ஜூலை 31, 1995 அன்றுதான் இந்தியாவில் முதன்முதலாக செல்போன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. பேசியவர் அன்றைய மேற்கு வங்காள முதல்வர் ஜோதி பாசு. மறுமுனையில் அந்த அழைப்பினை எடுத்தது இந்தியாவின் ஒன்றிய தொலைதொடர்புத் துறை அமைச்சர் சுக் ராம்.
மோடி- டெல்ஸ்ட்ரா (Modi-Telstra) என்ற நிறுவனம்தான் இந்தியாவின் முதல் மொபைல் நிறுவனமாகும். இது இந்தியாவின் பி.கே மோடி குழுமமும், ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனமும் இணைந்த குழுமம் ஆகும். பின்னால் அந்த நிறுவனத்தின் பெயர் ஸ்பைஸ் (Spice) என்று மாற்றப்பட்டது.
1994-ம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்கள் மோடி டெல்ஸ்ட்ரா நிறுவனத்தின் தலைவரான பி.கே.மோடியை கொல்கத்தாவில் உள்ள தன் அலுவலகத்திற்கு அழைத்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, இந்தியாவில் மொபைல் பயன்பாட்டுக்கு வரக்கூடிய முதல் மாநகரமாக கொல்கத்தா இருக்கவேண்டும் என்று தெரிவித்தார். அதை எவரும் எதிர்பார்க்கவில்லை. பின்னர் பி.கே.மோடி ஜூலை 31, 1995 என்ற தேதியை அவருக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெல்ஸ்ட்ரா நிறுவனத்துடன் எந்த தொழில்நுட்பம் இந்தியாவிற்கு உகந்தது என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்த நோக்கியா நிறுவனத்தின் தொழில்நுட்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
9 மாத காலத்தில் தொலைதொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டு நோக்கியா மொபைல் போன்களுக்கு நடுவில் இந்தியாவின் முதல் அலைபேசி அழைப்பு நிகழ்த்தப்பட்டது. அதுவரையில் கம்பி இணைப்புகளின் வழியாக மட்டுமே பேசப்பட்டுக் கொண்டிருந்த இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரும் திருப்புமுனையாக ஜூலை 31, 1995 என்ற நாள் அமைந்தது.
ஆரம்பகால செல்போன் அழைப்புகளின் விலை என்பது இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டிற்குமே ஒரு நிமிடத்திற்கு 8.40 ரூபாயாக இருந்திருக்கிறது. அதுவும் Peak Hours ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்திற்கு 16.80 ரூபாய் வரை கட்டணம் இருந்திருகிறது. அப்போது செல்போனின் விலை என்பது 40,000 ரூபாயாக இருந்தது. அன்றைய 40,000 ரூபாய் என்பதை இன்றைய விலை மதிப்போடு ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் வரையில் வரும்.
அதன்பிறகு இந்தியாவின் தொலைதொடர்புத் துறையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிறகு எம்.பி3 பாடல்கள், கேமரா, இண்டர்நெட் என பரிணாமம் அடைந்து இன்று 5G தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் அதிக செல்போன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உருமாறியிருக்கிறது.
இவை அனைத்திற்கும் துவக்கப் புள்ளி கொல்கத்தாவில் 1995-லிருந்து துவங்குகிறது. இந்தியாவில் செல்போன் சேவையை பயன்படுத்திய முதல் மாநகரம் என்ற பெருமையை கொல்கத்தா பெற்றது.
வரலாற்றில் ஒவ்வொரு வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பின்னணியில் ஒரு திருப்புமுனை இருக்கிறது. அப்படி பார்க்கையில் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்சியில் ஜூலை 31 என்ற தேதி ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது.