1. சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ்வழி பயின்ற இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாய்மொழிக் கல்விக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அளிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முன்னுரிமையை அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது.
கடந்த ஜனவரி மாதத்தில் 969 பணியிடங்களுக்கு நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வில் இந்த இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் தமிழ்வழியில் பயின்ற 196 இளைஞர்கள் சார்பு ஆய்வாளர்களாகத் தேர்வுபெற்றிருக்க முடியும். ஆனால் அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தால், தமிழ்வழி பயின்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீடு இல்லாமலேயே நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே தமிழ்வழி பயின்ற விண்ணப்பதாரர்கள் 20 சதவீத இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்றிடும் வகையில், தற்போது நடைபெறும் சார்பு ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வினை மாற்றியமைத்திட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ்வழி பயின்ற இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
2. ஐஐடி கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உரிமைப் பறிப்பு! – வைகோ கண்டனம்
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை உயர்தர கல்வி அமைப்பாக (Centre for Excellence) உருவாக்குவதற்கு ராம் கோபால் ராவ் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியாகி உள்ளது.
தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால், ஐஐடி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறை தேவையில்லை என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பணி இடங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் ராம் கோபால் ராவ் குழு பரிந்துரை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஐஐடி கல்வி நிறுவனங்களை முழுக்க முழுக்க உயர் ஜாதி ஆதிக்க நிறுவனங்களாக மீண்டும் மாற்ற, ஆராய்ச்சி கல்வி மற்றும் உயர்தர கல்வி அமைப்பு என்றெல்லாம் ஏமாற்றி சமூகநீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 93 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தமும், அதனையொட்டி கொண்டுவரப்பட்ட தனிச் சட்டமும் (Act 5 of 2007) செல்லுபடி ஆகும் என்று 10.04.2008 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்புக் கூறியது.
இதன் அடிப்படையில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உரிமை என்பது அரசியலமைப்புச் சட்டப்படி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்குச் சட்டம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கி இருப்பவர்களுக்கு என்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போராடி பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டையே தகர்க்கும் வகையில், பொருளாதார அளவுகோலை திணித்தது பாஜக அரசு.
தகுதி திறமை என்று பேசி மோசடி செய்து வந்த கூட்டம், தற்போது பாஜக அசுர பலத்துடன் ஆட்சி பீடத்தில் வீற்றிருப்பதால் சமூகநீதியைச் சாய்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இதனைக் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியலின, பழங்குடி மக்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
3. குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்திருப்பதற்கு வேல்முருகன் கண்டனம்
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டம், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
4. மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்கள் அனைத்தையும் ஓராண்டு தவணையாக மாற்றி அறிவிக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன்
தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்களுக்கான தவணை காலத்தை ஓராண்டாக நீட்டித்து வழங்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட்ட இக்கடன்களுக்கான தவணைக்காலம் டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால் அதற்கான வட்டியைக் கட்டி மறுஅடகு வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது கூடுதல் சுமையாகி இருக்கிறது. எனவே, 6 மாத தவணையில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக்கடன்கள் அனைத்தையும் ஓராண்டு தவணையாக மாற்றி அறிவிக்க வேண்டும்.
5. தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடு தான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர் தான் இந்தியாவில் கொரோனவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது.
வெறுப்பு பரப்புரையுடன் நிற்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்திருந்த 950க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் பெரும்பாலான வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் தமது தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக நீதிமன்றத்தில் தாம் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டதால் சிறையிலிருந்த காலம் தண்டனை காலமாகக் கருதப்பட்டு அதற்கு மேல் அபராதமும் செலுத்தி தம் வழக்கை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினர். இவர்களில் 44 வெளிநாட்டினர் மட்டும் தம் மீது சுமத்தப்பட்ட வழக்கை எதிர்த்து வழக்காடினர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார். இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர் மீது பூர்வாங்க ஆதாரம் இல்லை என்றும் எஞ்சிய 36 நபர்கள் மீது கொரோனாவை பரப்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரிய வருவதாக குறிப்பிட்டு குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள தப்லீக் தலைமையகம் தான் கொரோனாவை பரப்பிய மையம் என்று வர்ணிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் கூட குறிப்பிட்ட அந்த காலத்தில் அங்கு இருக்கவில்லை என்றும். இவர்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் மோடி அரசிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதே போல் மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு கொரோனா பரவல் வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்ட போது அரசியல் காரணங்களுக்காக கொரோனா பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத்தினர் பலிகிடவாக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டது.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது வெறுப்புணர்வின் காரணமாக வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது கொரோனாவை பரப்பினார்கள் என்று அவதூறு பரப்பி அவர்களை ஆறு மாதங்களுக்கு மேலாக தமது தாய்நாட்டிற்குத் திரும்ப விடாமல் சிறையில் அடைத்து பன்னாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைத்தமைக்காக பிரதமர் மோடி தப்லீக் ஜமாஅத்தினரிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களை இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்குப் பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மோடி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து தமிழகத்திற்கு விருந்தினராக வந்த 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினரை கைது செய்து சிறையில் அடைத்து பெரும் துன்பத்தை அளித்த தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
6. மழை நீரை சேகரிப்போம்! நிலத்தடி நீரைப் பெருக்குவோம்! – ராமதாஸ்
வாராது வந்த மாமணியாய் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் மழை நீர் பூமிக்குள் செல்ல வழியில்லை. அதனால் பல இடங்களில் மரங்களுக்குக் கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகின்றன.
நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் ஆயிரக்கணக்கான ஏரிகளையும், குளங்களையும் தூர் வாரினோம். அதன் தொடர்ச்சியாக மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு வழிகாட்டினோம்!
அதன்படி தான் அப்போதைய முதலமைச்சர் மழைநீர் சேமித்துத் திட்டத்தை அறிவித்தார். சில ஆண்டுகள் முறையாக செயல்படுத்தப்பட்ட அந்தத் திட்டம் அண்மைக்காலமாக சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது!
நம் வீட்டுக்கு தண்ணீர் தேவை. அதற்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வான்மழை நீரை பொதுமக்கள் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்; அதை கண்காணிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆகவே மழை நீரை சேமிப்போம்; நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவோம்!
7. பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்ததே, நிறைவேற்றியதா? – கே.பாலபாரதி
பாஜக விவசாய விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை உயர்வு கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்ததே, நிறைவேற்றியதா?
இல்லையே. இச்சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகபட்ச விலை கொடுப்பார்கள். அதனால், விவசாயிகளுக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
நம் விவசாயம் அழிந்துபோகும். இன்னொரு பக்கம், உணவுப் பொருள்களின் விலை கடுமையாகக் கூடும். அதனால்தான் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்
8. நீலகிரி மாவட்டத்தில் வாழ்கிற படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்கவேண்டும் – கே.எஸ்.அழகிரி
நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தனி சமுதாயமாகப் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட படுகர் இன மக்கள், 1951 ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள் (Schedule Tribe).
ஆனால், காலப்போக்கில் படுகர் இன மக்கள் பழங்குடியின பட்டியலில் இருந்து எந்த காரணமும் கூறப்படாமல் நீக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து படுகர் இன மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களது கோரிக்கை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் படுகர் இன மக்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கவேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் இருந்தது.
இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீலகிரியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையைப் பெற்று முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆணையிட்டது. இந்த ஆணையை கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்ட பழங்குடியின ஆராய்ச்சி மையம், கடந்த 22.10.2020 அன்று படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தன்னிச்சையாக தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இது படுகர் இன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவர்களது வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளார்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையம் படுகர் இன மக்களிடம் எவ்வித ஆய்வும் செய்யாமல் இந்த முடிவு எடுத்திருப்பது, அந்த இன மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் வாழ்கிற தனித்தன்மை மிக்க படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
9. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – அன்சாரி MLA
பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது,
வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டு அது ரூ.660 ஆக அதிகரித்தது.
தற்போது மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.710-க்கு விற்கப்படுகிறது.
இது நடுத்த ஏழை மக்களின் அன்றாட வாழ்வின் மீது தொடுக்கும் தாக்குதல் ஆகும்.
ஏற்கனவே மானிய சிலிண்டர் பெறும் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகையை செலுத்தவில்லை என்று பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் விலையை உயர்த்தியது வேதனைக்குரியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் அதற்கேற்ப விலைக்குறைப்பு நடவடிக்கை எடுக்காமல், தற்போது பதினைந்து நாட்களில் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது எளிய மக்களை முடக்கும் செயலாகும்.
மத்திய அரசின் இந்த விலை உயர்வை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
மேலும் இந்த விலை உயர்வை திரும்பப்பெற்று பழைய விலையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.