மாரிதாஸ் எனும் மதுரையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நபர் யூடியூப் தளத்தில் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் மதவாதம் சார்ந்த காணொளிகளை பதிவிட்டு வருகிறார். அவர் தொடர்ச்சியாக பல்வேறு காணொளிகள் மூலம் பொய்யைப் பரப்பி வருவதாக அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்துவதற்கு இவர் வேலை செய்வதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் துவங்கிய போது, அதற்கு இசுலாமிய அமைப்புகள் தான் காரணம் என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தில் அவர்கள் இந்த வேலையை செய்வது போலவும் சித்தரித்து ஒரு காணொளியினைப் பேசி வெளியிட்டார். இதனைக் கண்டித்து மாரிதாஸ் மதக் கலவரம் உருவாக்க முயல்வதாகக் கூறி இசுலாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் புகார் அளித்தனர்.
அடுத்ததாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டதற்கு திமுக-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
மேலும் மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை, மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாரிதாஸ் மீது புகார் அளித்திருந்தார்கள்.
தற்போது விவசாய சங்கத்தினரும், மருத்துவர்கள் சங்கத்தினரும் மாரிதாசைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளனர். இதுவரையில் மாரிதாஸ் கைது செய்யப்படாத நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.
அரசு மருத்துவர்களை தரக்குறைவாக கொச்சைப்படுத்திப் பேசி, மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிக்கை
“இன்றைக்கு யூடியூப் வாயிலாக மாரிதாஸ் என்பவர் தமிழ்நாடு அரசு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களை மோசமான முறையில் மற்றும் தரக்குறைவான வார்த்தையில் விமர்சித்துள்ளார். இம்மாதிரியான பேச்சுக்களை புறம்தள்ளி மக்கள் நலம் காக்க எங்கள் பணி தொடர்ந்தாலும், இத்தவறான பேச்சு அனைவரின் மத்தியிலும் வருத்தத்தையும், மக்கள் மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
கோவிட் ஒழிப்புப் பணியில் ஓய்வின்றி பணியாற்றும் 18000 மருத்துவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சார்பாக அரசு டாக்டர்கள் சங்கம் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு அவதூறாக, தவறாக பேசிய மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, நாட்டில் விவசாயிகள்தான் தண்ணீரை கொள்ளையடிப்பதாகவும், பெப்சி, கொகொ கோலா போன்ற நிறுவனங்கள் தண்ணீரை கொள்ளையடிப்பதில்லை என்றும் கூறி விவசாயிகள் மீது அவதூறு பரப்பி காணொளி ஒன்றினை வெளியிட்டார். அதில் பெப்சி, கோலா நிறுவனத்தினர் இங்கிருந்து தண்ணீரை உறிஞ்சி அவர்களா குடிக்கிறார்கள், அத்தண்ணீரை நம்மிடம்தானே விற்கிறார்கள் என்றும் மிகவும் அதிபுத்திசாலித்தானமாக பேசினார். இதற்கு காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன் மாரிதாசை கைது செய்ய வேண்டும் என்றும் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் அளித்துள்ள புகார்
“Youtube சேனல் நடத்தும் மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளத்தில்(Facebook) விவசாயிகளை கேவலமாகவும், அசிங்கமாகவும் பேசியும், விவசாயத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவாணிக்கு வழிவகுக்கும் அரிசி ஏற்றுமதியையும் அவதூறாகப் பேசியுள்ளார். பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை நிறுத்த சொல்வதும், பம்ப்செட் மூலம் பயன்படுத்தும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்த சொல்வதும், விவசாயத்தை அழிக்க இவர் கூறும் அபத்தமான சிந்தனையாகும். உழன்றும், உழவே தலை என்று பண்டைய மரபு தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் ”ஏமாற்று தொழில்” என்றும், மானியம் வாங்குவதற்காக செய்கிறார்கள் என்றும் கேவலப்படுத்தியுள்ளார். தான் உற்பத்தி செய்யும் நெல்லை உலக மக்களின் பசி தீர்க்கும் வள்ளலாக இருக்கும் விவசாயிகளையும், விவசாயத்தையும் இழிவுபடுத்தும் மாரிதாசை கைது செய்து, அவர் வெளியிட்ட விவசாயிகளுக்கு எதிரான வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படியாக மாரிதாசைக் கைது செய்ய வேண்டுமென்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வெறும் பொய்யான செய்திகளைப் பரப்பி மதக் கலவரங்களை தூண்டி வருவதாக அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் நியூஸ்18 தொலைக்காட்சி மாரிதாசின் மீது போலியாக மின்னஞ்சல் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்தது. அந்த வழக்கினை விசாரித்த உயர்நீதி மன்றம் மாரிதாசின் நியூஸ் 18 குறித்த பொய் வீடியோவினை நீக்க உத்தரவிட்டுள்ளது.
பொய் செய்திகள் இன்றைக்கு மிகப் பெரும் ஆபத்தான ஆயுதங்களாக இருக்கின்றன. பொய் செய்திகள் மக்களைக் குழப்பி சமூகத்தில் வன்முறையை உருவாக்குகின்றன. மாரிதாஸ் உள்ளிட்ட பொய் செய்திகள் பரப்புகிற நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எவ்வளவு பெரிய கட்சிப் பின்புலங்கள் இருந்தாலும், அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.