நிதி ஆயோக்

அதீத ஜனநாயகம் இருப்பதால்தான் இந்தியாவில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக உள்ளது – நிதி ஆயோக் சி.இ.ஓ

இந்தியாவில் அதீதமான ஜனநாயகம் இருப்பதால்தான் முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது கடினமான ஒன்றாக இருக்கிறது என்று நிதி ஆயோக்கின் சி.இ.ஓ அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பத்திரிக்கையான ஸ்வராஜ்யா(Swarajya) இதழ் ஒருங்கிணைத்த ஒரு ஆன்லைன் கருத்தரங்க நிகழ்வில் பேசிய போது அமிதாப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக 10 துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. சுரங்கத் துறை, நிலக்கரி, தொழிலாளர் துறை, மின்சாரத் துறை, விவசாயம் ஆகிய துறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. மின்சார உற்பத்திக் கழகங்களை தனியார்மயப்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை அரசுகளைக் கேட்டுள்ளோம். மின்சார உற்பத்தித் துறையில் போட்டி அதிகரித்தால்தான், குறைவான விலையில் மின்சாரத்தை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

10 முதல் 12 மாநிலங்கள் அதிகமாக வளர்ச்சியடைந்தாலே, இந்தியாவும் வளர்ச்சியடைய முடியும். மாநிலங்கள் தடியை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தகட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக வேண்டும். இந்த கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் நாம் சீனாவுடன் போட்டி போட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நாம் அதீதமான ஜனநாயகத்தினைக் கொண்டிருப்பதால், இந்தியாவில் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சூழலில் இத்தகைய சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டுமானால் அரசுக்கு அது குறித்த அரசியல் விருப்பம் (Political Will) தேவை. ஏனென்றால் இன்னும் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கடினமான சீர்திருத்தங்களையெல்லாம் செய்து முடிப்பதற்கான அரசியல் விருப்பம் தன்னிடம் இருப்பதைக் காட்டியிருக்கிறது என்று பேசியுள்ளார். 

மேலும் அவரிடம் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது பாதிக்கப்படாது என்றும், மண்டி முறை தொடரும் என்றும், இந்த புதிய சட்டங்களின் மூலம் விவசாயிகள் யாருக்கு விற்க விருப்பப்படுகிறார்களோ அவர்களுக்கு விற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு சொன்ன பதிலையே கூறியுள்ளார். 

ஆத்மநிர்பார் பாரத் என்ற பெயரில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க 10 துறைகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அதில் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் இந்தியாவை உற்பத்தியில் முன்னோக்கி நகர்த்தப் போகிறது என்றும் தெரிவித்தார். திட்டமிடப்பட்ட நிலைத்த நகரமயமாக்கல் என்பது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றும் நிதி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் : கார்ட்டூனிஸ்ட் அலோக்

நிதி ஆயோக்

நிதி ஆயோக் என்பது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ம் ஆண்டுவரை இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்த திட்டக் குழுவினை (Planning Commission) கலைத்துவிட்டு மோடி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *