ராஜரத்தினம் பிள்ளை

தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

நாதசுர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருவாவடுதுறையில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்ரமணியம். நாதசுவர வித்துவான் திருமருகல் நடேசபிள்ளையின் வளர்ப்பு மகன் அவர். நடேசபிள்ளைதான் இவரின் பெயரை ராஜரத்தினம் என்று மாற்றி வைத்தார்  திருமருகல் நடேசன் ராஜரத்தினம் எனபதை சுருக்கி டி.என்.ராஜரத்தினம் என்று அழைக்கப்படுகிறார்.

இளம்வயது

இவரது ஒன்பதாவது வயதில் பாடகராக நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது தொண்டை புண்ணானதால், ஆதினம் இவரை நாதசுரம் கற்கச் சொன்னார்.

முதலில் மடத்து நாதசுரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடமும், கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார்.  

தனி பாணியில் வாசித்த பூபாள ராகம்

தொடக்கத்தில் திருவாடுதுறை மடத்தின் காலை பூஜையில் வாசிக்க ஆதினம்  இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகை தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.

கர்நாடக இசை கொடிகட்டி பறந்த ஒரு காலக்கட்டத்தில், தமிழிசைகளுக்கு இடம் இல்லாவிட்டால் அந்த மேடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னவர்.

பொன்னாடை போர்த்தியபடி நாதசுரம் வாசித்த முதல் கலைஞர்

பின்னர் திருவாடுதுறை ஆதீன வித்வானாக நியமிக்கப்பட்டார். இவரது முதல் நாகஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான்.

காரைக்குடியில் நாதசுரம் வாசிக்க செல்கையில், தோளில் துண்டை போட்டுக்கொண்டு நாதசுரம் வாசிக்கையில் தங்களுக்கு மரியாதை குறைவு என்று எண்ணி, துண்டை எடுக்கச்சொன்னார்கள். எடுக்க மாட்டேன் என்று மறுத்தவர் ராஜரத்தினம் பிள்ளை. அவர் எடுக்காதது மட்டுமல்ல, எந்த நாதசுரக் கலைஞரையும் தவில் வித்வான்களையும் தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டக்கூடாது என்றும், அது சுயமரியாதைக்கு இழிவு என்றும், அதை தோளில் இருந்து இறக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், எவனோ சொல்கிறான் என்பதற்காக எடுக்கக்கூடாது என்று முதலில் சொன்னவர் ராஜரத்தினம் பிள்ளை.

நாதசுரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.

தந்தை பெரியார் மீதும் அவரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீதும் பெரும் மரியாதை கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா முன்னின்று நடத்திய திராவிட இசை விழாவிலும் இவரது நாதசுரம் பாடியது.

இந்தியா விடுதலை பெற்ற போது டெல்லியில் ஒலித்த நாதசுரம்

1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றபோது, டெல்லியில் நேரு முன்னிலையில் இவர் நாதசுரம் வாசித்தார். அதேநேரம் வானொலியிலும் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

நாதசுரக் கருவி உருவாக்கத்தில் ராஜரத்தினம் பிள்ளை நிகழ்த்திய மாற்றங்கள்

நாதசுரம் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை 18.25 அங்குல நீளம் உடையதாகவும் நாலரைக் கட்டைச் சுருதியுடனும் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை. இதில் ஏழு விரல் துவாரங்களும் ஒரு பிரம்ம சுரமும் தவிர கூடுதலாக இரண்டு இணை ஜீவசுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909-ம் ஆண்டு மன்னார்குடி சின்னப்ப பக்கிரி நாகசுரக்காரர் 21.50 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார்.

1920-ம் ஆண்டு திருப்பாம்பரம் சாமிநாத பிள்ளை 23.75 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932-ம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாதசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாலரை, நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு ‘திமிரி நாதசுரம்’ என்று பெயர்.

1932-ம் ஆண்டு திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை 31.25 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பல மேற்கொண்டு 1914-ம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாதசுரத்தை உருவாக்கினார். அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக் கொண்டு 1946-ம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு ‘பாரி நாகசுரங்கள்’ என்று பெயர்.

இவ்வாறு வரலாற்று நோக்கில் நாகசுரம் பற்றிய சில வளர்ச்சிப் படிநிலைகளை மரபிசைச் சுரங்கம் என்ற கட்டுரையில் இசை ஆய்வாளர் பேரா.பக்கிரிசாமி பாரதி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ராஜரத்தினம் பிள்ளை நாதசுரக் கருவி உருவாக்கத்தில் எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது. 

கலை மீது பெருமரியாதை கொண்டவர்

நாதசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார். தன் கலை மீது அவ்வளவு மரியாதை கொண்டவர்.

டி.என்.ஆர். 1956-ம் ஆண்டில்  டிசம்பர் 12-ம் நாள் மாரடைப்பால் காலமானார்.

நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பற்றிய ஆவணப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *