1. வேதசகாய குமாரின் ‘தமிழ்ச்சிறுகதை வரலாறு’
வேதசகாய குமாரின் இந்நூலின் முதல் பாகம் மட்டுமே வெளியானது. அவருடைய சமாந்தர காலத்தில் அது எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது? என இரு மதிப்பீடுகளையும், அதிலிருந்து கல்கி பற்றிய அவர் கணிப்பீட்டையும் காண்போம்:
அ). ‘வைகை’ சிற்றிதழ் மதிப்புரையில்..
“தமிழ்ச்சிறுகதைகளைப் பொறுத்தவரை கடினமான வேலையை வேதசகாயகுமார் தன்னுடைய ‘தமிழ்ச்சிறுகதை வரலாறு’ புத்தகத்தில் செய்திருக்கிறார். இவரோடு ஒப்பிடும் போது இரா.தண்டாயுதமும் (‘தமிழர் சிறுகதை முன்னோடிகள்’), சி.சு. செல்லப்பாவும் (”தமிழில் சிறுகதை பிறக்கிறது’) விமர்சனப் பார்வையேயற்று வெறும் acodemic தன்மை கொண்டவர்களாகப் பின்தங்கி விடுகின்றனர். செல்லப்பாவின் புத்தகம் சொல்வது அவரது விமர்சன பலவீனத்தையும் கண்டிப்பற்ற தர அளவுகோல்களையும் தான். இரா.தண்டாயுதம் எம்.ஏ. மாணவர்களுக்குப் பரீட்சைக்குப் பயன்படுவார். குமாரின் புத்தகத்தில் தெரிகிற விஷயம் பற்றிய தெளிவு, ஒரு வாசகராக இவரது Perception sense of value இவற்றால் இவரது கணிப்புகள் நம்பிக்கைக்குரியவை. இவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகின்றவை. பல்கலைக்கழக வட்டாரத்திலிருந்து இப்படி ஒரு புத்தகம் வந்திருப்பது சந்தோஷமளிக்கிற விஷயம். ஆனால் குமாரின் முயற்சியைக் கவனித்து அதற்குரிய இடம் தருகிற திராணியோ, மனசாட்சியோ நமது கல்வி வட்டாரங்களில் இல்லை”. – என். சிவராமன் (‘வைகை’ குபரா நினைவுமலர்’)
ஆ). ‘வண்ணமயில்’ – இடைநிலை இதழ் மதிப்புரை
(ஆசிரியர் ‘காராமு’ – அப்போதைய திமுக ஆட்சியில் அமைச்சரான கா.ராசா முகமது)
“நவீனப்படுத்தப்பட்ட இன்றைய பத்திரிகை வியாபாரமான இந்த புண்ணிய கைங்கர்யத்தை அமுலுக்குக் கொண்டுவந்த வியாபாரிகள் வாசனும், கல்கியும். அவர்கள் தொட்டுவிட்ட வடத்தைப் பிடித்துக் கொட்டு மேளத்துடன் பத்திரிகைத்தேர் இழுப்பவர்கள்தான் ‘புனிதர்கள்’ எஸ்ஏபி, மணியன் etc etc. கோஷ்டியினர். மேற்சொன்ன மூலவர்களின் மாரீசத்தனத்தைப் பகிரங்கப்படுத்தியிருப்பதில் சகாயகுமாரின் பேனா கணிசமான வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்த முகாமுக்கு எதிராகத் தீராத வறுமையோடும் சாபக்கேடான வாழ்வோடும் உன்னத வேட்கையோடும் சிருஷ்டி இலக்கியம் படைத்தவர்களையும் இந்நூல் ஆராய்கிறது. புதுமைப்பித்தனின் படைப்புலகம் சிகரங்களைத் தீண்டிப் பார்த்த அவரின் மேதைத்தனம் இவை குறித்த பார்வையின் மூலல் இந்நூலாசிரியர் நம் கவனத்தில் பதிகிறார்.”
“முடிவாக – மலினமான தந்திரங்களின் மூலம் வாசகர்ளின் உணர்வைச் சுரண்டுவது; ரசனையை மொண்ணையாக்குவது; சிந்தனயைக் காயடிப்பது; காயடித்துக் காசுபண்ணுவது இவற்றையே குறிக்கோளாகக் கொண்ட இலலக்கிய வியாபாரிகளை எதிர்த்து வீர்யமிக்க சில கலைஞர்கள் போராடிய வரலாற்றை இந்நூல் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் – இன்றைய புத்தகவியாபார நெரிசலையும் மீறித் தமிழ்வாசகன் கைகளுக்கு இந்நூல் போகுகமானால்.” -‘ நிகிலா (‘வண்ணமயில்’ 1 – 6 -1983)
இ).”கல்கிக்கும்………………………………………நேர்மைக்கும் வெகுதூரம்!
“கல்கி ஒரு பாடகர் அல்ல. அவர் பொருள் தேடத் தேர்ந்தெடுத்த துறை சங்கீதம் அல்ல. தனக்கு லாபம் தராத சங்கீதத்தில் ஐனரஞ்சகம் புகுந்தபோது அதற்கெதிராக அவரால் குரல் கொடுக்க முடிந்தது. நேர்மைக்கும் கல்கிக்கும் வெகுதூரம். எனவேதான் அன்று கௌரவமான இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மணிக்கொடி எழுத்தாளர்களை அவரால் கிண்டல் செய்ய முடிந்தது.”
“கல்கியை ஜனரஞ்சக எழுத்தாளர் என்னும் போது, நல்ல இலக்கியப் படைப்பிற்கு, வாசக எண்ணிக்கை இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழக்கூடும். இங்கு நாம் கல்கியை இனம்காண்பது அவருக்குப் பின்னால் இருந்த வாசகர்களின் கூட்டத்தை வைத்து அல்ல. அக்கூட்டத்தைக் கவர அவர் கையாண்ட மலிவான தந்திரங்களை வைத்துத்தான். புறஉலக வாழ்வில் கூட பாரதியைப் போல் கல்கி நேர்மையான அரசியல்வாதி அல்ல. ராஜகோபாலாச்சாரியாரின் தந்திர அரசியலுக்குப் பிரச்சார வாயாகவே கல்கி செயல்பட்டார். அவரது காந்தி பக்தியும் இந்த அடிப்படையில் எழுந்தது தான்.
கல்கியின் போலித்தனம் அவர் வாழ்ந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் போன்றவர்களால் இனங்காணப்பட்டது. அவரது தழுவல் வேலைகளும் வெளிப்படுத்தப்பட்டன. அன்று கௌரவ இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருமே கல்கியின் இப்போக்கை எதிர்த்தனர். அவரது இப்போக்கை விமர்சித்து “ரஸ மட்ட என்ற பெயரில் கட்டுரைத்தொடரே புதுமைப்பித்தனால் எழுதப்பட்டது. ஆனால் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின் அது நூல்வடிவம் பெறுவதைத் தடுக்கக் கல்கியால் முடிந்தது.”
– எம். வேதசகாயகுமார் (‘தமிழ்ச்சிறுகதை வரலாறு’ – பாகம்:1)
ஈ). நேற்றைய நண்பனே இன்றைய எதிரி
“நேற்றைய நண்பன்தான் இன்றைய எதிரி” என்பார் பயன்பாட்டு மனஅலசல் ஆய்வாளர் ‘மற்றமை’ க.செல்லப்பாண்டியன். இத்தகைய ‘சிச்சுவேசனை’ மனத்தில் இருத்தியே அண்ணாவைப் பிரிந்து ஈ•வெ•கி•சம்பத் தலைமையில் ‘தமிழ்த் தேசியக்கட்சி’ கண்டபின் கண்ணதாசன் எழுதிய பாடலே:
“அண்ணன் காட்டிய வழியம்மா -இது
அன்பால் விளைந்த பழியம்மா
நானவனை நினைத்தே வாழ்ந்திருந்தன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்.”
எனுந்திரைப்பாடல் என்பர்.
பொற்கிழி திரட்டிக் கொடுத்த அண்ணாவையே கேவலமாக வசைபாடி ஒரு தருணத்தில் தம்’குயில்’இதழில் பாரதிதாசன் எழுதியபோது அதற்குக் கண்ணதாசன் எழுதிய ‘குரல்கெட்ட குயிலே கேள்’ என்னும் எதிர்வினை அதிரடிக்கவிதை அருமையானது என்றபோதிலும் இவையாவும் ஒருபக்கமே. மறுபக்க மற்றைமைத் தரப்பையும் ஒத்துறழ்ந்து நோக்காமல் உண்மை காண இயலாது.
புதுமைப்பித்தன் வாழ்க்கையில் கல்கியின் இலக்கியத் திருட்டுக்களை அம்பலப்படுத்தினார் புதுமைப்பித்தன் கையுங் களவுமாய். ஆனால் புபி காலமான பின் அவர் குடும்பத்துக்கு நிதிதிரட்டித்தந்த குழுவிற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருந்தவருங் கல்கியே. மறுபக்கம் அவர் நம்பியிருந்த நண்பரே அவருக்குக் குழிபறித்ததும் நேர்ந்தது. இத்தொடர்பில் இரு கடிதங்கள்:
“நான் அடிக்கடி ராமையாவைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரைப்பற்றி ஓரு சந்தோஷ சமாச்சாரம். ‘ஹனுமானில்’ வருடமலர் பிரசுரிக்கிறார்களாம். அதைப் பிரசுரிக்கும் பொறுப்பை ராமையா எற்றுக்கொண்டிருக்கிறார்.” “தற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும்படியாக வற்புறுத்தினேன். வேலை ஒப்புக் கொண்டுவிட்டார். நம் குடும்பத்தின் முரட்டுப்பிள்ளையாக நான் பாவிக்கும் அவருக்கு வேலை கிடைத்ததில் எனக்கு ஒரு நிம்மதி.” – சொ.விருத்தாசலம் (தேதி:கடிதத்தேதி : 14 -6- 1938)
“ராமையா நமக்கு நண்பர் என்று சொல்லிக் கடைசியில் நமக்குப் போட்டியாகப் போய்விட்டார். கிருஷ்ண துலாபாரம் என்று ஒரு படம் ,குறிப்பிட்டிருந்தேனே, அதை என்னுடைய காமவல்லி படம் தயார் செய்கிறவர்கள் எடுக்க உத்தேசித்திருக்கிறார்கள். அவர்கள் தெலுங்குப்பட முதலாளிகள். அவருடைய தனஅமராவதி என்ற படத்தையும் அங்கேயேதான் பிடிக்கிறார்கள். காமவல்லி வசனத்தை ஒரு தடவை கேட்டுவிட்டுப் பிரமித்துப் போனாராம். என்னுடைய வசனம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்பதை அவர் அறிந்துகொள்ள முடிந்தது. என்னை அங்கே கவி என்று மரியாதையாகச் சொல்லுவதையும் நான் ஸ்டுடீயோவுக்குப் போகாமல் என் அந்தஸ்து வளர்வதையும் கண்டு பொறாமைப்படுகிறார். அது மட்டுடன் நில்லாமல் கிருஷ்ண துலாபாரத்தையும் எனக்குப் புராணக் கதைகள் எழுதத் தெரியாது சரித்திரக் கதைகள்தான் எழுதத் தேரியும் என்று சொல்லிக் காக்காய் பிடித்துத் தனக்கு வாங்கிக்கொண்டார்.”
– சொ.விருத்தாசலம் (கடிதத்தேதி: 31 – 8- 1946) (‘கண்மணி கமலாவுக்கு’)
– இது தான் தம் குடும்ப முரட்டுப் பிள்ளையாக அவர் நம்பிக்கிடந்த ராமையா அவருக்கு இரண்டகம் இழைத்த கதை.
எம் சிலிக்குயில் எரியுண்டபோது எனக்கு நிதிதிரட்டப்பட்டது. நிதியளித்தோர் பட்டியலில் அரசியல் ரீதியாக என்னால் கடுமையாக விமர்சிக்கப்படும் மாலன் நாராயணன், சிவங்கரி, ம.ந.ராமசாமி, மரபின் மைந்தன் முத்தையா ஆகிய என் அரசியல் எதிரியரும் அடக்கமே. பகைநட்பாக் கொண்டொழுகும் பக்கம் இது என்றால் நண்பனைப் பகைக்கக் கற்றுக்கொள் என்ற நீட்ஷே கூற்றும் அதன் மறுபக்கந்தானே? இரண்டுமே உண்மையின் இருபக்கங்கள் தாமே.
2. புதுமைப்பித்தனின் ‘கப்சிப் தர்பார்’ சிலிக்குயில் பதிப்பை முன்வைத்து…
“பொதியவெற்பன் பதிப்பில் காணக் கிடைக்கும் முதல் 9 அத்தியாயங்களை புதுமைப்பித்தனும் இறுதி 9 அத்தியாயங்களை ராமரத்தினமும்எழுதியுள்ளனர் என்ற குறிப்பு முதற்பதிப்பில் இல்லை.” – எம்.வேதசகாயகுமார் (‘காலச்சுவடு’)
“இந்நூலில் முதல் 9 அத்தியாயங்கள் ஸ்ரீவிருத்தாசலம் எழுதியவை ; பின் 9 அத்தியாயங்கள் ஸ்ரீ ராமரத்தினம் எழுதியவை ” என்னுங் குறிப்பு முதற்பதிப்பின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ளது. சகாயகுமார் அட்டையைக் காணவில்லை. உரிய நகலச்சை நான் ‘காலச்சுவட்டு’க்கு அனுப்பினேன்.
‘கப்சிப்தர்பாரை’ தீவிர வாசிப்புக்கு உட்படுத்தி இந்நூலெழுந்த காலச் சூழல் குறித்தும்; புதுமைப்பித்தன் பார்வை குறித்தும் சரியாகவே இனங்காணும் சகாயகுமார் இறுதி அத்தியாயத்தை இனங்காணத் தவறி விட்டார். மொழிநடையுங்கூட வேறு வேறானவை தாமே? பித்தன் நடையில் பவுண்டில் கிடந்த ஜல்லிக்கட்டுக் காளை பிய்த்துக்கொண்டு போன மாதிரியான ஹிட்லரின் கதை ராமரத்தினத்தின் பிரவேசத்தால் அந்திமதிசை நோக்கிச் செல்லும் அடிமாடு மாதிரி அந்தோ பரிதாபம் ஆகிக் கிடக்கின்றது. அனைத்திற்கும் மேலாக ஹிட்லர் பற்றிய பித்தன் பார்வை அவரின் பாசிச ஏகாதிபத்தியச் செருக்கை விமர்சித்து இனங்காட்டுகையில் ராமரத்தினப் பார்வையோ அவரைத் தேசபக்த சர்வாதிகாரியாக நேச பாவத்துடன் அணுகி வியந்து பாராட்டி அவரை நியாயப்படுத்துவதாகவே அமைகின்றது. ஆக இவ்வாறு இருவர் பார்வையும் அடிப்படையிலேயே முரண்படுவதை இனங்காணவுந் தவறிவிட்டார்.
இத்தகு அடிப்படையிலேயே முரணும் இருவேறு எழுத்தையும் ஒருசேர வெளிட்டதேன் என ‘நவயுகப் பிரசுராலய’த்தை நோக்கிக் கேள்வி எழுப்பாமல் சிலிக்குயிலை நோக்கி வினா எழுப்பல் முறையா? சிலிக்குயில் கப்சிப்தர்பாரின் புதுமைப்பித்தன் அத்தியாயங்களை மட்டுமே வெளியிட்டதற்குக் குமார் கூறுமாப்போலே வாசக ஈடுபாடன்று மூலகாரணம்! அதுவரையிலான தேசபக்த சர்வாதிகாரத்தை நேச மனோபாவத்துடன் அணுகும் தன்மை போலாது ஹிட்லரின் பாசிச ஏகாதிபத்திய வெறியை இனங்கண்டு விமர்சிக்கும் பார்வைக் கோணமும் நடைச்சித்திரமும் வாய்ந்தது புபி எழுத்து என்பது பற்றியே. மேலும் இதன் மீள்வாசிப்பில் அன்றைய ஹிட்லரின் தர்பாரை மட்டுமல்லாமல் இன்றைய ஹிட்லர்களின் தர்பார்களையும் இனங்காட்ட வல்லது என்பதாலுமே. இத்தகு புரிதலுடனன்தான் அன்றைய தினமணி ஆசிரயராக இருந்த மாலனையே தினமணி வரலாற்றிலேயே முதன்முறையாகத் தினமணி கதிரில் கவர்ஸ்டோரியாக கப்சிப்தர்பார் நூல்வருமுன்னரே வெள்ளோட்டம் விடவைத்ததுமாம். இந்திய லிக்டர் ராமரத்தினத்தின் ‘பூஹ்ரர் பிரின்ஸிப்’பில் எமக்கு அறவே உடன்பாடில்லை. எனவே அதனை வெளியிடும் தார்மிகப் பொறுப்பேற்க சிலிக்குயில் தயாராக இல்லை. (‘காலச்சுவடு’- டிச. 1995)
3. வெங்கட் சாமிநாதனை முன்வைத்து: வேதசகாயகுமாரும் பிரமிளும்
வெங்கட் சாமிநாதன் 84-இல் எழுதிய ‘நமது கலை இலக்கியங்களின் அடித்தளம்’ கட்டுரை உரிய கலைச்சொற்கள் பெய்யப்பட்டும் சுருக்கப்பட்டும் ‘சொல் புதி’தில் வெளியானது. வெசாவின் ஏனைப்பிற கட்டுரைகளோடு உள்முரண்கள் அதில் உண்டு. வெசா எழுதியதுதானா என ஐயுறும் அளவிற்கு அது அமைந்துள்ளது. அதில் திருத்தங்களும் சுருக்கத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெசாவின் இயக்கம் உருவாக்கிய வினாக்களே தமிழில் நவவிமர்சனம் உருவாக வழிவகுத்ததென்றார் ஜெயமோகன். வெசாவிற்குப் பின்பான 25 ஆண்டுத் தமிழ் விமர்சனத்தின் இயக்கமே அவருடனான விவாதமாக அமைந்தது என்றார் சகாயகுமார்.
வெசாவுடன் தருமு சிவராம் போன்ற ‘இளம் விமர்சகர்’களையும் அவரால் இனங்காண முடிகின்றது. 1970 – வாக்கில் ‘Thought’-இல் வெசா எழுதிய, ‘Alienation in Tamil writing’-இற்கான எதிர்வினையாகவே பிரமிள் 1972-இல் ‘Thought’ – இல் ‘Commercialism in Tamil writing -ங்கை முன்வைத்தார். அக்கட்டுரை முதலாகத்தான் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஊடுருவிய ‘ஜாதியத்தை’ அம்பலப்படுத்தும் அவருடைய எழுத்து தொடர்ந்து சனாதன வைதிகத்தையும், லௌகிகத்தையும் தோலுரிக்கலாயிற்று. இவற்றில் முன்னதான ‘வாள்போல் பகை’க்கு மௌனியும் ‘கேள்போல் பகை’க்கு வெசாவுமே போதுமான அவதார புருஷர்கள்.
‘வெசா படைப்புலகின்’ (?!) மீதான ஒரே எதிர்வினையாக சகாயகுமாரால் ‘ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்’ மீதான நிர்மலா நித்தியானந்தனின் எதிர்வினையை மட்டுமே ஏற்கமுடிந்தது. ஆக அவருக்குங் கூட பிரமிள் தடைவிலக்கு (Taboo) ஆகிவிட்டார் போலும். “எனக்குக் கலையுணர்வு இருக்கிறது. கலையுணர்வு என்பது மனிதநேயமுள்ள இதயத்திலேயே இருக்கும். ஆகவே எனக்குக் கலையுணர்வு இருக்கிறது”இதுவே வெசா கட்டுரையின் சம்பாஷணைப் பிரபஞ்சமாக பிரமிளால் முன்வைக்கப்பட்டது. வெசாவின் இக்கட்டுரைக்கான பிரமிளின் எதிர்வினையான ‘இந்திய வைதிகமும் நாஸிகளும்’ கட்டுரையில் (‘லயம்’). ஆனால் இதுவும் கூட வே.ச.குமாரின் ‘வெசாவின் விமர்சனப் பயண’த்தில் தலைகீழாகவே சித்திரிக்கப்படுகின்றது.
வெசாவுடனான விவாதமாகவே அமைந்த கால்நூற்றண்டுத் தமிழ் விமர்சன இயக்கத்தில் வே.ச.குமாரின் தீட்சண்யம் ஏறெடுத்துப் பார்ப்பது ஒரே ஒரு எதிர்வினையை மட்டுமே. இங்கே நானவர்க்கு இன்னுமொரு எதிர்வினையை மட்டுமேனும் நினைவுறுத்தியாக வேண்டியுள்ளது. ‘கொல்லிப்பாவை”யில் ‘இரண்டு தலைமுறைகளுக்கு இடையில்’ என்ற பிரச்சினைத் தொடரில் வெசா மணிக்கொடிக்காரர்களை இழிவுறுத்தி – கல்கியை அவர்களுடன் ஒப்பிட்டு உயர்த்திப் பிடித்திருந்தார். இதற்கான எதிர்வினையாகவே பிரமிள் ‘மதமரபும் வெகுஜன ரசனையும்’மை எழுதினார் என்றபோதிலும் அதிலவர் மணிக்கொடி இதழ்களைப் பார்த்தவரின் விஷயபூர்வமான பதில் எனவும், உண்மையில் தம்மைவிட வெசாவுக்கு மணிக்கொடிக்காரர்கள் விஷயத்தில் ஆணித்தரமான பதில் சொல்லி இருப்பதாகப் பாராட்டியது என்னவோ வே.ச. குமாரைத்தான்.
“வெசா படைப்புகளினூடாகப் பயணம் செய்யும் இன்றைய இளம் வாசகனுக்கு அவர் படைப்புலகில் அவ்வப்போது அல்லது தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடும் இலக்கிய அரசியல், தனிநபர் மீதான வசைமொழிகள் போன்றவை மிகுந்த களைப்பூட்டக்கூடும். ஆனால் அவை இலக்கியத்திற்கான சூழல், படைப்பிற்கும் படைப்பாளிக்குமான தொடர்பு போன்ற சில தளங்களில்தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளன. இவை விவாதத்திற்குத் தகுதியற்றவை என ஒதுக்கிவிட இயலாது விவாதத்திற்கான பொருளாகவே சாமிநாதன் இவற்றை முன்வைத்துள்ளார்.” – இது வேதசகாயகுமாரின் விமர்சனப் பயணம்.
“தம்முடன் பழகுகிறவர்களுக்கும், இதைவிட தம்மிடம் வந்து கெஞ்சுகிறவர்களுக்கும் இலக்கிய ஆசீர்வாதம் தரும் வெசா இவர்களுடன் ஏற்படும் உறவுகள் மாறுபட்டால் ‘பிடி சாபம்’ என்பார். பிறகு இந்த சூழலை உருவாக்கவே முந்தியதையும் பிந்தியதையும் தாம் செய்ததாகச் சாதிப்பார். இது இலக்கிய விமர்சனம் எதையும் பிரதிபலிக்கும் விஷயமல்ல. தகுதியற்றவர்களின் அதிகாரத்தைக் காட்டுகிற இந்திய பூசாரியத்தையே பிரதிபலிக்கின்றது.” – இது பிரமிளின் ‘விமர்சனாஸ்ரமம்’
“‘யாத்ரா’ : 24 – இல் நானும் வெசாவும் அவசரகால நிலையில் எதுவும் செய்யவில்லை என்பதையே வலியுறுத்தியுள்ளார். நான் உண்மையில் ‘மேல் நோக்கிய பயணம்’ எழுதியதன் மூலம் ஒரு under ground எழுத்தியக்கத்ததுக்கு அடிகோலியவன். ஆனால் வெசா என்ன பண்ணினார்? ஒன்றும் பண்ணாமல் இருந்தால்கூடப் பாதகமில்லை. அதுபற்றி விசாரித்த போது அவர் சொன்னது இது: ‘அரசாங்கம் இப்போதுதான் சரியாக வேலை செய்கிறது. எனக்கு இப்போ Flat க்கு மனுப்போட்டு 10 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த எமர்ஜன்ஸியால் தான் எனக்கு இப்போ Flat கிடைத்தே இருக்கிறது. எமர்ஜன்ஸி ரொம்ப நல்ல விஷயம்.” -இது பிரமிளின் ‘விமர்சன ஊழல்’.
“மற்ற கலாச்சார, ரசியல், இலக்கியப் பெருந்தலைகள் வாய்திறக்கப் பயந்து கொண்டிருக்கும் 80க்கள் 90களில் சோவும் எஸ்.வி.சேகரும் மாத்திரமே துணிந்து கேலி செய்தவர்கள். எஸ்.வி. சேகர் சாக்கியார் கூத்துவில் வரும் சாக்கியமரபில் வருபவர். தன்னைக் கேலிப்பொருளாக்கிக் கொண்டு தன் எதிரில் வீற்றிருக்கும் ராஜ குடும்பத்தையே கேலிசெய்யும் மரபு அது.”- இதுதான் வெசாவின் ‘எண்பது தொண்ணூறுகளில் தமிழ் நாடக இலக்கியம்’மின் ஆரியக்கூத்து {வெசாஎ :2( வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்) தஞ்சை ப்ரகாஷ் வெசாவுக்கென்றே நடத்திய இதழ்}
2004 ‘அமுதசுரபி தீபாவளிமலரில்’ கூட சோவைப்பற்றி 50 பக்கம், நடைபாதைக் கைரேகை ஜோஸ்யர் பலான பலான பிரபலங்களுடன் சோ பெருமனாரின் சுந்தரத் திருவுரு ஜொலிக்கும் ஆல்பமாக எழுதித்தீர்த்துள்ளார் வெசா.
“வெசாவுக்கும் சோவுக்கும் பரஸ்பர முதுகு சொறிதல் உண்டு. இவருக்கு அவர் ஜீனியஸ் அவருக்கு இவர் ஜீனியஸ்.’- பிரமிள் இவையாவுமே வேதசகாயகுமார் காணத் தவறிய பக்கங்களேயாம்!
தொடரும்..!
இரண்டாம் பாகத்தைப் படிக்க: வேதசகாயகுமாருடன்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்
– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)