தொ.மு.சி ரகுநாதன் எனும் நவீன தமிழ் இலக்கிய முன்னோடி

தொ.மு.சி ரகுநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

சிறந்த ஓவியரும் புகைப்படக் கலைஞருமான தொண்டைமான் முத்தையாவிற்கும் முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று பிறந்தவர் ரகுநாதன். 

சாகித்ய அகாதமி விருது பெற்ற பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941-ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942-ல் சிறைக்குச் சென்றார். 1944-ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும், பின்பு 1946-ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945-ல் வெளியானது. இவரது படைப்புகளில் கதைகள் தொகுக்கப்பட்டு 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்த தொகுப்பில் இருந்த `நீயும் நானும்’ என்ற கதை வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கி பரபரப்பாக பேசியது.

அதைத் தொடர்ந்து 1951-ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 

முக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்

1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.

சோவியத் நாடு பதிப்பகம்

1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மக்சிம் கார்க்கியின் ’தாய்’ மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா – விளாடிமிர் இலிச் லெனின் ஆகியவை. 

அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி – காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985-ல் இளங்கோவடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988-ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 

எதார்த்தவாத இலக்கியப் போக்கு மற்றும் ஒப்பிலக்கியத்தின் தடம்

சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு எனும் ஆழமான தளத்துக்கு கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார். 

“பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். 

“இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புது சாதி உருவாக்கங்களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.

சாந்தி முற்போக்கு கலை, இலக்கிய மாத இதழ்

1954-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘சாந்தி’ கலை, இலக்கிய மாத இதழை அவர் தொடங்கினார். ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்’ என்ற பாரதியின் வரிகள் ‘சாந்தி’ இதழின் மணிவாக்காக இடம்பெற்றிருந்தன.

முதல் இதழில் திருச்சிற்றம்பலக் கவிராயர் என்னும் புனைப்பெயரில் ரகுநாதன் எழுதிய கவிதையும், கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதையும், சுந்தர ராமசாமி, அகிலன், சி.வி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரது கதைகளும் இடம் பெற்றிருந்தன. 

இரண்டாம் இதழின் அட்டைப் படமாக வண்ண ஓவியம் இருந்தது. இதழின் உள்ளடக்கமாக, டிசம்பர் 5,1954-ல் கல்கி மறைந்ததையொட்டி அவர் குறித்தும், சென்னையிலே கூடவிருந்த உலக சமாதான மாநாட்டை வரவேற்றும், சென்னை அரசாங்கம் நாடகத்துக்கு விதித்திருந்த தடைச் சட்டத்தைக் கண்டித்தும் தலையங்கம் இடம்பெற்றிருந்தது.

‘சாந்தி’ 1955 ஜூலை இதழ் புதுமைப்பித்தன் மலராக உருவாக்கம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தன் குறித்து ரகுநாதன் எழுதிய நீண்ட தலையங்கமும், ‘வெட்டரிவாள் பாட்டுண்டு’ கட்டுரையும், வையாபுரிப் பிள்ளை எழுதிய ‘புதுமைப்பித்தன்’ கட்டுரையும், ‘புதுமைப்பித்தனும் இளம் எழுத்தாளரும்’ என்ற கு.அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகளும், எஸ்.சிதம்பரத்தின் ‘கடைசி நாட்களில்’ கட்டுரையும், ‘பித்தன்’ என்ற தமிழ் ஒளியின் கவிதையும், புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ நாவலின் முதல் அத்தியாயமும், திருச்சிற்றம்பலக் கவிராயரின் ‘உன்னைத்தான் கேட்கிறேன்’ கவிதையும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.

ஆகஸ்ட் 1955 இதழிலிருந்து ‘நெஞ்சிலே இட்ட நெருப்பு’ என்ற தன்னுடைய தொடர்கதையை எழுத ஆரம்பித்திருந்தார் ரகுநாதன். 1955 செப்டம்பர் இதழ் பாரதி மலராக வெளிவந்தது. இவ்விதழில், சாமி சிதம்பரனார், ப.சீனிவாசன் ஆகியோரின் பாரதி குறித்த கட்டுரைகளும், ‘சூரியன் பேசுகிறதா?’ என்கிற நா.வானமாமலையின் விஞ்ஞானக் கட்டுரையும் இடம்பெற்றிருந்தன.

டிசம்பர் 1955 இதழ் ‘சாந்தி’யின் ஆண்டு மலராக வெளிவந்தது. சாமி சிதம்பரனார், எஸ்.சிதம்பரம், நா.வானமாமலை, க.கைலாசபதி, ப.ஜீவானந்தம் ஆகியோர்களின் கட்டுரைகளும், குயிலன், கே.சி.எஸ்.அருணாசலம், திருச்சிற்றம்பலக் கவிராயர் போன்றவர்களின் கவிதைகளும், தி.க.சி.யின் ஓரங்க நாடகமும், புத்தக விமர்சனமும், திரை விமர்சனமும் இவ்விதழிலே இடம்பெற்றிருந்தன.

தமிழ் சிந்தனையை வளப்படுத்தியவர்

அறுபதாண்டுகளுக்கும் அதிகமாக தமிழ் இலக்கியத்தையும், தமிழ்ச்சமூகத்தையும், தமிழ்ச் சிந்தனையையும் வளப்படுத்திய மாமனிதர்களில் ஒருவர் ரகுநாதன். மக்கள் சார்ந்து சிந்தித்த பெருமகன் அவர். பணத்துக்கோ, பதவிக்கோ, புகழுக்கோ ஆசைப்படாமல் மக்கள் தொண்டு என்ற திசையில் வலுவாகச் செயல்பட்டவர். எதற்கும் அஞ்சாதவர். யாருக்கும் பணியாதவர். தன் மனதில் சரி என்று பட்டதைச் சொல்வதற்கு ஒருபோதும் தயங்காதவர். 20-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்கும் ஒரு பெருஞ்சிகரம் அவர். நவீனத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ரகுநாதன் ஒரு முன்னோடி.

புதுமைப்பித்தனால் கொண்டாடப்பட்ட அற்புதமான சிறுகதையாளர் ரகுநாதன். புதுமைப்பித்தன் என்னும் எதார்த்தவாதியை தமிழ் இலக்கிய உலகில் நிலை நிறுத்தி எங்கும் பரவவிட்டவர்.

நவீனத்துவச் சாயல் கொண்ட புயல். முதலிரவு, கன்னிகா என பாலியல் சிக்கல்களின் உளவியல் முடிச்சுகளுக்குள் விடைதேடிக் கொண்டிருந்தவர்.  4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தவர்.

தனது இறுதி காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் நாள் ரகுநாதன் காலமானார்.

உதவி:
தொ.மு.சி.ரகுநாதன் வரலாறு முன்னுரையில் இருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *