் இடஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வி வாய்ப்பு பெற்றவர்கள். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வந்த அவர்களால் தான் சமூக நோக்கோடு மருத்துவ சேவையாற்ற முடிந்திருக்கிறது. பொது சமூகம் அனைத்திற்குமான பொது மருத்துவக் கட்டமைப்பில் சமூகத்தில் அனைத்து பிரிவும் பங்கெடுக்க வேண்டியது வலிமையான பொது மருத்துவ கட்டமைப்பிற்கான அடிப்படைகளில் ஒன்றாகும். வனிக மைய நோக்குடன் ஏழை, எளிய மாணவர்வர்களுக்கான சமூக நீதியை மறுப்பது பொது மருத்துவக் கட்டமைப்பை அழிக்கின்ற நடவடிக்கையாகும்.