உச்சநீதிமன்றத்தில் அனிதா

மருத்துவர் அனிதா எனும் அணைக்க முடியா பெருஞ்சுடர்!

அனிதா..மூன்று ஆண்டுகள் அல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இந்த பெயரினை தமிழ் சமூகம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய பெயராக இந்த பெயர் இருக்கிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்து மிகச் சிறந்த மாணவியாக தேர்வான பின்பும், அனிதாவினால் மருத்துவராக முடியவில்லை. தன்னைப் போன்ற ஏராளமான ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை நிறைவேற்றுவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்த ஏழை சிறுமி அனிதாவினால், பணம் படைத்த அதிகாரவர்க்கத்தினை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. செப்டம்பர் 1, 2017 அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் கல்வியிலும், வளர்ச்சியிலும் பின்தங்கிய ஏழ்மையான மாவட்டமாக இருக்கிறது. அம்மாவட்டத்தின் குழுமூர் என்ற கிராமத்தில் பிறந்த அனிதா, சிறு வயதிலேயே தன் தாயினை இழந்து விட்டார். தன் தாய்க்கு நேர்ந்த நிலை தன் ஊரில் பிறிதெவருக்கும் நேரக் கூடாது என்பதற்காகவே, மருத்துவராவதை தனது லட்சியமாகக் கொண்டு படித்து வந்திருக்கிறார். ஹாலோப்ளாக் கற்களால் கட்டப்பட்ட வீடு, பூசப்படாத தரை என கூலித் தொழிலாளிக்கு மகளாகப் பிறந்து வாழ்ந்த போதும் வறுமையினை தன் கல்விக்கு தடையாக அனிதா பார்க்கவில்லை.

அனிதாவின் சாதனை மதிப்பெண்கள்

அப்படி படித்து இயற்பியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண், வேதியியல் பாடத்தில் 199 மதிப்பெண், உயிரியல் பாடத்தில் 194 மதிப்பெண் எனப் பெற்று மருத்துவப் படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தார். நீட் தேர்வு இல்லாமல், இதற்கு முன்பு வரை பின்பற்றி வந்த நடைமுறைபோல பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால், முக்கிய மருத்துவக் கல்லூரிகளிலேயே அனிதாவிற்கு இடம் கிடைத்திருக்கும்.

அனிதாவின் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

ஆனால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நீட் எனும் தேசிய தகுதித் தேர்வு முறையானது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அனிதாவின் கனவினை கலைத்தது. கடைசிவரை நீட் தேர்வு நடத்த மாட்டோம் என்பதே தங்கள் நிலைப்பாடு எனக் கூறிவந்த தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்குப் பணிந்து தேர்வை நடத்துவதற்கு ஒத்துழைத்ததால், அனிதாவின் மருத்துவக் கனவு காற்றில் கரைந்து போனது.

சோர்ந்து போகாத அனிதா

இருப்பினும் சோர்ந்து போகாத அனிதா நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினாள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வந்து சுகாதாரச் செயலரையும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரையும் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தாள். அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டாள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்தாள்.

குடியரசுத் தலைவருக்கு அனிதா எழுதிய கடிதம்

பிறகு தில்லிக்கு சென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தென்னகத்தின் மூலையிலிருந்து நீட் எனும் தேசியத் தேர்வுக்கு எதிராக வழக்காடச் சென்ற எளிய மாணவியை மொத்த சமூகமும் உற்று நோக்கியது. ஆனாலும் அவரால் அங்கும் வெற்றி பெற முடியவில்லை.

கல்வி உரிமையின் அடையாளமாக மாறிய அனிதா

மருத்துவத்தினை லட்சியமாகக் கொண்டிருந்த அனிதா செப்டம்பர் 1, 2017 அன்று தன் முடிவினை நிர்ணயித்து உயிரை விட்டுவிட்டாள். அனிதாவின் பிஞ்சுக் குரலை அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்நாடு கொதித்தெழுந்தது. கல்வி உரிமைக்கான போர்க்குரலாக அனிதாவின் அடையாளம் மாறியது. அனிதாவின் புகைப்படங்களை கையில் ஏந்திக் கொண்டு உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் மூலைகளெங்கும் தமிழர்கள் போராடத் துவங்கினார்.

பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் போராடத் துவங்கினார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியினை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனும் முழக்கங்கள் தமிழ்நாடு முழுதும் ஒலித்தன. பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. நுங்கம்பாக்கம் பள்ளிச் சிறுமிகள் சாலையை மறித்து நடத்திய போராட்டம், தமிழ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆனால் வழக்குகள், கைது, வாக்குறுதிகள் என்று போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. அனிதாவின் கனவு தன்னைப் போன்ற அனைத்து மாணவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே. ஆனால் அது இன்று வரையிலும் கனவாகவே இருக்கிறது.

மாநிலங்களின் எதிர்ப்பை மீறி, கொரோனா தொற்று பரவும் இந்த சூழலில் கூட நீட் தேர்வை நடத்துவதில் ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக அனிதா எழுப்பிய தீ இன்று வரையிலும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான கோரிக்கைகள் இன்னும் தீவிரமாக எழுந்துகொண்டே இருக்கின்றன.

’நீட் என்பது சமூக அநீதி’ ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET , #NEETisSocial_Injustice, அNEETதி, BringEducation2StateList ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றன. ஏராளமானோர் இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பலரும் நீட் தேர்வுக்கும், பாஜக அரசுக்கும் தங்கள் எதிர்ப்பினை இந்த ஹேஷ்டேக்குகளின் வாயிலாக ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். கல்வி மாநில உரிமையாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

உத்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதையும், சுகாதாரத்தில் அம்மாநிலங்களை விட முன்னேறிய இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் 13% விண்ணப்பங்கள் கடந்த ஆண்டைவிட குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

NEET என்பது Needless Exam Eliminates The poor என்றும் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

சமூகத்தின் பின்தங்கிய பின்புலங்களில் இருந்து வரக் கூடிய மாணவர்கள் மருத்துவர்களாக வருவதை நீட் தேர்வு தடுக்கிறது என்பதும், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பினை நீட் தேர்வு குலைக்கிறது என்பதுமே நீட் தேர்வை எதிர்க்கும் மக்களின் கருத்தாக இருக்கிறது.

அனிதா உயிருடன் இருந்திருந்தால், தற்போது 3-ம் ஆண்டு மருத்துவ மாணவியாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியப் பணியினை செய்து கொண்டிருந்திருப்பாள். மருத்துவர் அனிதாவினை தமிழ்நாடு இழந்துவிட்டது. இனியும் இப்படிப்பட்ட மருத்துவர்களை இழக்கக் கூடாது என்பதே அனிதாவை நினைவு கூறும் அனைவரின் வாதமும்.

முக்கியப் படம்: உச்சநீதிமன்றத்தின் முன்பு நிற்கும் அனிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *