பாரதிய ஜனதா கட்சியின் டெல்லியைச் சேர்ந்த IT செல் பொறுப்பாளர் சுக்பிரீத் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். மேற்கு டெல்லியின் திலக் நகர் மண்டல ஐ.டி செல் தலைவராக அவர் இருந்து வந்தார். தற்போது கட்சியில் இருந்தும் விலகியிருக்கிறார். பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 7-ம் தேதி வெளியிட்ட கடிதத்தில் சுக்ப்ரீத் சிங், ”பாஜக ஐடி செல் பொய்யான செய்திகளையும், தவறான தகவல்களையும் பகிர்ந்து இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. எனவே நான் திலக் நகர் மண்டல பிரிவின் ஐடி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுக்ப்ரீத் சிங் 2019-ல் பாஜகவில் சேர்ந்தார் மற்றும் இவர் ஐ.டி தலைவராகப் பணியாற்றுவதற்கு முன்பு 2020 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் திலக் நகர் இணை கன்வீனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்பிரீத் சிங்கிடம் ட்விட்டரில் அவரது முடிவைப் பற்றி மக்கள் எழுப்பிய கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்ததார். ”தவறுகளை சுட்டிக்காட்டியதற்காக என்னை தேச விரோதி என்று அழைத்தவர்களின் கீழ் பணியாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் ”விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததால் மிக மோசமான சொற்களையும், கருத்துகளையும் நான் தாங்க வேண்டியிருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் வெளியேறுவதற்கு சில நாட்கள் முன்பு பாஜக ஐ.டி செல் தலைவரான அமித் மாளவியா விவசாயிகள் போராட்டத்தின் வீடியோ என்று சொல்லி, சில வெட்டி, ஒட்டப்பட்ட வீடியோக்களை பகிர்ந்திருந்தார். அதனை ட்விட்டர் “திரிக்கப்பட்ட காணொளி” (Manipulated Video) என்று ட்விட்ட அதனை Flag செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், போராட்டங்களை வழிநடத்துகிற தலைவர்களையும், விவசாயிகளையும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் வழிநடத்துவதாகவும் பரப்பி வருகிறார்கள்.