2019-ம் ஆண்டிற்கான சர்வதேச ஆயுத விற்பனையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக சமீபத்திய ஆராய்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சீனா தனது ஆயுத விற்பனையை கடந்த காலத்தைக் காட்டிலும் அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI- Stockhom International Peace Reserch Institute) கடந்த திங்கள்கிழமை (7/12/20) வெளியிட்ட புள்ளி விவரத்தில், உலகளவில் நடைபெற்றுவரும் ஆயுத விற்பனை குறித்தான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 25 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 8.5% அதாவது சுமார் 361 பில்லியன் டாலர் விற்பனையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஐ.நா மன்றம் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகையை விட 50 மடங்கு அதிகமாகும்.
2019-ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள ஸ்டாக்ஹோம் ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) கணக்குப்படி, அதிகரித்துவரும் சர்வதேச ஆயுத விற்பனையில் முதல் 25 இடங்களுக்குள் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா ஆயுத நிறுவனங்கள்
முதல் 25 இடங்களுள் பட்டியலிடப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் மட்டும் சுமார் 60% அளவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கவைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக முதல் 5 இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களான லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரம்மன், ரேதியோன் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆக்கிரமித்து சுமார் 166 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐரோப்பா, ரஷ்யா
முதல் 25 இடங்களில் அமெரிக்காவிற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தங்கள் பங்கிற்கு 18% ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர்.
ஏர்பஸ் மற்றும் தலேஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனமானது, ரஃபேல் போர் விமான ஏற்றுமதியால் 38-வது இடத்திலிருந்து 17-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் ரஷ்யாவைச் சேர்ந்த 2 ஆயுத நிறுவனங்கள் 3.9% பங்குகளுடன் இடம்பெற்றுள்ளன.
சீனா ஆயுத நிறுவனங்கள்
2019-ம் ஆண்டில் முதல் 25 இடங்களுள் பட்டியலிடப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் 15.7% ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இதில் சீனா அரசுக்கு சொந்தமான ஏ.வி.ஐ.சி, சி.இ.டி.சி மற்றும் நோரின்கோ ஆகிய ஆயுத நிறுவனங்கள் முறையே ஆறு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களை பிடித்துள்ளன.
“சீன ஆயுத நிறுவனங்கள் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரம்புகள்” காரணமாக சீனாவிற்கு தகுந்த சந்தை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சீமோன் வெஸ்மேன் தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆயுத சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், தற்போது சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களின் விற்பனை 2019-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளதாக ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்’ ஆயுத மற்றும் இராணுவ செலவினங்களை ஆராயும் திட்ட இயக்குனர் லூசி பெராட்-சுட்ரூ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆச்சரியம் தரும் விதமாக முதன்முறையாக மத்திய கிழக்கு நாட்டின் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஆயுத உற்பத்தி நிறுவனமான எட்ஜ் (EDGE) முதல் 25 இடங்களில் சர்வதேச ஆயுத விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகள் படிப்படியாக ஆயுத வர்த்தகத்தில் நுழையத் தொடங்கி இருப்பதாகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடப்படும் தொகை பல நாடுகளில் அதிகரித்து வரும் சூழல் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதத்தை கொள்முதல் செய்யும் அளவு
இதே நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், 2015-2019 ஆண்டு காலப்பகுதிக்கான மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 9.2% பங்குடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டது.
மேலும் பிற ஆசிய நாடுகளான சீனா ஐந்தாவது இடத்திலும் (4.3%), பாகிஸ்தான் 11 வது இடத்தில் (2.6%) இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவலை தரும் அளவிற்கு அதிகரிக்கும் ஆயுத நிறுவனங்களின் உற்பத்தி
சர்வதேச ஆயுத விற்பனையில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் மேற்குலகைச் சார்ந்தவையாக இருந்தாலும், இந்நிறுவனங்கள் சவூதி அரேபியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தங்களுக்கான துணை நிறுவனங்களை அமைத்து ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரம் காட்டுகின்றது.
அதாவது 49 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்களில் சுமார் 17 நிறுவனங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளில் செயல்பட்டு வருவது வருத்தம் அளிக்கும் செய்தியாகும்.
“பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளை முடக்கி அவற்றின் உலகளாவிய சந்தையை கட்டுப்படுத்துவதன் காரணமாக, அமெரிக்க நிறுவனங்களுக்கு குறிப்பாக தெற்கு பகுதிகளில் இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் ஆயுத தேவைக்கு போட்டியில்லா சந்தையை வழங்க முடிவதாக” ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சீமோன் வெஸ்மேன் தெரிவித்தார்.
முகப்புப் படம்: கோப்பு- சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்