பேராசிரியர் சாய்பாபா

சிறையில் பேராசிரியர் சாய்பாபாவிற்கு மறுக்கப்படும் மருந்துகள்! உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

ஆயுள் தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவிற்கு கடந்த ஒரு மாத காலமாக ஆடைகள், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் தர சிறைச்சாலை மறுத்து வருவதாகக் கூறி வரும் அக்டோபர் 21 முதல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

யார் இந்த பேராசிரியர் சாய்பாபா?

பேராசிரியர் சாய்பாபா போலியாவால் பாதிக்கப்பட்டு 90% சதவீதம் உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர். சக்கர நாற்காலியின் உதவியுடன் மட்டுமே வாழ்ந்து வருபவர். மேலும் உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல்நிலை சிக்கல்களைக் கொண்டவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். 

கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள  நீதிமன்ற அமர்வு சாய்பாபா மற்றும் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உட்பட நான்கு பேரை மாவோயிச அமைப்பினருடன் தொடர்புள்ளவர்கள் என்றும் மற்றும் “நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பது” போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அறிவித்து தண்டனை வழங்கியது.

அவரது மனைவி சிறை நிர்வாகம் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு

’தி இந்து’ செய்தி நாளிதழுக்கு சாய்பாபாவின் மனைவி வசந்தகுமாரி அளித்த பேட்டியில் தனது கணவருக்கு தேவையான மாத்திரைகள், துணிகள் மற்றும் படிப்பதற்கு தேவையான புத்தங்கங்கள் தர மறுப்பதாகக் கூறியுள்ளார். “கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாய்பாபாவுக்கு அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவருக்கு நான் அனுப்பிய எந்த கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை அனுமதிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

சாய்பாபா சிறையில் அனுபவிக்கும் இன்னல்கள் மற்றும் “நியாயமற்ற கட்டுப்பாடுகள்” குறித்து மகாராஷ்டிரா மாநில சிறைத்துறை கூடுதல் இயக்குனர் சுனில் ராமானாந்த் மற்றும் நாக்பூர் சிறைத்துறை  கண்காணிப்பாளர் அனுப்குமார் கும்ரே ஆகியோருக்கு சாய்பாபாவின் மனைவி வசந்த குமாரி கடிதம் எழுதியுள்ளார். 

“சில சமயங்களில் அவரது வழக்கறிஞர் கொடுத்து அனுப்பும் மருந்துகள் முழுமையாக அவருக்கு வழங்கப்படுவதில்லை. அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன, மேலும் அவரது உயிரைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள வேண்டும்” என டெலிகிராப் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வசந்த குமாரி கூறினார்.

சாய்பாபாவின் வழக்கறிஞர்

சாய்பாபாவிற்கு சிறையில் தொடர்ச்சியாக மருந்துகள் மற்றும் ஆடைகளை வழங்கி வரும் வழக்கறிஞர் ஆகாஷ் சாரோத் கூறியது, “கடந்த மாதம் நான் சாய்பாபா அவர்களுக்கு வழங்கிய சட்டை, உள்ளாடை, மருந்துகள், 4 புத்தகங்கள், மற்றும் 2 குறிப்பேடு ஆகியவை சிறையில் கொடுக்கப்பட்டது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் எந்தவித காரணங்களையும் கூறாமல் அந்த பொருட்களைப் பெற மறுத்துவிட்டனர். மீண்டும் 2 வாரங்களுக்கு முன்பு சிறைக்கு சென்றிருந்தேன். அப்பொழுதும் கூட நான் எடுத்துச் சென்ற பொருட்களை வாங்க மறுத்துவிட்டனர். அக்டோபர் 21-க்குள் மீண்டும் சிறைக்கு செல்ல முயற்சிப்பேன்” என்றார்.

நாக்பூர் சிறை அதிகாரிகள்

நாக்பூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் அனுப்குமார் கும்ரே இந்து செய்தி நாளேட்டில் ”பேராசிரியர் சாய்பாபா உண்ணவிரதம் இருக்க இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மையில்லை” என தெரிவித்துள்ளார். கொரோனா  நோய் தொற்று பரவல் காரணமாக செய்தித்தாள் பெறுவதை மார்ச் மாதம் முதல் நிறுத்திவிட்டோம் என்றும், அதைத் தவிர புத்தங்கங்கள் மற்றும் கடிதங்கள் போன்றவை முழுமையான சோதனைக்குப் பிறகு ‘சரி’ எது என்பதை முடிவு செய்து அவருக்கு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

‘சரி’ என்பதற்கான விளக்கம் என்ன என்பது குறித்து கேட்டபோது கண்காணிப்பாளர் அனுப்குமார் கும்ரே, “நிர்வாகம் (எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மற்றும் சிறை அதிகாரிகள்) புத்தகங்களை சரிபார்த்து “நல்லவை” எது என முடிவு செய்கிறது, காந்தியடிகள் குறித்தான புத்தகங்கள், சுதந்திர போராளிகள் மற்றும் புராணக் கதைகள் பொதுவாக அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பத்திரிகை அல்லது வேறு எந்த வாசிப்பு விஷயமும் சிறைவாசிக்கு ‘சரியானதாக’ இருக்க வேண்டும். துணிகளைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்தவொரு வெளி ஆடைகளையும் சிறைக்குள் அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

உடல்நலன் குன்றிய தாயை பார்க்க மறுக்கப்பட்ட பிணை

நோய்வாய்ப்பட்ட பேராசிரியர் சமீபத்தில் மருத்துவ காரணங்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை ஹைதராபாத்தில் சந்திப்பதற்கு ஜாமீன் கோரி சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது தாய் இறப்பதற்கு 4 நாட்கள் முன்பாக மும்பை உயர்நீதிமன்றம் அவரின் ஜாமின் மனுவை நிராகரித்திருந்தது.

பேராசிரியர் சாய்பாபா சல்வா ஜூதும் எனும் சட்டவிரோதமான படைக்கு எதிராகவும், பசுமை வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பரப்புரைகளை மேற்கொண்டவர் சாய்பாபா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *