மோடி பாராளுமன்றம்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?

பாராளுமன்ற பணியாளர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, 8 நாட்களுக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டதொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 1-ம் தேதி வரையில் கூட்டத் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக 18 அம்ர்வுகள் திட்டமிடப்பட்டிருந்ததற்கு பதிலாக 10 அமர்வுடன் நேற்று (செப்டம்பர் 23) முடித்து வைக்கப்பட்டது. 

நடைபெற்ற 10 அமர்வுகளில் 25 மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து புறக்கணித்து வெளியேறிய கடைசி 2 நாட்களில் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

25 மசோதாக்கள்

குறிப்பு: இங்கு மசோதாக்களின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்த தகவல்கள் விவாதிக்கப்படவில்லை. முழுமையான பட்டியல் மட்டுமே அளிக்கப்படுகிறது.

 1. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா(The National Forensic Sciences University Bill, 2020)

குஜராத்தில் காந்திநகரில் உள்ள தடயவியல் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள லோக்நாயக்  குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம் ஆகிய இரண்டையும் இணைத்து தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமாக இணைத்துள்ளது. மேலும் இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்த சட்டம் அறிவிக்கிறது.

 1. ராஷ்ட்ரிய ராக்‌ஷா பல்கலைக்கழக மசோதா(The Rashtriya Raksha University Bill, 2020)

இந்த சட்டம் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் துணைவேந்தருடன் கூடிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை குஜராத்தில் நிறுவுகிறது. மேலும் இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கிறது.

 1. இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா (The Indian Medicine Central Council (Amendment) Bill, 2020

ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்தான கல்வி மற்றும் பயிற்சியை ஒழுங்குமுறைபடுத்தும் மத்திய நிர்ணய சபையை இந்த சட்டம் நிறுவுகிறது.

 1. மத்திய ஹோமியோபதி சபை திருத்த மசோதா(The Homoeopathy Central Council (Amendment) Bill, 2020)

ஹோமியோபதி கல்வி மற்றும் பயிற்சியை ஒழுங்குமுறைபடுத்தும் மத்திய ஹோமியோபதி சபையை இந்த சட்டம் நிறுவியுள்ளது.

 1. ஐ.ஐ.ஐ.டி சட்டங்கள் திருத்த மசோதா (IIITs Laws (Amendment) Bill, 2020)

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா, ராய்ச்சூர் ஆகிய இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்த சட்டம் அறிவிக்கிறது.

 1. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சிறப்பு சலுகைகள் திருத்த சட்டம்  (The Salary, Allowances and Pension of Members of Parliament (Amendment) Bill, 2020)

கொரோனா கால நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை ஒரு வருடத்திற்கு 30% வரை குறைத்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 1. தொற்று நோய்கள் திருத்த மசோதா (The Epidemic Diseases Amendment Bill, 2020)

மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பணியின் போது தாக்கப்பட்டால், தாக்கிய நபருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 1. அமைச்சர்களின் சம்பள மற்றும் சிறப்பு சலுகைகள் திருத்த மசோதா (The Salaries and Allowances of Ministers (Amendment) Bill, 2020)

கொரோனா கால நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு அமைச்சர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை ஒரு வருடத்திற்கு 30% வரை குறைத்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 1. வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா (The Banking Regulation (Amendment) Bill, 2020)

மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் (RBI) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சட்டத் திருத்தம்.

 1. The Factoring Regulation (Amendment) Bill, 2020
 1. ஒப்பந்த விவசாய சேவை மற்றும் விலை உத்தரவாதத்தில் விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு மசோதா(The Farmers’ Empowerment and Protection Agreement of Price Assurance and Farm Services Bill, 2020)

ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த நிறுவனத்தின் தேவைக்கேற்ப ஒப்பந்த விவசாயிகளாக மாறுவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

 1. விவசாய விளைபொருள் உற்பத்தியின் வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி(The Farmers’ Produce Trade and Commerce Promotion and Facilitation Bill, 2020)

விவசாய விலைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைத் தாண்டி(மண்டி) வெளியில் விற்பனை செய்ய இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் சந்தைக் கட்டணம் மற்றும் இதர பிடித்தம் வசூலிப்பதற்கு மாநில அரசுகளுக்கு தடை விதிக்கிறது.

 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா(The Essential Commodities (Amendment) Bill, 2020)

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றை நீக்குவதோடு மட்டுமல்லாமல் அப்பொருட்களை எவ்வளவு அளவுக்கு தேக்கி வைக்கலாம் எனும் வரம்பையும் இம்மசோதா நீக்குகிறது.

 1. தகுதிவாய்ந்த நிதி ஒப்பந்த அமைக்கும் மசோதாவின் இருதரப்பு வலையமைப்பு (The Bilateral Netting of Qualified Financial Contracts Bill, 2020)
 1. இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப மசோதா(The Assisted Reproductive Technology (Regulation) Bill, 2020)

கர்ப்பம் தரிக்கும் தொழில்நுட்பங்கள், ஆய்வகம் மற்றும் கருவிகள் மற்றும் நடைமுறைகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் வாரியத்தை தேசிய அளவில் செயல்படுத்த இந்த திட்டம் வழிசெய்கிறது.

 1. சுகாதாரத் தொழில்களுக்கான தேசிய ஆணைய மசோதா(The National Commission for Allied and Healthcare Professions Bill, 2020)

இந்த மசோதா சுகாதார நிபுணர்களின் கல்வி மற்றும் நடைமுறையை ஒழுங்குபடுத்தவும் தரப்படுத்தவும் முயல்கிறது. மேலும் அரசுப் பதிவேட்டில் பதிவு செய்யப்படாத நபர்களை மருத்துவ  செயல்படுகள் செய்ய தடைவிதிக்கிறது.

 1. திவால்  சட்ட விதிமுறைகள்  திருத்த மசோதா(The Insolvency and Bankruptcy Code (Second Amendment) Bill, 2020)

மார்ச் 25 முதல் 6 மாதங்களுக்குள் நிறுவனங்களுக்கு ஏற்படும் திவால் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிக தளர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தளர்வினை 1 வருடம் வரை அரசாங்கம் உத்தரவிட்டு நீட்டிக்கலாம்.

 1. வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்  தளர்வுகள் மற்றும் திருத்தம் மசோதா(The Taxation and Other Laws Relaxation and Amendment of Certain Provisions Bill, 2020)

கொரோனா காரணமாக வரி செலுத்துவதற்கான காலக்கெடு மற்றும் பான் (PAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுகளை நீட்டித்துள்ளது. மேலும் PM CARES நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு வரிச்சலுகை செய்து சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

 1. The Appropriation (No. 3) Bill, 2020

 2016-2017 நிதியாண்டின் அரசின் சேவைகளுக்காக அதிகமாக செலவு செய்யப்பட்டதால் அந்த இழப்பை சரி செய்ய, ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) இருக்கும் தொகைகளைக் கையகப்படுத்துவதற்கு இந்த சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.

 1. The Appropriation (No. 4) Bill, 2020

2020-2021 நிதியாண்டின் சேவைகளுக்காக ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India)  இருக்கும் தொகைகளை மேலும் கையகப்படுத்துவதற்கு இந்த சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது.

 1. சமூகப் பாதுகாப்பு சட்ட விதிகள் (The Code on Social Security, 2020)

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, ஊழியர்களின் மாநில காப்பீடு, Gratuity, மகப்பேறு சலுகைகள் (Employees’ Provident Fund (PF), Employees’ State Insurance (ESI), gratuity, maternity benefits) போன்ற சமூக பாதுகாப்பு குறித்து ஏற்கனவே உள்ள சட்டத்தை ஒருங்கிணைத்து அதில் சில திருத்தங்களைக் கொண்டு வருகிறது.

 1. தொழில்துறை உறவுகள் சட்ட மசோதா (The Industrial Relations Code Bill, 2020)

தொழிற்சங்கங்கள்,தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் தொழிற்சாலையில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க முற்படும் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

23. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மசோதா(The Occupational Safety, Health and Working Conditions Code, 2020)

தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பானது.

24. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (The Foreign Contribution Regulation Amendment Bill, 2020)

தன்னார்வ நிறுவனங்கள் இனி வெளிநாட்டில் இருந்து FCRA மூலம் பணம் பெறுவதற்கு ஆதார் எண்ணை பதிவு செய்தல் வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

25. ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா(Jammu and Kashmir Official Languages Bill, 2020)

ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் அலுவல் மொழியாக உருது மற்றும் ஆங்கிலம் இருந்ததைத் தாண்டி காஷ்மீரி, டோக்ரி மற்றும் இந்தி மொழிகளை கூடுதல் அலுவல் மொழியாக ஆக்கிட இந்த சட்டம் நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *