அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், சிறந்த பெண்ணுரிமைப் போராளியாகவும் அறியப்பட்ட ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg) கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (18/09/2020) உடல்நலக்குறைவால் இறந்தார்.
அமெரிக்காவில் ரூத் பேடர் கின்ஸ்பர்க் உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர்ந்த இரண்டாவது பெண்மணி. மேலும் உச்சநீதிமன்றத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார். அமெரிக்க நாட்டைப் பொறுத்தவரையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்போர் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அல்லது அவர்கள் தங்களுடைய ஓய்வை விரும்பும் காலம் வரை பணிபுரியலாம்.
அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களையும், மாகாணங்கள் மற்றும் மைய அரசுக்கும் இடையிலான மோதல்களையும் மற்றும் மரணதண்டனை முறையீடுகளின் இறுதி உத்தரவையும் வழங்கக்கூடிய அமைப்பாகும். இதில் குறிப்பிடத்தக்கதாக அமெரிக்காவில் தன்பாலர் திருமணங்களை அங்கீகரித்தது, குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரக்கூடியவர்களை தடை செய்யும் சட்டத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்-ன் உத்தரவைத் தடுத்து நிறுத்தியது போன்ற அதிக சர்ச்சைக்குள்ளான விடயங்களில் நீதி வழங்கியுள்ளதை சொல்லலாம். இந்த உத்தரவுகள் அனைத்தும் முற்போக்கான, சாமானியரின்பால் நின்று வழங்கிய நீதியாகவே அங்குள்ளவர்களால் பார்க்கப்பட்டது. ரூத் பேடர் கின்ஸ்பர்கின் மறைவால் இனிமேல் இத்தகைய முற்போக்கான தீர்ப்புக்கள் வருவது தடைபடுமோ என்று அங்குள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர்.
ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg)
1933-ம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் புரூக்ளினில் குடியேறிய யூத குடும்பத்தில் பிறந்தார். கின்ஸ்பர்க் ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் படித்தபோது அவர் பயின்ற வகுப்பில் 500 ஆண்கள் பயின்றனர். அங்கு இவருடன் சேர்ந்து மொத்தமே ஒன்பது பெண்கள் மட்டுமே சட்டம் பயின்றனர். கின்ஸ்பர்க் தனது வகுப்பில் முதலிடம் பிடித்த போதிலும், பட்டப்படிப்பு முடிந்தபின் ஒரு வேலை வாய்ப்பையும் பெறவில்லை. தளராத முயற்சிக்குப்பின் 1960-களில் சட்டத் தொழிலில் பல்வேறு வேலைகளில் பணியாற்றினார்.
1972-ம் ஆண்டில், கின்ஸ்பர்க் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியனில் (ACLU) பெண்கள் உரிமைகள் பற்றிய இயக்கத்தை முதலாக நிறுவினார். அதே ஆண்டு, கின்ஸ்பர்க் கொலம்பியா சட்டப் பள்ளியின் முதல் பெண் பேராசிரியராகப் பணியேற்றார்.
1980-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கூட்டாட்சி நீதிமன்றங்களை பல்வகைப்படுத்த முயன்றபோது கின்ஸ்பர்க் கொலம்பியா மாவட்டத்திற்கான ‘மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு’ பரிந்துரைக்கப்பட்டார். அங்கு கின்ஸ்பர்க் பெரும்பாலும் கூட்டாட்சி தத்துவத்தின் தீவிர செயல்பாட்டாளராக பார்க்கப்பட்டாலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது செயல்கள் மிக நிதானமாகவும், உறுதியாகவும் அமைந்தன.
1993-ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டனால் அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு பெண் நீதிபதிகளில் இவர் இரண்டாவதாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு அமைந்த அனுபவங்கள், வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் சிறந்த நீதிபதியாகவும் சட்டத்துறையில் இணையற்றவராகவும் புகழ்பெற்றார். குறிப்பிடத்தக்கவகையில் இவர் அங்கிருக்கும் அரசியலின் இருதுருவ அரசியல்வாதிகளாலும் மதிக்கப் பெறுபவராக மாறியது இவரது சட்டவாழ்வின் தூய்மையைப் பறைசாற்றியது.
கருக்கலைப்பு உரிமைகள் முதல் ஒரே பாலின திருமணங்கள் வரை உச்சநீதிமன்றத்தில் சமூகப் பிரச்சினைகள் குறித்த முற்போக்கான நீதிக்கான ஒரு அடையாளமாகப் பார்க்கப்பட்டார்.
கின்ஸ்பர்க் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே சமூக முன்னேற்றத்திற்கான ஏதாவதொரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. உதாரணமாக வர்ஜீனியாவில் இருக்கக்கூடிய ராணுவப் பயிற்சி மையத்தில் ஆண்களை மட்டுமே சேர்ப்பதாகவும், பெண்களையும் சேர்க்கக்கோரி வழங்கிய தீர்ப்பில்,
“ஒரு நாடு தன்னுடைய ஆண் புதல்வர்களுக்கு மட்டுமே அனைத்து வாய்ப்புகளையும் வழங்கக்கூடாது. அது தன்னுடைய மகள்களை நாதியற்றவர்களாக மாற்றிவிடும்” என்றும் மேலும் ” எந்த ஒரு சட்டமும் விதியும் குடிமக்களின் அனைத்துவிதமான பலன்களையும் பெண்களுக்கும் சரிசமமாக வழங்கவேண்டும். அப்போதுதான் பெண்களின் தனிப்பட்ட திறமைகள் வெளிப்பட்டு இந்த சமூகத்தின் உண்மையான மாற்றத்திற்கு உதவும்” என்று எழுதினார்.
ரூத் பேடர் கின்ஸ்பர்க் போன்ற சட்டத்துறையில் புகழ்பெற்ற பெண்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் இன்னும் இருளில் வாழும் பெண்களுக்கான படிக்கட்டாக மாற்றியிருக்கின்றனர். சமூகத்தைப் பற்றியும் சக பெண்களைப் பற்றியும் அக்கறைகொண்டு அவர்களின்பால் அவர்களுக்கான ஏதாவதொரு முன்னேற்ற பாதையை அமைத்த சில பெண்களை பற்றி பார்ப்போம்.
கிசெல் ஹலிமி (துனிசியா / பிரான்ஸ்) Gisèle Halimi (Tunisia/France)
கின்ஸ்பர்க் மறைவின் இரு மாதங்களுக்கு முன்னர்தான் பிரான்சின் பெண்ணிய இயக்கங்களால் போற்றப்பட்ட அவர்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த இணையில்லாத வழக்கறிஞர் கிசெல் ஹலிமி இயற்கை எய்தினார். துனிசியா (Tunisia) நாட்டில் பிறந்த கிசெல் ஹலிமி பிரான்சில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் மேலும் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்டவராவார். பாலின சமத்துவத்திற்காகவும், ஒரு ஆணின் பார்வையில் மட்டுமே பெண்களை பார்க்கக்கூடியதாக இருந்த சட்டத்துறையை பெண்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் மாற்றியதில் கிசெல் ஹலிமியின் பங்கு அளப்பரியது என்று பிரான்சின் புகழ்பெற்ற பத்திரிகை ‘லீ மாண்ட்’ (Le Monde) இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது.
1972-ம் ஆண்டில், ’பாபிக்னி வழக்கு’ என்று இப்போது அறியப்படும் வழக்கில் ஒரு 17 வயது மாணவியின் மேல் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த பெண் கருவுற்றபோது கருவைக் கலைத்ததற்காக பெண்ணின் தாயார் மற்றும் அவரின் சக பணியாளர்கள் இருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நீதிமன்றத்தில் கிசெல் ஹலிமி பலமான வாதங்களுடன் முன்வைத்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட அவரின் தாயார் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு ஏற்படுத்திய அதிர்வுகள் தான் 1975-ம் ஆண்டில் பெண்ணின் விருப்பமற்ற கருக்கலைப்பிற்கான உரிமை சட்டப்பூர்வமானதில் மிகப்பெரும் பங்கு வகித்தது.
1978-ம் ஆண்டில் கூட்டு பாலியல் வல்லுறவிற்கு ஆளான இரு பெண்களுக்காக வாதாடினார். அங்கிருக்கும் ஊடகங்களால் மிகுந்த கவனிப்பிற்குள்ளான இந்த வழக்கில் மிகுந்த துணிச்சலுடன் வலிமையான வாதங்களை முன்வைத்தார். இந்த வாதங்கள்தான் பாலியல் வல்லுறவு என்பதற்கான சட்டபூர்வ விளக்கமாக நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு பாலியல் வல்லுறவு என்பது ‘குற்றமாக’ 1980-ம் ஆண்டில் மாற்றப்பட்டது.
தெங்கு மைமுன் துவான் மாட் – மலேசியா Tengku Maimun Tuan Mat (Malaysia)
மே 2019-ல், தெங்கு மைமுன் துவான் மாட் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது நாடு மற்றொரு வரலாற்றை படைத்ததாக ’மலாய் மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.
61 வயதான தெங்கு மைமுன் துவான் மாட் நீண்ட சட்டத்துறை அனுபவத்தைக் கொண்டவர். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் நீதிபதியாகவும் பதவி வகித்தவர். துணிச்சலான, அறம் சார்ந்த நீதிபதியாக அங்குள்ள பெண்ணுரிமை அமைப்புகள் இவரைப் பார்க்கின்றன. குடும்ப வன்முறை மற்றும் பல்வேறு பாலியல் சீண்டல்கள், வல்லுறவு போன்ற குற்றங்களில் இனி பெண்களுக்கு நம்பிகையளிக்கக்கூடிய தீர்ப்புகள் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றனர். இவரின் நியமனம் பெண்களுக்கு இன்னும் மறுக்கப்படும் நீதியை அவர்களுக்கு வழங்கக்கூடும்.
இவரின் நியமனம் 2019-ம் ஆண்டில் மலேசியாவின் குறிப்பிடத்தக்க சாதனையென்றும், இவரின் நியமனம் இன்னும் பல பெண் வழக்கறிஞர்களை உயர் பதவிக்கு நியமனம் செய்வதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது என மலேசியாவின் பத்திரிகை மலேசியா டுடே தெரிவித்துள்ளது.
லேடி பிரெண்டா ஹேல் Lady Brenda Hale (UK)
1984-ம் ஆண்டு லேடி பிரெண்டா ஹேல் சட்ட ஆணையத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அப்போது அவர் மேற்கொண்ட சீர்திருத்தத்தின் விளைவாக குழந்தைகளுக்குரிய சிறப்பு சட்டம் ஒன்றை 1989-ம் ஆண்டு கொண்டுவந்தார். இதன் மூலம் அரசின் எந்தவொரு புதிய சட்டங்களும், திட்டங்களும் குழந்தைகளுக்குரிய அம்சங்களையும் தனது உள்ளடக்கமாகக் கொள்ள வேண்டிய சட்டமாக அமலானது. 2004-ம் ஆண்டு லேடி பிரெண்டா ஹேல் இங்கிலாந்து, ஸ்கட்லாண்டு உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
2011-ம் ஆண்டில் நீதிபதி ஹவுண்ஸ்லா மற்றும் லேடி பிரெண்டா ஹேல் இருவரும் பெண்களுக்கு இழைக்கப்படும் ‘குடும்ப வன்முறை’ சட்டத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் உடல் சார்ந்த தாக்குதல்கள் மட்டுமல்லாமல், ‘உளவியல் ரீதியாகவும்’, ‘வார்த்தைகள் மூலமாகவும்’ பெண்ணை சீண்டுதல் என்பதும் குற்றமாகக் கருதப்படும் என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டது.
சுதா பரத்வாஜ் (இந்தியா) Sudha Bharadwaj (India)
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அவர்களின் சமூக நிலைமை ஆகியவற்றை நேரில் கண்டு வருந்திய ஒரு கணித மாணவிக்கு சட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர்தான் சுதா பரத்வாஜ்.
வழக்கறிஞராக மாறுவதற்கு முன்பு, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) சத்தீஸ்கர் மாநில கிளையின் பொதுச் செயலாளராக செயலாற்றினார். மேலும் அவர் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா தொழிலாளர் கட்சியின் உறுப்பினராகவும் இருந்ததால் பல்வேறு துறைகளில் அதிகாரிகளின் ஊழல்களை வெளிப்படுத்தி அதற்கெதிராக போராடி தொழிலாளர்களின் நியாமான ஊதியத்தைப் பெற்றுத்தந்தார்.
2005-ம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக காடுகளை அழித்து ஆதிவாசிகளையும், பூர்வகுடிகளையும் ஒடுக்குவதைக் கண்டு அந்த ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுவதை முக்கிய இலக்காகக் கொண்டார்.
2018-ம் ஆண்டு சுதா பரத்வாஜ் மற்றும் அவருடன் சேர்ந்து நான்கு மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். மக்களுக்காக போராடும் இவரின் குரலை ஒடுக்குவதற்காகவே கைது செய்திருப்பதாக அனைத்து மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனக்குரல் எழுப்பினார்கள். கீழமை நீதி மன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை இவருக்கு பிணை கேட்டு போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் இவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
ஜோஸ்னியா வாபிக்சனா (பிரேசில்) Joênia Wapixana (Brazil)
பிரேசிலின் பூர்வக்குடியிலிருந்து வழக்கறிஞராக பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஜோஸ்னியா வாபிக்சனா.
மேலும் பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய முதல் பூர்வகுடிப் பெண், பிரேசிலின் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கபட்ட முதல் பூர்வகுடி என்ற கூடுதல் பெருமைகளையும் பெற்றவர்.
ரபோசா செர்ரா டூ சோல் (Raposa Serra do Sol) என்ற பிரேசிலின் பூர்வகுடிகள் வாழும் மாநிலத்தில் பெரும் வணிக நிறுவனங்கள் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைக் கைப்பற்றின. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூர்வகுடிகள் சார்பாக வாதத்தை துணிவாக எடுத்துவைத்து வழக்கில் வென்றார். இந்த தீர்ப்பின் மூலம் பூர்வகுடிகள் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறுவிதமான தாக்குதல்கள், வன்முறைகள் முடிவிற்கு வந்தன.
பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் போராடி வெல்லும் போராளியான இவருக்கு 2018-ம் ஆண்டு மனித உரிமைகளுக்கான சிறந்த களப்பணியாளர் விருதை ஐ.நா சபை வழங்கி பெருமைப்படுத்தியது.
2019-ம் ஆண்டு ஜனவரியில் ப்ரூமடின்ஹோ அணை (Brumadinho) உடைந்து பெருமளவிலான உயிரிழப்புகளும், சூழலியல் சீர்கேடுகளும் ஏற்பட்டது. இந்த பேரழிவைத் தொடர்ந்து இவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இவரின் முதல் மசோதா சுற்றுப்புற சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களை “கொடூரமான குற்றங்கள்’ என்ற வகைப்பாட்டில் கொண்டுவந்தது. இதன் மூலம் சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
அர்வா அல்-ஹுஜெய்லி (சவுதி அரேபியா) Arwa Al-Hujaili (Saudia Arabia)
உலகத்தின் பெண்களுக்கான சம உரிமைகளை நோக்கிய பயணத்தில் நீண்டதூரம் செல்ல வேண்டிய நாடுகள் பலவுண்டு. ஆனாலும் அங்கும் தங்களின் திறமையால் முத்திரை பதிக்கக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சவுதி அரேபியாவை சேர்ந்த அர்வா அல்-ஹுஜெய்லி.
2013-ம் ஆண்டில் சவூதி அரேபியாவின் முதல் பெண் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்தார்.
2010-ம் ஆண்டில் அல்-ஹுஜெய்லி, ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்ஸீஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றபோது அவருக்கு 22 வயது. அங்குள்ள விதிகளின்படி அவர் வழக்கறிஞராக பயிற்சி எடுக்க பெண்ணாக இருந்ததால் மேலும் 3 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த 3 வருட காத்திருப்பு என்பது இவருடன் சேர்ந்து பயின்ற ஆண்களுக்கு தேவைப்படாது. ஆனாலும் இந்த மூன்று வருடங்களும் ‘சட்ட ஆலோசகராக ‘ பணியாற்றினார். இந்த பணிக் காலத்தில் இவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
அல்-ஹுஜெய்லி சோர்ந்து விடாமல் தொடர்ந்து சட்ட அமைச்சகத்திற்கு மனுக்கள் அனுப்பிக்கொண்டேயிருந்தார். இதன் விளைவாக ஏப்ரல் 8, 2013 அன்று சட்ட அமைச்சகம் இவருக்கு சட்டப் பயிற்சி மேற்கொள்ள அனுமதியளித்தது. மூன்று வருட நீதிமன்ற பயிற்சிக்குப் பிறகு அதிகாரபூர்வமான வழக்கறிஞராக அங்கீகாரம் பெற்றார்.